
‘’சுடுகாட்டில் புதைக்கப்பட்ட மனித உடலை தோண்டி தின்னும் விலங்கு,’’ எனும் தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு வீடியோ பதிவை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Video Link |
என்பவர் இந்த ஃபேஸ்புக் வீடியோ பதிவை பகிர்ந்துள்ளார். இதில், பேய் போல அலறும் சத்தத்துடன் கூடிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆமை போன்ற விலங்கு ஒன்றை ஒருவர் கையில் பிடித்தபடி நிற்க, ‘இது சுடுகாட்டில் புதைக்கப்படும் மனித உடல் உள்பட அனைத்தையும் தோண்டி தின்னும் விலங்கு, கனடாவில் பிடிப்பட்டது,’ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோவில் கூறப்பட்டுள்ள பெயரின் அடிப்படையில் இப்படி ஏதேனும் விலங்கு உள்ளதா என கூகுளில் தகவல் தேடினோம். அப்போது Karan Bijju மற்றும் Qaran Bijju என்ற பெயரில் காணப்படும் விலங்குகள் பற்றிய விவரம் கிடைத்தது. இவற்றில் நம்மூரில் பொதுவாகக் காணப்படும் எறும்புத் தின்னி தொடங்கி, பல வகை விலங்குகள் உள்ளன. இவை பெரும்பாலும் வளைகளில் வசிப்பவை, குழி தோண்டி தங்களது இரையை கண்டுபிடித்து உண்ணக் கூடியவை. ஆனால், இவை நாம் தேடும் ஃபேஸ்புக் பதிவில் இடம்பெற்றுள்ள விலங்கு கிடையாது.

நாம் ஆய்வு செய்யும் வீடியோ பதிவில் உள்ள விலங்கு சத்தம் எதுவும் போடவில்லை. ஆனால், அதற்கு பின்னணி இசையை சேர்த்து, பேய் போல கத்துவதாகக் கூறி தகவல் பரப்பியுள்ளனர். இதில் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது இதுபற்றி யூ டியுப்பில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றின் விவரம் கிடைத்தது.
மேற்கண்ட யூ டியுப் வீடியோவிலும் இது மனிதனைப் போல கத்தும் பேய் விலங்கு என்றும், சவூதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்டது எனவும் கூறியுள்ளனர்.

ஒருவர் இது கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், மற்றொருவர் இது சவூதியில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் கூறுவதால் உண்மையாகவே இதில் உள்ள விலங்கு எது என நாம் மீண்டும் விவரம் தேடினோம்.
அப்போது, மேலே உள்ள யூ டியுப் வீடியோவின் கமெண்டிலேயே ஒருவர் இதுதொடர்பான உண்மை விளக்கம் அளித்திருந்தார். அதை வைத்து தேடியபோது, இதில் காணப்படும் விசித்திர விலங்கின் பெயர் Alligator Snapping Turtle என தெரியவந்தது. இவை அமெரிக்காவில் காணப்படும் நன்னீர் விலங்கு வகையை சேர்ந்ததாகும். இது ஒன்றும் அரிதான அல்லது ஆபத்தான விலங்கு அல்ல. இது ஆமை வகை உயிரினமாகும்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், அமெரிக்காவில் காணப்படும் ஆமையின் வீடியோவை பகிர்ந்து, அது கனடாவில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை மனித உடலை தின்னும் விலங்கு என்று வதந்தி பரப்பியதாக தெரியவருகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:புதைக்கப்பட்ட மனித உடலை தோண்டி தின்னும் விலங்கு இதுவா?
Fact Check By: Pankaj IyerResult: False
