கல்வியறிவு அதிகம் உள்ள மாநிலங்களில் பா.ஜ.க புறக்கணிக்கப்பட்டதா?

அரசியல் சமூக ஊடகம்

இந்தியாவில், கல்வியறிவு அதிகம் உள்ள மாநிலங்களில் எல்லாம் பா.ஜ.க வெற்றிபெறவில்லை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Archived link

வாழ்க வளமுடன் என்று கூறி ஒரு புள்ளிவிவர புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கல்வியறிவு அடிப்படையில் மாநிலங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த பத்தியில், பா.ஜ.க பெற்ற தொகுதிகள் பட்டியலிடப்பட்டுள்ளது. முடிவில்,

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

என்ற திருக்குறளையும் வெளியிட்டுள்ளனர்.

இதன் மூலம், கல்வியறிவு அதிகம் உள்ள மாநிலங்களில் எல்லாம் பா.ஜ.க புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று மறைமுகமாகக் கூறப்பட்டுள்ளது. BigBoss என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படம் 2019 மே 24ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரம் சரி என்று நம்பி பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தியாவில் 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 36 மாநிலங்கள் உள்ளன. ஆனால், BigBoss வெளியிட்ட புகைப்படத்தில் வெறும் 20 மாநிலங்களின் பெயர்தான் இடம்பெற்று இருந்தது.

மேலும், மேற்கண்ட பதிவில் உள்ள கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் பட்டியல் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. 2011ம் ஆண்டு இந்திய அரசு எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எழுத படிக்கத் தெரிந்த கல்வியறிவு பெற்றவர்கள் பட்டியலை ஆய்வு செய்தோம். (பக்கம் 113) அதற்கும், மேற்கண்ட பதிவில் உள்ள தகவலுக்கும் சிறிய அளவில் மாறுபாடு இருந்தது.

முக்கியமாக 2011ம் ஆண்டு வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பில், கல்வியறிவு பெற்றவர்கள் பட்டியலில் திரிபுராவுக்கு 4வது இடம் அளிக்கப்பட்டது. அதன்பிறகு, திரிபுரா அரசின் தீவிர முயற்சி காரணமாக கல்வியறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. 2013ம் ஆண்டிலேயே கேரளாவை பின்னுக்குத்தள்ளி திரிபுரா முதலாவது இடத்தை பிடித்துவிட்டதாக அப்போதைய திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் அறிவித்தார். ஆனால், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் திரிபுரா பெயரையே காணவில்லை. இங்கு இரண்டு தொகுதிகளையும் பா.ஜ.க கைப்பற்றியுள்ளது.

BIGBOSS 2.png

அதேபோல், 87.4 சதவிகிதத்துடன் 5வது இடத்திலிருந்த கோவாவின் பெயரும் விடுபட்டுள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள இரண்டு தொகுதிகளை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தலா ஒன்று என்று கைப்பற்றியுள்ளன.

BIGBOSS 3.png

87.07 சதவிகிதத்துடன் 6வது இடத்திலிருந்த டாமன் டயூ பெயரும் விடுபட்டுள்ளது. இந்த யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரே ஒரு தொகுதியை பா.ஜ.க கைப்பற்றியது.

BIGBOSS 4.png

7வது இடத்தில் டெல்லி உள்ளது. ஆனால், டெல்லியின் பெயரும் இல்லை. இந்த மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதிகளையும் பா.ஜ.க வென்றது.

BIGBOSS 5.png

இதைத் தொடர்ந்து இமாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களும் விடுபட்டுள்ளன. இந்த மாநிலங்களிலும் பா.ஜ.க-வே வெற்றிபெற்றது.

இப்படி தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பட்டியலில் திருத்தம் செய்து, கல்வி அறிவு அதிகம் உள்ள மாநிலங்களில் எல்லாம் பா.ஜ.க தோல்வியடைந்துள்ளது என்ற தவறான தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்துள்ளது உறுதியாகிறது.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், கல்வியறிவு அதிகம் உள்ள, பா.ஜ.க அதிகம் வென்ற மாநிலங்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கல்வியறிவு அதிகம் உள்ள மாநிலங்களில் பா.ஜ.க புறக்கணிக்கப்பட்டதா?

Fact Check By: Praveen Kumar 

Result: False