அன்புமணி ராமதாஸ் பற்றி பரவும் வதந்தி!

அரசியல் | Politics தமிழகம்

‘’கூட்டணி தர்மத்துக்காக விளக்கு பிடிக்கவும் தயங்க மாட்டோம்,’’ என்று அன்புமணி ராமதாஸ் கூறியதைப் போல, ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பரவியதை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link 

MKS For CM

என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், அன்புமணி ராமதாஸ் கையில் ‘கூட்டணி தர்மத்துக்காக விளக்கு பிடிக்கவும் தயங்க மாட்டோம்‘ என ஒரு பேனர் பிடித்தபடி நிற்பதுபோல உள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு அரசியல் ரீதியான விமர்சனம் என்பதை கடந்து, அன்புமணி ராமதாஸை தனிப்பட்ட முறையில் மிகவும் தரம்தாழ்ந்து விமர்சிப்பதாக உள்ளது. அதேசமயம், அன்புமணி கையில் உள்ள பேனரில் உள்ள வார்த்தைகள் வேறொன்றாக இருந்தாலும், அவரது அருகில் உள்ள பெண் ஒருவரின் கையில் உள்ள பதாகையில், ‘Constitute Cauvery Management‘ என எழுதப்பட்டுள்ளது. இதை வைத்துப் பார்த்தால், இது காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான போராட்டம் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் என தெளிவாக தெரியவருகிறது. 

இதை வைத்துப் பார்த்தால், அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற வளாகத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியதாக தெரியவருகிறது. அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார். அதன்பின், 2014ம் ஆண்டு முதல் 2019 மே 23ம் தேதி வரை தருமபுரி மக்களவை தொகுதி உறுப்பினராக நாடாளுமன்ற செயல்பாடுகளில் அங்கம் வகித்திருக்கிறார். இதுதவிர, தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளார்.

இதில் காவிரி விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் உள்பட அஇஅதிமுக கூட்டணி உறுப்பினர்கள் கடந்த 2018ம் ஆண்டில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றன. அன்புமணியும் அவர் பங்கிற்கு, போராட்டம் நடத்தியிருக்கிறார். இதுபற்றிய பல செய்திகளை இணையத்தில் காண முடிகிறது.

The Hindu LinkTOI Link ANI Link 

ஆனால், நாம் ஆய்வு செய்யும் புகைப்பட பதிவு நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், அன்புமணியின் அருகில் நிற்கும் அஇஅதிமுக பெண் எம்பி உள்ளிட்டோர் பங்கேற்ற காவிரி ஆர்ப்பாட்ட வீடியோவின் லிங்க் கிடைத்தது. 

2018ம் ஆண்டு அஇஅதிமுக கூட்டணி உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அதில், திருப்பூர் மக்களவை தொகுதி உறுப்பினர் சத்யபாமாவும் பங்கேற்றார். அவர்தான் மேற்கண்ட புகைப்படத்தில் அன்புமணியுடன் நிற்கிறார்.

இதையடுத்து அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் (@V.Sathyabama) இதுபற்றி ஏதேனும் பதிவு வெளியிட்டுள்ளாரா என விவரம் தேடினோம்.

அப்போது, கடந்த மார்ச் 14, 2018 அன்று அன்புமணி ராமதாஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்தான், கறுப்பு உடை அணிந்து அன்புமணி ராமதாசும் நிற்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை எடுத்துத்தான் தவறான வகையில் வதந்தி பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது. 

Facebook Claim Link Archived Link 

இந்த புகைப்படங்களில் ஒன்றை பெரிதுபடுத்தி, அன்புமணி கையில் வைத்திருக்கும் பதாகையில் என்ன எழுதியுள்ளது என பார்த்தோம். அதில், cauvery management board என்றுதான் எழுதப்பட்டுள்ளது. அதனை எடுத்து, ஃபோட்டோஷாப் முறையில் தவறான தகவலை பரப்பியுள்ளனர் என்று உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான புகைப்படம் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:அன்புமணி ராமதாஸ் பற்றி பரவும் வதந்தி!

Fact Check By: Pankaj Iyer 

Result: False