
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் இயக்கிய சுதேசி கப்பல் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

பழைய கால பாய்மர துடுப்பு கப்பல் ஒன்றின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். வெளிநாட்டில் உள்ளது போல் உள்ளது. நிலைத் தகவலில், “அரிய புகைப்படம். வ.உ.சிஅய்யா நடத்தி வந்த சுதேசி கப்பல் இது தான். காணக்கிடைக்காத புகைப்படம். அனைவருக்கும் தெரியப்படுத்தவும்” என்று குறிப்பிட்டு இருந்தனர்.
Gold என்ற ஃபேஸ்புக் பெயர் கொண்ட நபர் 2018ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதை 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
கப்பலோட்டிய தமிழன் என்று தமிழர்களால் அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனாரின் கப்பல் என்று பகிரப்பட்டுள்ளது. பார்க்க மிகப் பழமையான சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய கப்பல் போல உள்ளது. எனவே, இந்த படத்தைக் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.
நம்முடைய ஆய்வில், பல சமூக ஊடகங்களில் இந்த புகைப்படம் பகிரப்பட்டு வந்துள்ளது தெரிந்தது. ஆனால், எங்கே எப்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.

தொடர்ந்து தேடியபோது, இந்த படம் பற்றிய சிறு குறிப்பு கிடைத்தது. அதில், பார்சிலோனாவில் உள்ள பைரேட் என்று அழைக்கப்படும் கடற்கொள்ளையர் கப்பல் (“Pirates” ship Neptuno at Barcelona docks) என்று குறிப்பிட்டு இந்த கப்பல் தொடர்பான பல படங்களை பதிவிட்டு இருந்தனர்.
“Pirates” ship Neptuno at Barcelona docks என்று கூகுளில் பதிவிட்டு தேடினோம். அப்போது இந்த கப்பல் பற்றிய முழு விவரமும் நமக்குக் கிடைத்தது. இந்த கப்பல், 17ம் நூற்றாண்டைச் சார்ந்த ஸ்பெயின் நாட்டுக் கப்பலின் மாதிரி என்று குறிப்பிட்டு இருந்தனர். பைரேட் என்ற படத்துக்காக 1985ம் ஆண்டு இந்த கப்பல் கட்டப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து பல திரைப்படங்கள், தொலைக்காட்சி சீரியல்கள் இந்த கப்பலில் படமாகப்பட்டது என்ற தகவலும் நமக்குக் கிடைத்தது. இது பற்றி விவரிவாக காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
வ.உ.சிதம்பரனாரின் கப்பல் எப்படி இருக்கும், அது பற்றி தகவல் ஏதும் உள்ளதா என்று தேடினோம். வ.உ.சிதம்பரம் இயக்கிய கப்பல் என்று சில படங்கள் கிடைத்தன. இந்திய அரசு வெளியிட்ட தபால்தலையில் ஒரு கப்பல் படமும் இருந்தது. ஆனால், அது அவர் இயக்கிய, அவர் சிறையில் இருக்கும்போது விற்பனை செய்யப்பட்ட கப்பலின் படமா அல்லது மாதிரியா என்ற தகவல் நமக்குக் கிடைக்கவில்லை.

இன்னொரு இணையதளத்தில் 1907ம் ஆண்டு எடுக்கப்பட்ட கொழும்புக்கு பயணம் செய்த முதல் இந்தியரின் பயணிகள் கப்பல் என்று ஒரு படம் கிடைத்து. அதுவும் நீராவியில் இயங்கும் கப்பலாக இருந்தது. விகடன் வெளியிட்ட வ.உ.சிதம்பரனார் பற்றிய கட்டுரை ஒன்றில் கப்பல் படம் ஒன்று இருந்தது. அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்திய அரசு வெளியிட்ட தபால்தலை படமும், இணையதளத்தில் நமக்குக் கிடைத்த வ.உ.சி கப்பல் என்று சொல்லப்பட்ட படமும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள பாய்மரக் கப்பல் போல இல்லை.
நம்முடைய ஆய்வில்,
வ.உ.சிதம்பரனார் கப்பல் என்று கூறப்படும் படம் பல சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
ஸ்பெயினின் பார்சிலோனாவில் அந்த கப்பல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
1985ம் ஆண்டு அந்த கப்பல் கட்டப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசு வெளியிட்ட வ.உ.சிதம்பரனார் தபால்தலையில் கப்பலுடன் வ.உ.சி உள்ளது கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், வ.உ.சிதம்பரனாரின் கப்பல் என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் படம் உண்மையில் வ.உ.சிதம்பரனார் இயக்கிய கப்பல் இல்லை… ஸ்பெயினில் உள்ள ஒரு கப்பலைக் காட்டி வ.உ.சிதம்பரனார் இயக்கிய கப்பல் என்று தவறான தகவல் பகிர்ந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:வ.உ.சிதம்பரம் இயக்கிய சுதேசி கப்பல்! – ஃபேஸ்புக் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
