கர்நாடகத்தில் வழங்கப்படும் பாஸ்போர்ட்டில் கன்னடம்?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

கர்நாடகாவில் வழங்கப்படும் இந்திய பாஸ்போர்ட்டில் கன்னடமும் உள்ளது போன்ற படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Passport 2.png
Facebook LinkArchived Link

தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் வழங்கப்படும் பாஸ்போர்ட் என்று இரண்டு படங்களை ஒன்று சேர்த்து ஒரே படமாக வெளியிட்டுள்ளனர். கர்நாடகாவில் வழங்கப்படும் பாஸ்போர்ட்டில் கன்னடமும் உள்ளது போல படம் உள்ளது. இந்த பதிவை, ஷரீப் மன்பயீ காஞ்சிரங்குடி என்பவர் வெளியிட்டுள்ளார். நிலைத் தகவலில், “என் தாய் மொழி தமிழ் எங்கே?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்

இந்தியாவின் இரு வேறு மாநிலங்களில் வழங்கப்படும் பாஸ்போர்ட் என்று ஒப்பீடு செய்துள்ளனர். கர்நாடகாவில் வழங்கப்படும் பாஸ்போர்ட்டில் கன்னடம் உள்ளது என்றும், தமிழ்நாட்டில் வழங்கப்படும் பாஸ்போர்ட்டில் தமிழ் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். பாஸ்போர்ட்டில் கன்னடத்தையும் சேர்த்திருப்பது போல, தமிழையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளனர்.

இந்தியாவில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. மாநிலத்துக்கு ஏற்றார்போல மாநில மொழியை சேர்த்து பாஸ்போர்ட் வழங்கப்படுவது இல்லை. ஆனால், இந்த புகைப்படம் மற்றும் தகவல் ஆச்சரியத்தை அளித்தது. ஒரு மாநில மொழிக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு சிறப்பு ஏற்பாட்டை செய்திருப்பார்கள் என்ற சந்தேகமும் எழுந்தது.

மாநில மொழிகளில் பாஸ்போர்ட்டை வழங்குவது தொடர்பாக மத்திய அரசு ஏதேனும் முடிவு எடுத்துள்ளதா, கன்னடத்தில் பாஸ்போர்ட் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதா என்று கூகுளில் தேடினோம். அப்போது மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்த கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த எம்.ஜெ.அக்பர் அளித்த பதில் பற்றிய தகவல் கிடைத்தது. 

mea.gov.inArchived Link

அதில், “இந்தி பேசாத பிற மாநில மக்களுக்காகத்தான் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. மற்ற மொழிகளில் பாஸ்போர்ட் அச்சிடும் வசதி இல்லை” என்று கூறியிருந்தார். அப்படி இருக்கும்போது கன்னடத்தில் பாஸ்போர்ட் வழங்க வாய்ப்பில்லை என்பது தெரிந்தது.

எனவே, கன்னடா இன் இந்தியன் பாஸ்போர்ட் என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது, இந்திய பாஸ்போர்ட்டில் கன்னடத்தைச் சேர்க்க வேண்டும் என்று கர்நாடகத்தில் கோரிக்கை எழுந்துள்ளதாக செய்திகள் கிடைத்தன.

Google Search LinkIndian ExpressArchived Link

இது தொடர்பாக 2018 மார்ச் 22ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் வௌியான செய்தியைப் பார்த்தோம். அப்போது, “கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் விநியோகிக்கப்படும் பாஸ்போர்ட்டில் கன்னடத்தையும் சேர்க்க வேண்டும் என்று மாநில அரசின் கன்னடா வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எஸ்.ஜி.சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்” என்று குறிப்பிட்டு இருந்தனர். 

கன்னடத்தில் பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டதாக எந்த செய்தியும் இல்லை… அப்படி இருக்கும்போது இந்த புகைப்படம் எப்படி வெளியானது என்று தேடினோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, நியூஸ்மினிட் என்ற இணையதளத்தில் இந்த படம் வெளியான தகவல் நமக்கு கிடைத்தது.

Reverse Image Search Linkthenewsminute.comArchived Link

நியூஸ்மினிட் செய்தியை பார்த்தோம். அதுவும் 2018 மார்ச் 22ம் தேதி வெளியாகி இருந்தது. அதிலும், கர்நாடக மாநிலத்தில் வழங்கப்படும் இந்திய பாஸ்போர்ட்டில் கன்னடமும் சேர்க்கப்பட வேண்டும் என்று எஸ்.ஜி.சித்தராமையா கோரிக்கை விடுத்திருந்த செய்தியை வெளியிட்டிருந்தனர். அந்த செய்திக்காக இந்த புகைப்படத்தை அவர்கள் பயன்படுத்தியிருந்தது தெரிந்தது. இந்த புகைப்படத்தை நியூஸ் மினிட் போட்டோஷாப் செய்ததா அல்லது இது போன்று பாஸ்போர்ட் வெளியாக வேண்டும் என்று சித்தராமையா டிசைன் செய்து வெளியிட்டாரா என்று எதுவும் குறிப்பிடவில்லை.

நம்முடைய ஆய்வில்,

மாநில மொழிகளில் பாஸ்போர்ட் வழங்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ள செய்தி கிடைத்துள்ளது.

கர்நாடகத்தில் வழங்கப்படும் பாஸ்போர்ட்டில் கன்னடமும் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது தெரியவந்துள்ளது.

கோரிக்கை தொடர்பான செய்தியில் கன்னடத்தில் பாஸ்போர்ட் இருக்கும் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கர்நாடகாவில் வழங்கப்படும் பாஸ்போர்ட்களில் ஆங்கிலம், இந்தியுடன் கன்னடமும் பயன்படுத்தப்படுகிறது என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கர்நாடகத்தில் வழங்கப்படும் பாஸ்போர்ட்டில் கன்னடம்?

Fact Check By: Chendur Pandian 

Result: False

2 thoughts on “கர்நாடகத்தில் வழங்கப்படும் பாஸ்போர்ட்டில் கன்னடம்?

  1. தாங்க சேவைக்கு நன்றி..
    அவ்வாறே கருப்பு பணம் ஒழிக்கப்பட்டதா மற்றும் கங்கை தூய்மை ஆக்கப்பட்டதா ஆய்வு செய்து கூறவும் முடிந்தால் மற்றும்
    நன்றி..

Comments are closed.