சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரானாரா இயக்குநர் சங்கர்?- நியூஸ் 7 தமிழ் செய்தியால் குழப்பம்

சமூக ஊடகம் | Social சினிமா | Cinema தமிழ்நாடு | Tamilnadu

இயக்குநர் சங்கர் சி.பி.ஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார் என்று நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived link 1Article LinkArchived link 2

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து: சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் இயக்குநர் ஷங்கர்! என்று நியூஸ்7 தமிழ் வெளியிட்ட செய்தி ஒன்று ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

நியூஸ்7 தமிழ் இணையளத்தில் வெளியான செய்தியை News7Tamil ஃபேஸ்புக் பக்கத்தில் 27 பிப்ரவரி 2020 அன்று வெளியிட்டுள்ளனர். 

உண்மை அறிவோம்:

இந்தியன் 2 படப்பிடிப்பின்போது கிரேன் விழுந்து மூன்று பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு (CENTRAL CRIME BRANCH (CCB)) மாற்றப்படுவதாக சென்னை போலீஸ் கமிஷனர் அறிவித்தார்.

அப்படி இருக்கும்போது இயக்குநர் ஷங்கர் சி.பி.ஐ அலுவலகத்துக்கு விசாரணைக்காக சென்றார் என்று நியூஸ் 7 செய்தி வெளியிட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது. சென்னையில் சி.பி.ஐ அலுவலகம், சிசிபி அலுவலகம் வெவ்வேறு இடங்களில் உள்ள நிலையில், சி.பி.ஐ விசாரணை என்ற செய்தி உண்மைதானா என்று ஆய்வு செய்தோம்.

முதலில் அந்த செய்தியைப் படித்துப் பார்த்தோம். தலைப்பில் சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரானார் இயக்குநர் ஷங்கர் என்று இருந்தது. லீட் பகுதியில், “இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக, சென்னை மத்திய குற்றப் புலனாய்வு போலீசாரின் விசாரணைக்கு இயக்குநர் ஷங்கர் ஆஜரானார்” என்று இருந்தது. 

மத்திய குற்றப்பிரிவு என்று குறிப்பிடுவதற்கு பதில், மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு என்று மாற்றி குறிப்பிட்டிருந்தனர். மத்திய குற்றப் புலனாய்வு என்பதை சி.பி.ஐ என்று நினைத்து தலைப்பு வைத்திருக்கலாம் என்று தெரிந்தது.

தொடர்ந்து செய்தியை படித்தபோது, எல்லா இடத்திலும் மத்திய குற்றப் புலனாய்வு அல்லது சிசிபி போலீசார் என்று வர வேண்டிய இடத்தில் எல்லாம் சி.பி.ஐ என்றே இருந்தது. “இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துவரும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் உதவி இயக்குநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை  சிபிஐ அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர். 

படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு, நடிகர் கமல் ஹாசன் மற்றும் ஷங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து இயக்குநர் ஷங்கர், சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விபத்து தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரணை நடத்தினர்” என்று செய்தி வெளியிட்டிருந்தனர்.

youtube.comArchived Link 1
dinakaran.comArchived Link 2

உண்மையில் இயக்குநர் ஷங்கர் சி.பி.ஐ அலுவலகம் சென்றாரா அல்லது சிசிபி எனப்படும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் சென்றாரா என்று அறிய, இது தொடர்பாக வெளியான மற்ற செய்திகளைப் பார்த்தோம். தந்தி டி.வி வெளியிட்டிருந்த செய்தியில் மத்திய குற்றப்பிரிவில் இயக்குநர் ஷங்கர் ஆஜர் என்று குறிப்பிட்டிருந்தனர். 

தினகரன் நாளிதழ் வெளியிட்டிருந்த செய்தியில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு இயக்குநர் ஷங்கர் ஆஜரானார் என்று குறிப்பிட்டிருந்தனர்.

தொடர்ந்து தேடியபோது டைம்ஸ் ஆஃப் இந்தியா கூட இயக்குநர் ஷங்கரிடம் சி.பி.ஐ. விசாரணை செய்தது என்று குறிப்பிட்டிருந்தனர். இந்தியன் 2 பட விபத்து தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த செய்திகளை எல்லாம் ஆய்வு செய்தோம்.

பிப்ரவரி 27ம் தேதி வெளியான செய்தியில், “இந்தியன் 2 கிரேன் விபத்து சிசிபி-க்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவம் நடந்த இடத்துக்கு சிசிபி அதிகாரிகள் சென்று ஆய்வு நடத்தினர், விபத்து நடந்த இடத்தை சீரமைக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர்” என்று குறிப்பிட்டிருந்தனர். 

timesofindia.indiatimes.comArchived Link

ஆனால், அதே நாளில் வெளியான ஷங்கரிடம் விசாரணை செய்தியில் கிரேன் விபத்து வழக்கு தற்போது சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது என்றும், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ஷங்கரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தனர். மேலும், சென்னை வேப்பேரியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்துக்கு இயக்குநர் ஷங்கர் வந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

timesofindia.indiatimes.comArchived Link


இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது அவர்கள் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணை நடத்தவில்லை, சிசிபி விசாரணை நடத்துகின்றது என்றனர்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில், சென்னை வேப்பேரியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் இயக்குநர் ஷங்கர் ஆஜரானார் என்று குறிப்பிட்டிருந்தனர். சென்னை வேப்பேரியில், போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளது. அங்குதான் சிசிபி அலுவலகமும் உள்ளது. சென்னையில் சி.பி.ஐ அலுவலகம் டி.பி.ஐ அலுவலக வளாகத்தில் உள்ள இ.வி.கே.எஸ்.சம்பத் மாளிகை, நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவன், பெசன்ட் நகரில் உள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலோ, வேப்பேரியிலோ இல்லை.

இதுதொடர்பாக சி.பி.ஐ சென்னை மண்டல அலுவலகங்கள் பட்டியலை அதன் இணைய தளத்தில் இருந்து எடுத்துப் பார்த்தோம். அப்போது மேற்கூறிய மூன்று இடங்களில் இருப்பது உறுதியானது. 

cbi.gov.inArchived Link

இதுதவிர ஷங்கரிடம் விசாரணை நடத்தியது பற்றி சென்னை காவல்துறை எதுவும் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளதா என விவரம் தேடினோம். அப்போது கிடைத்த செய்திக்குறிப்பை கீழே இணைத்துள்ளோம். இதிலும், சிசிபி என்றே குறிப்பிட்டுள்ளனர். சிபிஐ எனக் கூறவில்லை.

Facebook LinkArchived Link

நம்முடைய ஆய்வில்,

இந்தியன் 2 படப்பிடிப்பு கிரேன் விபத்து வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதாக வெளியான செய்திகள் கிடைத்துள்ளன.

மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு இயக்குநர் ஷங்கர் வந்து சென்றது தொடர்பான செய்திகள் கிடைத்துள்ளன.

மத்திய குற்றப்பிரிவு என்பதை ஆங்கிலத்தில் சென்ட்ரல் கிரைம் பிராஞ்ச் (சிசிபி) என்றே அழைக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், இயக்குநர் ஷங்கர் சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜரானார் என்ற செய்தி தவறானது என்றும், சி.பி.ஐ-க்கும் சிசிபி-க்கும் உள்ள குழப்பத்தின் காரணமாக தவறான தலைப்பு மற்றும் செய்தியை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டிருப்பதும் உறுதியாகிறது. இதே தவறை ஆங்கில ஊடகமான டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் செய்திருக்கிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரானாரா இயக்குநர் சங்கர்?- நியூஸ் 7 தமிழ் செய்தியால் குழப்பம்

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False