வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மிரட்டி கருணாநிதி சமாதியில் வணங்க வைத்தார்களா?

அரசியல் | Politics

‘’வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மிரட்டி கருணாநிதி சமாதியில் வணங்க வைத்தார்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

ஆகஸ்ட் 13, 2019 அன்று இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், புதிய தலைமுறை பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்து, வெளிநாட்டு பயணிகளை மிரட்டி அழைத்து வந்து கருணாநிதி சமாதியில் வணங்க வைத்த திமுக.,வினர் மீது அமெரிக்க எம்பஸியில் புகார் செய்யப்பட்டுள்ளதாக, எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7, 2018 அன்று உயிரிழந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது சமாதியை திமுக.,வினரும், தமிழக மக்களும் மட்டுமின்றி, வெளிநாட்டினரும், பல்வேறு சுற்றுலாப் பயணிகளும் பார்வையிட்டு வருகின்றனர். மெரினா கடற்கரை வரும் பலரும் அப்படியே அங்கு வரிசையாக அமைந்துள்ள அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, கருணாநிதி சமாதி, ஜெயலலிதா சமாதியையும் பார்வையிடுவது வழக்கமான ஒன்று. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால், யாரையும் மிரட்டி திமுக.,வினர் இப்படி செய்ததாக இதுவரை செய்தி வெளியாகவில்லை. மெரினா கடற்கரை வரும் பலரும் அங்குள்ள ஒவ்வொரு சமாதியையும் பார்க்கும்போது, கருணாநிதி சமாதியையும் பார்க்க நேரிடுகிறது. இதன்படி, கருணாநிதி சமாதியை காண வந்த சில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் புகைப்படத்தை பயன்படுத்தி புதிய தலைமுறை பெயரில் போலியான செய்தி தயாரித்து பகிர்ந்துள்ளனர். 

உண்மையில், புதிய தலைமுறை பகிரும் இதுபோன்ற நியூஸ் கார்டில், அதன் லோகோ, தேதி உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக இருக்கும். உதாரணத்திற்கு ஒரு நியூஸ் கார்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இப்படி எந்த ஒரு லோகோ, ஃபான்ட் அடையாளம் எதுவும் நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள புதிய தலைமுறை நியூஸ் கார்டில் இல்லை.

அதாவது, இந்திய தூதரகத்தில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் புகார் எனக் கூறியுள்ளனர். பொதுவாக, வெளிநாடுகளில்தான் இந்திய தூதரகம் இருக்கும். ஆனால், கருணாநிதி சமாதி இருப்பதோ சென்னையில். அங்கே உள்ளதோ அமெரிக்க தூதரகம் போன்ற வெளிநாடுகளின் தூதரக அலுவலகங்கள்தான். இந்தியாவிற்குள்ளேயே எப்படி இந்திய தூதரகம் செயல்படும் என்ற பொது அறிவு கூட இல்லாமல், இந்த போலியான நியூஸ் கார்டை தயாரித்து, புதிய தலைமுறை பெயரில் சிலர் பகிர்ந்துள்ளனர்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், இது போலியான செய்தி என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தி, புதிய தலைமுறை பெயரில் உலவும் போலியான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய போலிச் செய்திகளை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மிரட்டி கருணாநிதி சமாதியில் வணங்க வைத்தார்களா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False