“சேலம் வழியே எட்டு வழிச் சாலை அமைத்தே தீர வேண்டும்” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து தி.மு.க எம்.பி செந்தில்குமார் மனு அளித்ததாகவும் மு.க.ஸ்டாலின் நிலைப்பாட்டுக்கு எதிராக அவர் செயல்படுவது போலவும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Darmapuri MP 2.png
Facebook LinkArchived Link

இரண்டு பிரேக்கிங் நியூஸ் கார்டுகளை ஒன்று சேர்த்துப் பதிவிட்டுள்ளனர். முதலில் உள்ள பிரேக்கிங் கார்டில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் தருமபுரி எம்.பி செந்தில் குமார் கோரிக்கை மனு அளிக்கும் புகைப்படத்துடன் கூடிய தகவல் உள்ளது. அதில், "சேலம் வழியே எட்டு வழிச் சாலை அமைத்தே ஆக வேண்டும் - நிதின் கட்கரியை நேரில் சந்தித்து தி.மு.க எம்.பி செந்தில் குமார் மனு" என்று உள்ளது.

அதன் கீழ் இணைக்கப்பட்டுள்ள மற்றொரு பிரேக்கிங் கார்டில் மு.க.ஸ்டாலின் படம் உள்ளது. அதில், "சேலம் வழியே எட்டு வழிச் சாலை என்பது அப்பட்டமான அராஜகப் போக்கு, கடும் கண்டனத்திற்குரியது" என்று உள்ளது.

இந்த பதிவை, பள்ளியாடி பிஜு அஇஅதிமுக என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 செப்டம்பர் 25ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சேலம் வழியாக எட்டு வழிச் சாலை என்று முழுமையாக எதையும் குறிப்பிடாமல் இந்த பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையின் பகுதியை வைத்துள்ளனர். இதன் மூலம், சென்னை - சேலம் இடையே புதிதாக அமைக்கத் திட்டமிடப்பட்ட எட்டு வழிச் சாலையை அமைத்தே தீர வேண்டும் என்று தருமபுரி எம்.பி செந்தில் குமார் நிதின்கட்கரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று அனைவரும் எண்ணும் வகையில் பதிவிட்டுள்ளனர்.

சேலம் நகரத்தை இணைக்கும் வகையில் சென்னை படப்பையில் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி செலவில் புதிதாக பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதன் மூலம் தற்போது 340 கி.மீ தூரமாக உள்ள தொலைவு 274 கி.மீ ஆக குறையும் என்று கூறப்பட்டது. கிட்டத்தட்ட 60 கி.மீ தூரத்தை குறைக்க இந்த சாலை அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த சாலை அமைக்க 5750 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டி இருந்ததாலும் பல்லாயிரக் கணக்கான மரங்கள் அழிக்கப்படும் என்பதாலும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சாலை திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், நிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

VikatanArchived Link

இந்த சாலைத் திட்டத்தை எதிர்த்து தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்தன. தி.மு.க-வை மையப்படுத்தி சமூக ஊடகங்களில் தொடர்ந்து பல பதிவுகள் வெளியாகி வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு, நாடாளுமன்றத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சென்னை – சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை அமல்படுத்த கோரி பேசியதாகவும் அவரைப் பார்த்து நிதின் கட்கரி சிரித்ததாகவும் பதிவுகள் வெளியாகின. அது தவறானது என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்தது.

இந்த நிலையில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் சென்னை – சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியது போன்று பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.

சென்னை சேலம் எட்டு வழிச் சாலையை அமைக்க செந்தில் குமார் எம்.பி வலியுறுத்தினாரா என்று ஆய்வு மேற்கொண்டோம். தன்னுடைய அனைத்து பொது நிகழ்வுகளையும் செந்தில் குமார் தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் வெளியிடும் பழக்கம் கொண்டவர். அதனால், அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தோம். அதில், நிதின் கட்கரியிடம் கோரிக்கை மனு அளிக்கும் புகைப்படம் இருந்தது. எதற்காக அந்த கோரிக்கை மனு அளிக்கப்பட்டது என்று விளக்கமும் இருந்தது.

Darmapuri MP 3.png
Facebook LinkArchived Link

செப்டம்பர் 23ம் தேதி வெளியிடப்பட்ட அந்த பதிவில், “கிருஷ்ணகிரி-தர்மபுரி- தொப்பூர் சாலை விரிவாக்கம், தொப்பூர் -பவானி சாலை விரிவாக்கம், குண்டல்பட்டி, காரிமங்கலம் மற்றும் பாளையம்புதுரில் மேம்பாலம் அமைக்க வேண்டும், தேசிய நெடுஞ்சாலையின் மையத்தில் உள்ள தடுப்புகளில் மரம் நடுதல் தொடர்பாக சாலை போக்குவரத்து அமைச்சர் திரு நிதின் அவர்களை இன்று சந்தித்து அவருடன் ஆலோசித்த போது. செய்வதாக உறுதி அளித்தார்” என்று இருந்தது. இதன் மூலம் அவர் சென்னை – சேலம் இடையே எட்டு வழிச் சாலை அமைக்க வலியுறுத்தவில்லை என்பது உறுதியானது.

ஒருவேளை, தருமபுரி –சேலம் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து ஏதும் அறிக்கை வெளியிட்டுள்ளாரா என்று தேடினோம். நம்முடைய தேடலில், 2018ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை கிடைத்தது.

Hindu TamilArchived Link

அதில், “திட்டத்திற்கு எதிராக நியாயமான கருத்துகளைச் சொல்லும் மக்களை கைது செய்வதையும் மிரட்டுவதையும் நிறுத்தாதது ஏன்? தமிழக அரசின் இந்த அப்பட்டமான அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ஐந்து மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் மிக முக்கியம் என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இனியாவது உணர முன்வரவேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது தெரிந்தது.

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள், எட்டு வழிச் சாலைகளே அமைக்கக் கூடாது என்று தி.மு.க எப்போதாவது கூறியதா என்று தேடினோம். சென்னை - சேலம் இடையே நிலத்தைக் கையகப்படுத்தி, விளைநிலங்களை அழித்து அமைக்கப்பட இருந்த 8 வழி பசுமை சாலை பற்றி மட்டுமே பல அறிக்கை, கருத்துக்கள் கூறியிருந்தது தெரிந்தது. சாலை விரிவாக்கம் உள்ளிட்ட எதையும் செய்யக்கூடாது என்று தி.மு.க கூறியதாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

Darmapuri MP 4.png

நம்முடைய ஆய்வில்,

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் தருமபுரி எம்.பி கோரிக்கை விடுத்தது உண்மை.

ஆனால், சென்னை – சேலம் எட்டு வழி சாலை தொடர்பாக எந்த ஒரு கோரிக்கையையும் அவர் விடுக்கவில்லை.

தருமபுரி - சேலம் இடையேயான தேசிய நெடுஞ்சாலையை எட்டு வழி சாலையாக மாற்ற வேண்டும் என்று மட்டுமே அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் 2018ம் ஆண்டு வெளியிட்டது சென்னை - சேலம் இடையே புதிதாக அமைக்கப்பட இருந்த எட்டு வழிச் சாலையைப் பற்றியது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எட்டு வழிச் சாலை எங்கும் அமைக்கவே கூடாது என்று தி.மு.க கூறியதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், தருமபுரி எம்.பி செந்தில் குமார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் விடுத்த கோரிக்கையின் குறிப்பிட்ட பகுதிகளை மறைத்துவிட்டு, சென்னை சேலம் எட்டு வழிச் சாலை தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையை இணைத்து, தவறான வகையில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையான நிகழ்வுடன் தவறான தகவல் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சென்னை - சேலம் எட்டு வழிச் சாலையை வலியுறுத்திய திமுக எம்.பி செந்தில் குமார்? - பரபரப்பு ஃபேஸ்புக் பதிவு

Fact Check By:

Result: Mixture