ரங்கராஜ் பாண்டே புதிய சேனல் தொடங்கினாரா?

சமூக வலைதளம்

‘’புதிய சேனலை தொடங்கினார் பாண்டே தமிழகத்தில் இதுதான் முதல்முறை பெருகும் ஆதரவு!’’ என்ற தலைப்பில் ஒரு செய்தி ஃபேஸ்புக்கில் வைரலாகப் பரவி வருகிறது. இதுவரை 3000-க்கும் அதிகமான ஷேர்களை இந்த செய்தி பெற்றுள்ளது. TNNews என்ற இணையதளம் வெளியிட்டுள்ள இந்த செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த தகவல்களை உரிய ஆதாரங்களுடன் இங்கே தொகுத்து அளித்துள்ளோம்.

வதந்தியின் விவரம்:

புதிய சேனலை தொடங்கினார் பாண்டே தமிழகத்தில் இதுதான் முதல்முறை பெருகும் ஆதரவு !

சென்னை

பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே கேள்விகளால் விருந்தினர்களை அதிகம் திணறடிப்பதில் வல்லவர், தமிழகத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள் ஒருவரின் பெயரை மக்கள் நினைவில் வைக்கும் அளவிற்கு அவரது செயல்பாடுகள் இருந்திருக்கின்றன.

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சியில் இருந்து கருத்து வேறுபாட்டின் காரணமாக பாண்டே தலைமை செய்தியாசிரியர் என்ற பொறுப்பில் இருந்து விளக்கினார். அதனை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து தனது கருத்துக்களை எடுத்து சொல்லிவந்தார் பாண்டே.

ராகுலின் வருகை முதல் அதிமுக, திமுகவிற்கு ஒதுக்கப்படும் சீட் விவரங்களை சரியாக எடுத்து முதலாக சொன்னவர் பாண்டே.

இதையும் படிக்க:  ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் வெற்றிபெறபோவது யார் ?

தற்போது புதிதாக சேனல் ஒன்றினை பாண்டே தொடங்கி இருக்கிறார் இந்த முறை வாசகர்களை எப்போதும் தொடர்பில் இருக்கும் விதமாக சமூகவலைத்தளங்கள் அனைத்திலும் ஒரே நேரத்தில் நேரலை செய்யும் விதமாக தனது சாணக்கியா எனும் புது செய்தி சேனலை தொடங்கி இருக்கிறார்.

தற்போது சமூகவலைத்தளங்களில் செயல்படும் இந்த சேனலானது விரைவில் சாட்டிலைட் சேனலாக உருமாற வேலைகள் அனைத்தும் நடைபெறுவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எது எப்படியோ பாண்டேவின் ரசிகர்களுக்கு இந்த செய்தி சந்தோசத்தை கொடுத்திருக்கும்.

செய்தியின் முழு விவரம் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Archive Link

உண்மை அறிவோம்:

ரங்கராஜ் பாண்டே மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில், தமிழ் இலக்கியம் (முதுகலை பட்டம்) படித்துள்ளார். மாணவ பருவத்திலேயே அரசியல் மற்றும் ஊடகம் மீது ஆர்வம் கொண்டிருந்த பாண்டே, பட்டப்படிப்பு முடிந்ததும் தினமலர் நாளிதழில் பணிக்குச் சேர்ந்தார். பின்னர், தினமலரில் இருந்து விலகி, தந்தி டிவியில் நியூஸ் எடிட்டராகச் சேர்ந்தார். அங்கு, ஆயுத எழுத்து, கேள்விக்கு என்ன பதில் போன்ற நிகழ்ச்சிகளின் மூலமாக பிரபலமாகி, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார். நமது வாசகர்கள் அவரை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள விரும்பினால் இங்கே கிளிக் செய்யவும்.

இந்நிலையில், ரங்கராஜ் பாண்டே, 2018, டிசம்பர் மாதம் தந்தி டிவியில் இருந்து விலகினார். அப்போது அவரை பற்றிய செய்திகள், மீம்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவின. இதையடுத்து, அவற்றுக்கு மறுப்பு தெரிவித்து, அதிகாரப்பூர்வ வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார்.

தற்சமயம், தந்தி டிவியில் இருந்து விலகிய பாண்டே, தனது பெயரிலேயே யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இது தவிர, நடிகர் அஜித்குமாருடன் இணைந்து, ‘நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இதுபற்றிய ஆதார செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஆனால், குறிப்பிட்ட செய்தியில் சொல்வது போல, அவர் எதுவும் டிவி சேனல் தொடங்கியுள்ளாரா என்ற நோக்கில் ஆய்வை தொடங்கினோம். மற்றவர்களிடம் பேசி நேரத்தை வீணடிக்காமல், சம்பந்தப்பட்ட நபரிடமே நேரடியாக விளக்கம் கோர தீர்மானித்தோம்.

அதன்படி, திரு.ரங்கராஜ் பாண்டேவை வாட்ஸ்ஆப் மூலமாக தொடர்பு கொண்டோம். அதில், நாம் கேட்ட அனைத்து கேள்விகளையும் பொறுமையாக படித்து, உள்வாங்கிக் கொண்டு அவர் பதில் அளித்தார். அதன் விவரம் பின்வருமாறு;
‘’நான் தற்போது டிவி சேனல் எதுவும் தொடங்கவில்லை. யூடியூப், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் சாணக்யா என்ற பெயரில், ஆன்லைன் ஊடக நிறுவனம் நடத்தி வருகிறேன். இது தவிர, சாணக்யா என்ற பெயரில் இணையதளம் ஒன்றை பதிவு செய்து, வெப் டிவி போன்று அதனை வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். ஒருவேளை, எதிர்காலத்தில் இது, முழு நேர டிவியாகவோ அல்லது சேட்டிலைட் சேனலாகவோ மாறலாம். ஆனால், எனது எதிர்கால திட்டங்களை பற்றி முழுதாக வெளியில் சொல்ல முடியாது.’’

நன்றி: திரு.ரங்கராஜ் பாண்டே

மேற்கண்ட ஆதாரங்களின்படி, நமக்குத் தெரியவந்த உண்மையின் விவரம்,
1) ரங்கராஜ் பாண்டே, முழு நேர டிவி அல்லது சேட்டிலைட் டிவி எதுவும் தொடங்கவில்லை.
2) சாணக்யா என்ற பெயரில் ஆன்லைன் ஊடக நிறுவனம் தொடங்கியுள்ளார்.
3) எதிர்காலத்தில் இந்த ஆன்லைன் நிறுவனத்தையே முழுநேர டிவி அல்லது சேட்டிலைட் டிவியாக மாற்றவும் திட்டமிட்டுள்ளார்.
4) இதற்கான முன்னோட்டமாக, தற்போதைக்கு இணையதள முகவரி ஒன்றை பதிவு செய்து, அதனை வெப் டிவியாக வடிவமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
5) ரங்கராஜ் பாண்டேவின் பெயர் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படும்பொருளாக உள்ளதால், அவரது பெயரை பார்த்ததுமே, அதன் உண்மைத்தன்மை அறியாமல் பலர் குறிப்பிட்ட செய்தியை ஷேர் செய்துள்ளனர்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில், குறிப்பிட்ட செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்படுகிறது. தற்போதைக்கு ஆன்லைன் ஊடக நிறுவனம் தொடங்கி, அதை முழுமைப்படுத்தும் பணிகளில்தான் ரங்கராஜ் பாண்டே ஈடுபட்டுள்ளார். முழு நேர டிவி அல்லது சேட்டிலைட் டிவி எதையும் தற்சமயம் தொடங்கவில்லை என்று அவரே உறுதி செய்தும் உள்ளார். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விசயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  

Avatar

Title:ரங்கராஜ் பாண்டே புதிய சேனல் தொடங்கினாரா?

Fact Check By: Parthiban S 

Result: False

 • 7
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  7
  Shares