கி.வீரமணி பல்லக்கில் வந்ததாக பரவும் தகவல் உண்மையா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

கி.வீரமணி பல்லக்கில் பவனி வந்தது போலவும், அவர் வரலாம் ஆதீனம் வரக்கூடாது என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் கி.வீரமணி பல்லக்கில் பவனி வந்தாரா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சாரட் வண்டியில் கி.வீரமணி அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் யாரோ வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “இந்த தருதலையை சுமக்கலாம்… ஆதீனத்தை சுமக்க கூடாதாம்..?!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை BJP Thalli என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 மே 5ம் தேதி பதிவிட்டுள்ளது. இதைப் போல பலரும் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் உள்ள சைவ மடங்களில் ஆண்டு தோறும் மடாதிபதிகளை பல்லக்கில் அமரவைத்து ஊர்வலம் அழைத்துச் செல்வார்கள். இதற்கு பட்டின பிரவேசம் என்று பெயர். மனிதனை மனிதனே சுமக்கும் பல்லக்கில் பட்டின பிரவேசம் மேற்கொள்ள திராவிடர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் 2022 மே மாதம் தருமபுரம் ஆதீனம் பட்டினபிரசேவம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில், பல்லக்கில் சுமந்து செல்லும் நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடைவிதித்தார். 

மயிலாடுதுறை மாவட்ட தி.க செயலாளர் தளபதிராஜ் “பட்டினப்பிரவேசம் என்பது பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய நிகழ்ச்சி என்கிறார்கள். குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் உள்ளிட்டவையும் கூட பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாரம்பரிய நிகழ்வுகள்தான். நவீன காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது இல்லை. 

முன்னாள் முதல்வர் கருணாநிதி 1973இல் மனிதனை மனிதன் இழுத்துச்செல்லும் கை ரிக்ஷாக்களை ஒழித்து கை ரிக்ஷா உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கியதுடன் அவர்களுக்கு இலவசமாக சைக்கிள் ரிக்ஷாக்களை வழங்கினார். அதே அடிப்படையில்தான் மனிதனை மனிதன் சுமந்து செல்வதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். பாரம்பரியமான விழாவை நாங்கள் எதிர்க்கவில்லை. பல்லக்கில் மனிதனை மனிதன் சுமந்து செல்வதைத்தான் எதிர்க்கிறோம். அதற்குப் பதிலாக சப்பரத்திலோ, மின் மோட்டார்கள் பொருத்திய வாகனத்திலோ செல்ல எதிர்ப்பு இல்லை” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி (பல்லக்கில்) பவனி சென்றது போலவும், அவர் மட்டும் செல்லலாம் ஆதீனம் செல்லக் கூடாதா என்றும் கேள்வி எழுப்பி சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். கி.வீரமணி பல்லக்கில் சென்றாரா என்று மட்டும் ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2018ம் ஆண்டு நடந்த  திராவிடர் மாணவர் கழகப் பவள விழா மாநாட்டில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று தெரிந்தது. அது தொடர்பாக தேடினோம். அப்போது திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் இந்த மாநாடு தொடர்பாக 2018ல் வெளியிட்ட பதிவு நமக்குக் கிடைத்தது. அதில், கி.வீரமணி குதிரை சாரட் வண்டியில் அமர்ந்து வருவது தெரிந்தது. 

உண்மைப் பதிவைக் காண: Facebook I keetru.com I Archive 2 I vikatan.com I Archive 3

தொடர்ந்து தேடிய போது, சாரட் வண்டியில் அமர்ந்து வந்தது குறித்து அப்போது மிகப்பெரிய அளவில் விமர்சனம் எழுந்திருப்பதும் தெரிந்தது. மேலும், சாரட் வண்டியில் வந்தது ஏன் என்று ஆனந்த விகடன் இதழுக்கு கி.வீரமணி 2018ல் பேட்டி அளித்திருப்பதும் தெரியவந்தது. அதில், “குதிரை வண்டியில் நான் ஏறி வந்ததால், குதிரைக்கு வலி வந்துவிட்டது என்று சொன்னால்கூட அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால், இவர்களுக்கு ஏன் வலி வந்தது என்றுதான் எனக்குப் புரியவில்லை” என்று கி.வீரமணி பதில் அளித்திருந்தார். 

இதன் மூலம் கி.வீரமணி மனிதனை மனிதனே சுமக்கும் பல்லக்கில் அமர்ந்து வரவில்லை, குதிரை வண்டியில்தான் அமர்ந்து வந்தார் என்பது உறுதியாகிறது. மேலும், பட்டின பிரவேசம் நிகழ்ச்சியே நடக்கக் கூடாது என்று திராவிடர் கழகம் கூறவில்லை. மனிதனை மனிதன் சுமந்து செல்லாமல் வேறு வழிகளில் நடத்தலாம் என்று அவர்கள் கூறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கி.வீரமணி பல்லக்கில் அமர்ந்து பயணித்தார் என்ற வகையில் பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பல்லக்கில் பவனி வந்தது போன்று பகிரப்படும் பதிவு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கி.வீரமணி பல்லக்கில் வந்ததாக பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply