
‘’கோமாதா சங்கு காட்டினால் போதும், மாடு தானாகப் பால் சுரக்கும்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஒரு வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Video Link |
இதனை உண்மை என நம்பி பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோவை ஒருமுறை நன்றாக உற்றுப் பார்த்தால் ஒரு விசயம் புரியும். ஆம், கோமாதா சங்கை காட்டாதபோதும் மாட்டின் காம்புகளில் இருந்து பால் சுரந்து ஊற்றுகிறது. வீடியோவின் இறுதியில் சங்கை மாட்டின் மடியில் இருந்து ஒருவர் எடுக்கிறார். அதன் பிறகும் பால் சுரப்பதைக் காண முடிகிறது.

உண்மையில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது சாதாரண ஒன்றுதான். பசு மாடு வளர்க்கும் சிலரிடம் இதுபற்றி முதலில் பேசினோம். அதற்கு அவர்கள், ‘’கன்று ஈன்ற ஒருமாதம் அல்லது 40 நாள் சில பசுக்களுக்கு கறவைக்கான நேரம் வந்தால் தானாகவே பால் வடியும். பிரசவத்திற்குப் பின் சில மாடுகளுக்கு அதிகளவில் தாய்ப்பால் சுரக்கும் என்பதால் மடி கணமாகி, எடை தாங்காமல் இப்படி தானாகவே பாலை சுரக்கும். அந்த நேரங்களில் சங்கை வைத்துப் பிடித்து, சங்குதான் பால் சுரக்கக் காரணம் எனக் கூறி சிலர் ஏமாற்றுவதும் உண்டு. உண்மையில் சங்கை காட்டிக் கொண்டே இருந்தால் நேர விரயம்தான் ஆகும். கையை வைத்து பால் கரந்தால் மட்டுமே லிட்டர் கணக்கில் பால் வரும். மற்றபடி ஊற்று பொங்குவதுபோல மடி நிரம்பி பால் வழிவது பசு மாடுகளில் இயல்பான நிகழ்வுதான். அதேசமயம், சில பால் தொழிற்சாலைகளில் மாடுகளின் மடியில் ரசயானங்களை தடவி பால் சுரத்தலை ஊக்குவிப்பதும் நடைபெறுகிறது,’’ எனத் தெரிவித்தனர்.
இதுபோலவே, யூ டர்ன் இணையதளம் இதுபற்றி ஆய்வு மேற்கொண்டு அதன் முடிவுகளை சமர்ப்பித்ததைக் காண முடிந்தது. அவர்கள் இதன்பேரில் கால்நடை மருத்துவர் பாலசுப்ரமணியன் என்பவரிடம் பேசி உண்மையை உறுதி செய்திருக்கிறார்கள். இதுபற்றிய செய்தியை விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். மேலும், கோமாதா சங்கு என எதுவும் நாம் அறிந்தவரையில் இருப்பதாக தெரியவில்லை.
மேலும், கன்று ஈன்ற மாடுகள் மட்டுமல்ல, சில மாடுகளின் மடி நிறைந்தால் அவை தானாகவே பால் சுரக்கும் என்பதை தெரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் பால் கறக்கும் தொழிற்சாலைகளை கூட பலர் நடத்துகிறார்கள். கனடா நாட்டில் அத்தகைய தொழிற்சாலை ஒன்று செயல்படுகிறது. அதுபற்றி விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

எனவே விஞ்ஞானப் பூர்வமான முடிவுகள் இல்லாமல் இத்தகைய வதந்திகளை உண்மை என நம்பி ஏமாற வேண்டாம் என நமது வாசகர்களை கேட்டுக் கொள்கிறோம். சமூக ஊடகங்களில் சிலர் இப்படியான வதந்திகளை பரப்பும் அதே சூழலில் கால்நடை வளர்ப்பு பற்றி, பசு மாடுகளின் குணநலன் பற்றி விவசாயிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் பலரும் யூ டியுப்பில் ஆக்கப்பூர்வமான வீடியோ பதிவுகளை வெளியிட்டு விளக்கம் தருகின்றனர். கால்நடைகளை நேரில் பார்த்திராத நபர்கள், நேரம் இருந்தால், இந்த வீடியோக்களை பார்த்து கால்நடைகள் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த விவரம்,
1) கன்று ஈன்ற மாடுகள் மட்டுமின்றி பொதுவாகவே பசு மாடுகள் மடி நிரம்பினால் தானாகவே பால் சுரந்து, ஊற்றுவது வழக்கம்தான்.
2) இத்தகைய பால் சுரத்தல் கன்று ஈன்ற மாடுகளில் சற்று அதிகமாக இருக்கும்.
3) கால்நடை மருத்துவர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள் உள்பட பலரும் இந்த நிகழ்வை வெளிப்படுத்தி, பல செய்திகளை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.
4) ஒருவேளை தானாகப் பால் சுரக்கவில்லை எனில், தொழில் முறைக்காக, ரசாயனங்களை மாட்டின் மடியில் தடவி பால் சுரக்க வைப்பதும் உண்டு.
5) சாதாரண சங்கை எடுத்துக் காட்டினால் மாடு பால் சுரக்காது. சந்தேகம் இருந்தால் உங்கள் வீட்டில் வளரும் மாட்டை வைத்து இதைப் பரிசோதித்து பாருங்கள்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உரிய ஆதாரமின்றி மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
