FACT CHECK: குஷ்புவிடம் தவறாக நடக்க முயன்று அடிவாங்கிய பாஜகவினர்?- பழைய வீடியோ!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

குஷ்புவிடம் தவறாக நடக்க முயன்று அடிவாங்கிய பா.ஜ.க-வினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

கூட்ட நெரிசலில் செல்லும் குஷ்பு, திடீரென்று திரும்பி இளைஞர் ஒருவரை அடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குஷ்பு விடம் தவறாக நடக்க முயன்று அடி வாங்கிய பாஜக-வினர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த வீடியோ பதிவை திமுக இணையதள நண்பர்கள் குழு என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் ‎A R M Viknesh‎ என்பவர் 2020 அக்டோபர் 13ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளராக இருந்த குஷ்பு சுந்தர், கடந்த அக்டோபர் 12, 2020 அன்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பினார். அன்றே அவர் பாரதிய ஜனதா கட்சியிலும் சேர்ந்தார். அதற்குள்ளாக அவரைப் பற்றி சமூக ஊடகங்களில் பல விதமான வதந்திகள் வேகமாக பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் குஷ்புவிடம் தவறாக நடக்க முயன்று அடி வாங்கிய பா.ஜ.க-வினர் என்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதை பலரும் ஷேர் செய்து வரவே, இது உண்மையா, எப்போது நடந்தது என்று ஆய்வு செய்தோம்.

2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது பெங்களூருவில் பிரசாரம் செய்ய சென்ற குஷ்புவிடம் காங்கிரஸ் தொண்டர் சில்மிஷம் செய்து அடி வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே, அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை இப்போது பகிர்ந்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் வந்தது.

எனவே, 2019 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் வெளியான வீடியோவைத் தேடினோம். அப்போது அந்த வீடியோவைத்தான் தற்போது பகிர்ந்திருப்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: theweek.in I Archive 1 I zeenews.india.com I Archive 2

2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரிஸ்வான் அர்சத்ஐ ஆதரித்து குஷ்பு பிரசாரம் செய்தார். அப்போது இந்திராநகரில் உள்ள ரிஸ்வான்அர்சத் வீட்டுக்கு குஷ்பு சென்றார். குஷ்புவுக்கு பின்னால் வந்த வாலிபர் ஒருவர் அவரிடம் முறைகேடாக நடக்க முயற்சி செய்தார். இதனால், அந்த வாலிபர் கன்னத்தில் பளார் என்று அறைவிட்டார். 

அசல் பதிவைக் காண: maalaimalar.com I Archive

குஷ்புவின் துணிச்சல் மற்றும் வலிமையை அப்போது பலரும் பாராட்டினர். காங்கிரஸ் கூட்டங்களில் இப்படித்தான் நிகழும் என்று அப்போது பா.ஜ.க-வினர் கிண்டல் செய்ததாகவும் செய்தி நமக்கு கிடைத்தது.

இதன் மூலம் 2019ம் ஆண்டு நடந்த வீடியோவை தற்போது குஷ்பு பா.ஜ.க-வில் இணைந்துள்ள நிலையில், பா.ஜ.க தொண்டர்கள் செய்தது போன்று மாற்றிப் பதிவிட்டிருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

Archive

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், 2019 நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் நடந்த வீடியோவை எடுத்து தவறான தகவல் சேர்த்து பதிவிட்டிருப்பதாக, ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:குஷ்புவிடம் தவறாக நடக்க முயன்று அடிவாங்கிய பாஜகவினர்?- பழைய வீடியோ!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply