
‘’ஜியோ நெட் உதவியுடன் இந்தியா முழுவதும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டன,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு நடத்த தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

மே 24ம் தேதி, Abbasali Abbas Abbas என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. ஜியோ நெட் உதவியுடன் ஒரே இடத்தில் இருந்துகொண்டு இந்தியா முழுவதும் கம்ப்யூட்டர் மூலம் ஹேக் செய்யப்பட்ட எலக்ட்ரானிக் ஓட்டுப் பெட்டிகள் என்று, இதில் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், கீழே முதல் கமெண்டில் வீடியோ ஆதாரம் உள்ளதாகக்கூறியுள்ளனர். அந்த வீடியோ பற்றிய செய்தி இணைப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
Archived Link
அதே வீடியோவின் யூ டியூப் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
Idimurasu Tv என்ற இணையதளம் தனது யூ டியூப் பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோவை ஆதாரம் காட்டி, நாம் ஆய்வு செய்யும் பதிவில் பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் உண்மை என ஷேர் செய்துவருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மக்களவைத் தேர்தல் 2019 முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு, இந்த தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக, புகார் கூறுவதைப் போல உள்ளது. அமெரிக்க உளவு நிறுவனம் இதுபற்றி வீடியோ ஆதாரம் வெளியிட்டதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இவர்கள் குறிப்பிடும் வீடியோ ஆதார செய்தி அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டது இல்லை. அதில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் உள்ள சில குறைகளை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதாவது, ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் மாற்றம் செய்ய அதனை வடிவமைத்த என்ஜீனியர்களால் மட்டுமே முடியும், அதில் உள்ள கோட் அமைப்புகள் அத்தகைய பாதுகாப்பானவை என்றும், ஒருவேளை ப்ளூ டூத் உள்ளிட்டவற்றின் உதவியால் அதனை ஹேக் செய்ய தீர்மானித்தால், அவற்றை வடிவமைக்கும் என்ஜீனியர் அரிதிலும் அரிதாகவே செய்ய முடியும் என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றனர். அதாவது, ஓட்டு இயந்திரத்தை வடிவமைப்பவர்கள் நினைத்தால் அதில் ப்ளூடூத் உதவியுடன் மோசடி செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர். எனினும், அவர்கள் உதாரணமாகக் காட்டுவது சாதாரண ஓட்டுப் பதிவு இயந்திரம்தான், இந்திய அளவில் பயன்படுத்தப்படும் உண்மையான ஓட்டு இயந்திரம் இல்லை. இதுதவிர, இந்த வீடியோவில் எந்த இடத்திலும் ஜியோ என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. எனவே, நாம் ஆய்வு செய்யும் பதிவில் கூறப்பட்டுள்ளது தவறான செய்தி என உறுதியாகிறது.
ஓட்டுப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி ஏற்கனவே நமது மலையாள பிரிவு விரிவான ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிலையில், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, அந்த வீடியோவில் குறிப்பிடப்படும் https://indiaevm.org/ என்ற இணையதள முகவரியை பார்வையிட்டோம். அதில், எடுத்த எடுப்பிலேயே இந்திய ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் மோசடி செய்ய வாய்ப்பு நிறைந்தவை என்று, கூறி ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தனர். அது நாம் ஆய்வு செய்யும் வீடியோவுடன் அப்படியே ஒத்துப் போகிறது. அதாவது, இந்த ஒரிஜினல் வீடியோவின் சில பகுதிகளை கட் செய்து, அதனை அப்படியே இடிமுரசு டிவியில் பகிர்ந்துள்ளதாக, தெரியவருகிறது. அந்த ஒரிஜினல் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இதில் கூட எந்த இடத்திலும் ஜியோ பற்றியோ, இந்தியா மக்களவைத் தேர்தல் 2019ல் எதுவும் முறைகேடுகள் நடந்ததாகவோ குறிப்பிடப்படவில்லை. இதை விட ஒரு உண்மை என்னவெனில், இது 2010ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு வீடியோவாகும்.

அதாவது பழைய வீடியோவை தற்போது நடந்ததுபோல தவறாக சித்தரித்து பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவில், இந்திய ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் நிபுணர்கள் நினைத்தால் சில மோசடிகளை செய்யலாம் என்றுதான் குறிப்பிடுகிறார்களே தவிர, இவற்றில் மோசடி செய்துதான் தற்போது பாஜக தேர்தலில் வென்றது என்று எங்கேயும் கூறவில்லை.
இதுதொடர்பாக, வேறு ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா என கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்போது, டெலிகாம் மிரர் வெளியிட்ட செய்தி ஆதாரம் கிடைத்தது.

அந்த செய்தியில், இந்தியாவைச் சேர்ந்த சைபர் கிரைம் நிபுணர் ஒருவர் அமெரிக்காவில் அடைக்கலம் கோரியுள்ளதாகவும், அவர், ஜியோ உதவியுடன் ஓட்டுப் பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய 2014ம் தேர்தலில் பாஜக முயற்சி மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை முன்னாள் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மறுத்துவிட்டதாகவும், அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

எனினும், இவை எல்லாம், 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பின் நடந்தவை இல்லை. நாம் ஆய்வு செய்யும் பதிவில், போதுமான ஆதாரங்கள் எதுவுமின்றி, ஒரு வீடியோவின் சில நிமிட பகுதியை மட்டும் எடிட் செய்து, பரபரப்புக்காக பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில் இந்திய வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பற்றி மட்டுமே விவரிக்கிறார்கள். எந்த இடத்திலும், பாஜக, ஜியோ மோசடி செய்துள்ளதாக, எதுவும் குறிப்பிடவில்லை. மேலும், ஓட்டுப் பதிவு இயந்திரங்களை வடிவமைப்பவர்கள் நினைத்தால் மட்டுமே அரிதிலும் அரிதாக சில இயந்திரங்களில் மோசடி செய்யலாம் என்றும், மற்றபடி அனைத்திலும் மோசடி செய்வதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது. தகுந்த ஆதாரங்கள் இன்றி, கையில் கிடைத்த ஒருவீடியோவை வைத்து தவறான கருத்துகளை பரப்ப முயற்சித்துள்ளனர் என்பதும் தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஜியோ நெட் உதவியுடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதா?
Fact Check By: Parthiban SResult: False
