
12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலையின் ட்வீட் ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

பா.ஜ.க-வைச் சேர்ந்த அண்ணாமலை ட்வீட் பதிவு ஒன்றின் படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், “12th fail ஆகிட்டோம்னு வருசா வருசம்தான் சில மனவலிமை குறைந்த மாணவர்கள் சாகுறாங்க. எதுக்கு 12th வச்சுருக்கீங்க?
அது போலதான் #NEET entrance. இந்தியா முழுவதும் தமிழ் மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய மருத்துவ படிப்பை பெறுவதற்கான வாய்ப்பாக பாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை புலம் பியல் என்ற ஐடி நபர் 2020 செப்டம்பர் 14ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
விருப்ப ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அதைத்தொடர்ந்து, அவரது கருத்துகளுக்கு சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனமும், ஆதரவும் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில்தான் மேற்கண்ட தகவல் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையில், அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டர் பதிவா, என்று ஆய்வு செய்தோம்.

முதலில் அண்ணாமலை ட்விட்டர் பக்கத்துக்குச் சென்று அவர் வெளியிட்ட ட்வீட்களை ஆய்வு செய்தோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது அண்ணாமலையின் ட்விட்டர் பக்கம் இல்லை என்பது தெரியவந்தது. அண்ணாமலையின் ட்வீட் முகவரி @annamalai_k என்பதாகும். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ட்வீட் பதிவில் @Annamalai_BJP என்று இருந்தது. உண்மையில் அது போன்று ட்வீட் பக்கம் ஏதும் உள்ளதா என்று தேடிப் பார்த்தோம்.

அப்போது அப்படி ஒரு பக்கம் இருப்பது தெரிந்தது. அநத பக்கத்தை Archive செய்ய முயன்ற போது அண்ணாமலை என்று இருந்த பெயரை Annamalai Fan என்று மாற்றினர். இதன் மூலம் யாரோ அண்ணாமலையின் அனுதாபி ஒருவர் இந்த பக்கத்தை நிர்வகித்து வருவது தெரிந்தது.

இது தொடர்பாக அண்ணாமலை பக்கத்தில் ஏதும் தகவல் வெளியிட்டுள்ளாரா என்று பார்த்தோம். அப்போது, இது தன்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட் இல்லை என்று அவர் குறிப்பிட்டு பதிவிட்டிருப்பது கிடைத்தது.

இதன்மூலமாக, அண்ணாமலை பெயரில் யாரோ போலி அக்கவுண்ட் உருவாக்கி பதிவிட்டதை, அண்ணாமலை கூறியதாக நினைத்து பலரும் பகிர்ந்து வந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:+2 தேர்வை நிறுத்தலாமா என்று அண்ணாமலை கேட்டாரா?- போலி ட்வீட்!
Fact Check By: Chendur PandianResult: False
