
தி.மு.க கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் விலகுவதாக தொல் திருமாவளவன் அறிவிப்பு என்று சமூக ஊடகங்களில் ஒரு போலியான நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற திருமாவளவன் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறோம் கனத்த மன வேதனையுடன் திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறோம் – விசிக தலைவர் திருமாவளவன்” என்று இருந்தது.
இந்த பதிவை சுரேஷ் காங்கேயன் என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 செப்டம்பர் 29ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சேலத்தில் அனுமதியின்றி கொடிக் கம்பம் நட வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதன் காரணமாக தி.மு.க-வுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுவிட்டது போன்று சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இந்த சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

இந்த நியூஸ் கார்டைப் பார்க்கும் போது அசலான நியூஸ் கார்டு போல இல்லை. மேலும், தொல் திருமாவளவன் அப்படி அறிவித்ததாக எந்த ஒரு செய்தியும் வெளியாகாத சூழலில், விஷமத்தனமாக இந்த நியூஸ் கார்டை போலியாக உருவாக்கியிருக்கலாம் என்று தெரிகிறது. இதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் செப்டம்பர் 25, 2021 என்று தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, குறிப்பிட்ட தேதியில் புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டுகளைப் பார்த்தோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டு கிடைத்தது. ஆனால் அதில், “காவல்துறையின் போக்கைக் கண்டித்து செப்டம்பர் 29ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம். சேலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடியை ஏற்றிய 15 பேர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் – விசிக தலைவர் திருமாவளவன்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை விஷமத்தனமாக எடிட் செய்திருப்பது தெரிந்தது. இதை உறுதி செய்துகொள்ள புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

அசல் பதிவைக் காண: Facebook
தி.மு.க கூட்டணி தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் சமீபத்தில் கருத்து ஏதும் தெரிவித்துள்ளாரா என்று பார்த்தோம். கூட்டணிக்கு எதிராக அவர் பேசியதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று கிடைத்தது.
அது கொடியேற்றத் தடை தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் தள்ளி வைக்கப்படுவது தொடர்பான அறிவிப்பாகும். அதில், “மோரூர்_கொடியேற்றத்_தடை: செப்-30 சேலத்திலும் அக்-01 மதுரையிலும் நடைபெறவிருந்த விசிக ஆர்ப்பாட்டங்கள் தள்ளி வைக்கப்படுகின்றன. தனது இரண்டு நாள் சுற்றுப்பயணம் முடித்து சென்னைக்குத் திரும்பியதும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் பேச அழைத்திருப்பதால் இந்த முடிவு மேற்கொள்ளப்படுகிறது” என்று கூறியிருந்தார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், தி.மு.க கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியேறுகிறது” என்று திருமாவளவன் கூறியதாகப் பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
திமுக கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் வெளியேறுகிறது என்று திருமாவளவன் அறிவித்ததாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தி.மு.க கூட்டணியில் இருந்து விலகுவதாக திருமாவளவன் அறிவித்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False
