பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட நாணயத்தில் ராமர்? – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

அரசியல் சமூக ஊடகம்

பிரிட்டிஷ் அரசு 1818ம் ஆண்டு வெளியிட்ட நாணயத்தில் ராமர், தாமரை சின்னம் உள்ளதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் ரைவல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

East India 2.png
Facebook LinkArchived Link

பழைய நாணயம் ஒன்றின் முன், பின் பக்க படம் வைக்கப்பட்டுள்ளது. நாணத்துக்கு மேல் பகுதியில், “உடனே மோடி பி.ஜே.பி ஒழிகனு கூவாமல் பார்…” என்றும் கீழ் பகுதியில், “1818ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட இந்திய அடையாளம் ராமர், ஓம், தாமரை தாங்கிய இரண்டனா நாணயம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, இந்து மக்கள் சேனா என்ற ஃபேஸ்க் பக்கத்தில் நா்ஆறுமுகம் நா.ஆறுமுகம்‎ என்பவர் அக்டோபர் 1, 2019 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கிழக்கு இந்திய கம்பெனி வெளியிட்ட நாணயம் என்று ஒன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. 1818ம் ஆண்டு வெளியான இரண்டு அன்னா நாணயம் என்று குறிப்பிட்டுள்ளனர். பார்க்க பழைய நாணயம் போல் இருப்பதாலும் ஶ்ரீராமர், தாமரை, ஓம் உள்ளிட்ட விஷயங்கள் உள்ளதாலும் இது உண்மையாக இருக்கும் என்று நம்பி பலரும் ஷேர் செய்திருப்பது தெரிந்தது.

இருப்பினும், கிழக்கு இந்திய கம்பெனியின் சின்னம் எதுவும் இல்லாதது இந்த நாணயத்தின் நம்பகத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, இந்த நாணயம் உண்மையானதுதானா என்று ஆய்வு மேற்கொண்டோம். 

கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட நாணயங்கள் பற்றி தேடியபோது, பல புகைப்படங்கள் கிடைத்தன. ஆனால், ஶ்ரீராமர் இருப்பது போன்ற நாணயம் எதுவும் அதில் இல்லை. ஆனால், ஸ்நாப்டீல் என்ற ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தில் கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட நாணயம் என்று இதைப் போன்ற ஒரு அன்னா நாணயத்தை விற்பனைக்கு வைத்திருப்பது தெரிந்தது. அதில் கூட ஓம், தாமரை இல்லை.

East India 3.png
Search LinkSnapDeal LinkArchived Link

அதில் ஒரு பக்கத்தில் ஶ்ரீராமர் பட்டாபிஷேக காட்சியும் மற்றொரு பக்கத்தில் கிழக்கிந்திய கம்பெனி லோகோவும் வெளியான ஆண்டு 1835 என்றும் இருந்தது. இணையத்தில் இதுபோன்று பல போலி நாணயங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் பலரும் ஏமாந்து இந்த நாணயங்களை வாங்கி வருவதாகவும் செய்திகள் நமக்கு கிடைத்தன. 

BBC TamilArchived Link

பழங்கால இந்திய நாணயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள பழங்கால நாணயங்கள் பக்கத்தை ஆய்வு செய்தோம். அதில், பிரிட்டிஷ் காலத்தை பல கட்டமாக பிரித்திருந்தனர். கிழக்கிந்திய கம்பெனியினர் முதலில் மெட்ராஸ், பெங்கால், பம்பாய் பகுதிக்கு என்று தனித்தனியாக நாணயங்களை வெளியிட்டிருந்தனர். 

East India 4.png

அதன் பிறகு பொதுவான நாணயம் கொண்டுவர வேண்டும் என்பதற்காக காயினேஜ் சட்டம் 1835 இயற்றப்பட்டது. இதன் அடிப்படையில் புதிய நாணயங்கள் என்பது 1835ல் தான் அறிமுகம் ஆகிறது. அதற்கு முன்பு வரை சென்னை, பம்பாய், வங்கத்துக்கு என்று தனித்தனி நாணயங்கள் மட்டுமே இருந்துள்ளன என்று அதில் குறிப்பிட்டு, அந்த நாணயங்களின் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தனர். இதன் மூலம், 1818ல் கிழக்கிந்திய கம்பெனி அல்லது இங்கிலாந்து அரசு பொது நாணயம் வெளியிட்டது என்ற தகவலே தவறானது என்பது தெரிந்தது.

RBI Link 1Archived Link 1
RBI Link 2Archived Link 2
RBI Link 3Archived Link 3
RBI Link 4Archived Link 4

பொது நாணய சட்டம் வந்த பிறகு, முதன் முதலில் மன்னர் 4ம் வில்லியம் உருவத்துடன் கூடிய நாணங்கள் 1835ல் அடிக்கப்பட்டது. 1840ல் விக்டோரியா அரசி உருவத்துடனும் அடிக்கப்பட்டது. இதன் பிறகு கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவுக்கு வருகிறது. 1858ம் ஆண்டு இந்தியாவை இங்கிலாந்து நேரடியாக ஆட்சி செய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து, 7ம் எட்வர்ட், ஐந்தாம் ஜார்ஜ் உருவத்துடனும் நாணயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த படங்களை எல்லாம் ஆய்வு செய்தோம்… அதில் எதுவும் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போன்ற நாணயம் இல்லை.

East India 5.png

இந்த நாணயம் பற்றி வேறு ஏதும் தகவல் கிடைக்கிறதா என்று கண்டறிய கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த நாணயம் போலியானது என்று பல தகவல் நமக்கு கிடைத்தன. 

IndiaToday Archived Link

இந்தியா டுடே உண்மை கண்டறியும் குழுவினர் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்த சஞ்சிப் சிங்கிடம் இந்து கடவுள் உருவத்துடன் நாணயம் ஏதும் பிரிட்டிசார் வெளியிட்டனரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர், “கிழக்கு இந்திய கம்பெனி தங்கம், வெள்ளி, தாமிரம் மற்றும் டின் ஆகிய உலோகங்களில் நாணயங்களை வெளியிட்டுள்ளது. இப்போது வரை அவர்கள் நாணயங்களில் இந்து கடவுள் உருவத்தை வெளியிட்டதாக ஆதாரம் இல்லை” என்றார்.

நம்முடைய ஆய்வில்,

பழங்கால நாணயங்கள் என்று மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போன்ற நாணயங்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

1818ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியோ, இங்கிலாந்து அரசோ பொதுவான நாணயத்தை வெளியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

1835ல் தான் பொது நாணய சட்டத்தையே கிழக்கிந்திய கம்பெனி கொண்டுவந்தது. அப்போது வெளியிடப்பட்ட நாணயங்களில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயர் பொறிக்கப்பட்டது.

1858ம் ஆண்டுதான் இங்கிலாந்து அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இந்தியா சென்றது.

ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் உள்ள நாணயங்கள் அருங்காட்சியகத்தில் ராமர் பட்டாபிஷேகத்துடன் கூடிய நாணயம் உள்ளதாக தகவல் இல்லை.

டெல்லி அருங்காட்சியக நிர்வாகியிடம் இது தொடர்பாக இந்தியா டுடே கேள்வி எழுப்பியபோது, அப்படி ஒரு நாணயம் வெளியாகவில்லை என்று உறுதி செய்துள்ளார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் ராமர் பட்டாபிஷேகம், தாமரை சின்னத்துடன் கூடிய நாணயம் இங்கிலாந்து அரசு வெளியிட்டது என்ற தகவல் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட நாணயத்தில் ராமர்? – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Chendur Pandian 

Result: False