பேரணியில் செய்தியாளர்களின் ஷூவைத் திருடிய திமுக-வினர்?- ஃபேஸ்புக் வில்லங்கம்

அரசியல் சமூக ஊடகம் தமிழகம்

சென்னையில் தி.மு.க நடத்திய பேரணியில் செய்தியாளரின் காலணியை தி.மு.க-வினர் திருடியதாக ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

DMK 2.png
Facebook LinkArchived Link

ஊடகத்தின் பெயர் இல்லாத பிரேக்கிங் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், கையில் கேமரா வைத்துள்ள ஒருவர் ஒரு காலில் ஷூ இல்லாமல் இருக்கும் படம் வைக்கப்பட்டு வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டில், “ஷூ திருட்டில் திமுக. பேரணியில் செய்தியாளர்களின் ஷூக்களை திருடி திமுகவினர் அராஜகம். ஷூவை திருடிய திமுக” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை வாங்கசிரிக்கலாம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Vétrí Sãrø Mc என்பவர் 23 டிசம்பர் 2019 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தி.மு.க பேரணி நடத்தியது. இந்த பேரணியால் கலவரம் நிகழும் என்று கூறி பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அதை மீறி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கவே, பேரணிக்கு தடை விதிக்க கோரி இந்திய மக்கள் மன்றம் என்ற அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. பேரணிக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், அனுமதியின்றி நடைபெறும் பேரணியை முழுவதுமாக வீடியோ எடுக்க உத்தரவிட்டது.

tamil.oneindia.comArchived Link 1
tamil.news18.comArchived Link 2

கலவரம் நிகழும், மிகப்பெரிய அச்சுறுத்தல், பொது சொத்துக்கு சேதம் ஏற்படும் என்று எல்லாம் தி.மு.க பேரணி பற்றி அச்சமூட்டப்பட்டது. ஆனால், எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி பேரணி அமைதியாக நடந்தது. இந்த நிலையில், பேரணியில் செய்தியாளர்களின் ஷுக்களை திருடி தி.மு.க-வினர் அராஜகம் என்று நியஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

DMK 3.png
dinamani.comArchived Link

தி.மு.க சார்பில் நடந்தது பேரணிதான். அதில், காலணி, ஷூவை கழற்றிவைத்துவிட்டு பங்கேற்க வேண்டும் என்று அறிவிக்கவில்லை. அப்படி இருக்கும்போது பத்திரிகையாளரின் ஷூ எப்படி காணாமல் போகும் என்ற கேள்வி எழுந்தது. மேலும் படத்தில் அவரது மற்றொரு காலில் ஷூ இருப்பது தெரிகிறது. ஒரு ஷூவை திருடிக்கொண்டு போய் என்ன செய்யப்போகிறார்கள். கூட்ட நெரிசலில் சிக்கி ஷூ தொலைந்ததா அல்லது வேறு சம்பவத்தின் படத்தை பகிர்ந்துள்ளார்களா என்ற கேள்வி எழுந்தது.

DMK 4.png

படத்திலேயே ஷூவை தொலைத்த நபர் கையில் மைக் வைத்திருப்பதும் அதில் புதிய தலைமுறை லோகோ இருப்பதும் தெரிந்தது. எனவே, புதிய தலைமுறையில் பணியாற்றும் ஊடகவியலாளரைத் தொடர்புகொண்டு நியூஸ் கார்டில் உள்ள சம்பந்தப்பட்ட நபர் யார் என்று விசாரித்தோம். அப்போது அவர்கள், இது வெறும் வதந்தி. இது பற்றி அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் என்று ரமேஷ் முருகேசன் என்ற ட்வீட்டர் ஐடி லிங்கை நமக்கு அனுப்பினர்.

Archived Link

அதில் “விளக்கம். என் ஷு கூட்ட நெரிசலில் சிக்கி கழன்று விழுந்துவிட்டதே தவிர, அதனை யாரும் திருடவில்லை. Don’t circulate fake cards” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில், செய்தியாளர்களின் ஷூவை தி.மு.க-வினர் திருடினார்கள் என்ற நியூஸ்கார்டு விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பேரணியில் செய்தியாளர்களின் ஷூவைத் திருடிய திமுக-வினர்?- ஃபேஸ்புக் வில்லங்கம்

Fact Check By: Chendur Pandian 

Result: False