
‘’தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திமுக ஆட்சியில் அனுமதி தரப்பட்டது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

ஆமை கறி சீமான் என்பவர் ஆகஸ்ட் 14, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என ஸ்டாலின் பேசியதாக நியூஸ் 7 வெளியிட்ட செய்தியை பகிர்ந்து, அதன் கீழே, இந்த திட்டத்தை அனுமதித்து கையெழுத்திட்டதே திமுக ஆட்சியில்தான், என கமெண்ட் பகிர்ந்துள்ளனர். இதனை பகிர்ந்து, திமுக.,தான் இதற்கு காரணம் என்பதாக, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை அறிவோம்:
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திமுக அனுமதி அளித்ததா என்ற பெயரில் தமிழக சட்டமன்றத்தில் சமீபத்தில் காரசார விவாதமே நிகழ்ந்தது. இதுபற்றி புதிய தலைமுறை வெளியிட்ட செய்தியின் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பார்த்தாலே உண்மை புரியும். அதாவது, திமுக கடந்த 2006-11 கால கட்டத்தில் ஆட்சி செய்தபோது, தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் வளம் உள்ளது பற்றி ஆய்வு செய்வதற்கே அனுமதி தரப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த அல்ல என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெளிவாக கூறுகிறார்.
இதுபற்றி செய்தியை படிக்க இங்கே 1 மற்றும் இங்கே 2 கிளிக் செய்யவும்.
இதுதவிர, நாடு முழுவதும் எரிபொருள் துரப்பண பணிகளை மேற்கொள்வதில் மத்திய அரசின் முடிவே இறுதியானதாகும். இதில், மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், மத்திய அரசுதான் திட்டத்திற்கான அனுமதி அளிக்கும் பணிகளை மேற்கொள்ளும். இதில், ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ், எஸ்ஸார் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்திய அளவில் ஹைட்ரோகார்பன் துரப்பண பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இதன்படியே, தமிழகத்திலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு, பின்னர் மத்திய அரசின் வழிகாட்டலில், தற்போது டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் துரப்பண பணிகளை மேற்கொண்டுள்ளன. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம்தான் இதற்கான பணிகளை மேற்கொள்கிறது. இதன் அமைச்சராக தற்போது தர்மேந்திர பிரதான் உள்ளார். இவர் தவிர, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையில் அமைச்சர், இணையமைச்சர் பதவி வகித்த நபர்களின் விவரம் அறிய இங்கே கிளிக் செய்யவும். இதில், திமுக.,வினர் யாரும் கிடையாது. அதேசமயம், 2006-11 காலக்கட்டத்தில் தமிழகத்தில் ஆட்சி நடத்திய திமுக மத்திய அமைச்சரவையிலும் பங்கு வகித்தது. அதை வைத்துக் கொண்டே இதற்கு திமுக.,தான் கையெழுத்திட்டு அனுமதி வழங்கியது எனக் கூற முடியாது.
அதாவது, ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான ஆய்வுப் பணிகளுக்கு மட்டுமே திமுக அரசு அனுமதி அளித்தது. அந்த திட்டத்தை நிறைவேற்றும் பணி, மத்திய அரசு தொடர்பானது. இதில் திமுகவிற்கு முழு பொறுப்பு கிடையாது என்று மு.க.ஸ்டாலினே சட்டமன்றத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவலில், பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திமுக ஆட்சியில் அனுமதி தரப்பட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: Mixture
