துருக்கி படை பாலஸ்தீனம் வந்ததாகச் சொல்லப்படும் ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

உலகம் சமூக ஊடகம்

காஸா மக்களை பாதுகாக்க துருக்கி ராணுவ உதவி செய்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

துருக்கி ராணுவத்தின் 9 படங்கள் பகிரப்பட்டுள்ளன. சில படங்களில் துருக்கி நாட்டு கொடி உள்ளது. சில படங்களில் எதுவும் இல்லை. ஒரு படத்தில் உள்ள வீரர்களைப் பார்க்கும்போது அமெரிக்கர்களைப் போல தெரிந்தனர். 

நிலைத் தகவலில், “காஸா மக்களை பாதுகாக்க, துருக்கி படை பலஸ்தீன் மண்ணில் இறங்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Fareed Farees என்பவர் 2019 நவம்பர் 26ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இஸ்ரேல் – பாலஸ்தீனம் காஸா பிரச்னை பல ஆண்டுகளாக நீடிக்கிறது. இரு தரப்பும் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றன. இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதல்களில் அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், காஸாவுக்கு ராணுவ உதவிகளை துருக்கி செய்துள்ளது என்று ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. துருக்கி தேசிய கொடியுடன் கூடிய படங்கள் பகிரப்பட்டுள்ளன. இந்த தகவல் உண்மையா என்று தேடினோம்.

Search Link

நம்முடைய தேடலில் துருக்கி பாலஸ்தீனத்துக்கு ராணுவ உதவி வழங்கியதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் இஸ்ரேல் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் துருக்கி, பாலஸ்தீன மக்களுக்கு அவசர கால மருத்துவ, உணவு உதவிகளை செய்து வரும் செய்திகள் மட்டுமே கிடைத்தன.

சரி பதிவில் உள்ள படங்களில் எப்போது எடுக்கப்பட்டது என்று தேடினோம். முதல் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அவர்கள் காஸாவுக்கு வந்தார்கள் என்று இல்லை. சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள மன்பிஜ் நகரில் துருக்கி ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்று இருந்தது. இந்த படம் 2018ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி ஏ.எஃப்.பி-யால் எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது படம், சிரியாவுக்குள் நுழையும் துருக்கி படையினருக்கு துருக்கி மக்கள் உற்சாகத்துடன் வழியனுப்பிவைத்த போது எடுத்தது என்று தெரிந்தது. இந்த படத்தையும் ஏ.எஃபி.பி எடுத்துள்ளது. அல்ஜஸிரா இதை 2019 அக்டோபர் 10ம் தேதி பயன்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் கொடியை துருக்கி வீரர் மிதிக்கும் படத்தைத் தேடினோம். அதை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருந்தனர். அதில், துருக்கியின் கிழக்குப் பகுதியில் பயங்கரவாதிகள் இருந்த வீட்டை துருக்கி ராணுவத்தினர் தாக்கினர். அங்கு இஸ்ரேல் நாட்டு தேசிய கொடி இருந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். இது 2018 ஜூன் மாதம் பதிவிடப்பட்டு இருந்தது.

குழந்தைக்கு ராணுவ வீரர் முத்தம் தரும் படத்தை ஆய்வு செய்தோம். அது சிரியாவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு இருந்தனர்.

அனைத்திலும் கொடூரம் குழந்தைகளை மீட்கும் இந்த படம்தான். படத்தில் உள்ளவர்கள் துருக்கி ராணுவத்தினரும் இல்லை, குழந்தைகள் காஸாவைச் சார்ந்த குழந்தைகளும் இல்லை. 1991ம் ஆண்டு வடக்கு ஈராக்கில் அமெரிக்கா மீட்புப் பணியின்போது எடுக்கப்பட்ட படம் என்று அதை குறிப்பிட்டுள்ளனர்.

ஆறாவது மற்றும் எட்டாவது படம் சிரியா குழந்தைக்கு துருக்கி ராணுவ வீரர் உணவு அளிக்கிறார். இணையதளம் ஒன்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த படத்தை பதிவேற்றம் செய்துள்ளது.

சிரியா உள்நாட்டுப் போரில் உதவி வரும் ரஷ்ய ராணுவ வீரர்களுடன் சிரியா குழந்தைகள் என்று 2017 நவம்பர் 27ம் தேதி இந்த படத்துடன் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

ஒன்பதாவது படம் துருக்கி ராணுவத்துக்கும் குர்திஷ் படையினருக்கும் இடையே நடந்த கடுமையான தாக்குதலின் போது எடுத்த படம் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த படம் 2018ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி ஒரு இணையதளம் பயன்படுத்தியுள்ளது.

நம்முடைய ஆய்வில்,

காஸாவுக்கு ராணுவத்தை அனுப்புவதாகத் துருக்கி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஸாவில் உதவி செய்யும் துருக்கி ராணுவத்தினர் என்று பகிரப்படும் ஒன்பது படங்களின் நம்பகத்தன்மை பரிசோதிக்கப்பட்டு இவை எதுவும் காஸாவில் எடுக்கப்பட்டது இல்லை என்பதும், காஸாவுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த படங்களுள் ஒன்று அமெரிக்க ராணுவத்தின் படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், காஸாவுக்கு ராணுவ உதவிகள் வழங்க பாலஸ்தீன மண்ணில் துருக்கி இறங்கியது என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:துருக்கி படை பாலஸ்தீனம் வந்ததாகச் சொல்லப்படும் ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •