
‘’என் மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால்தான் நடிகர் கமலை விட்டு பிரிந்தேன்,’’ என்று நடிகை கௌதமி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
#பொம்பளபொருக்கிகமல்
Twitter trend
நடிகர் கமல், நடிகை கௌதமியின் மகள் சுப்புலட்சுமியுடன் இருக்கும் புகைப்படமும், நடிகை கௌதமியுடன் சுப்புலட்சுமி இருக்கும் படத்தையும் இணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. அந்த படத்தில், “என் மகளை கமல் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால்தான் கமலை விட்டு பிரிந்தேன்: கௌதமி குற்றச்சாட்டு” என்று இருந்தது. படத்தின் கீழே, பொம்பளைப்பொருக்கிகமல் என்று ஹேஷ்டேக் இருந்தது.
இந்த பதிவை, Kanna Pandiyan SKP என்பவர் மே 13ம் தேதி வெளியிட்டுள்ளார். ட்விட்டர் டிரெண்ட் என்றும் குறிப்பிட்டுள்ளார். கௌதமி இதை எப்போது சொன்னார் என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. இது உண்மை என்று நம்பி பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில தினங்களுக்கு முன்பு (மே 12, 2019) அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய மக்கள் நீதி மைய தலைவர் கமல், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்றார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. கமலுக்கு எதிராக இந்து அமைப்புக்கள் மிக மோசமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அரசியல் ரீதியாக கமல் பேசியதற்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து ட்விட்டரில் கருத்து கூறியிருந்தார் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்.
அனைத்துக்கும் மேலாக, தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “மக்கள் நீதி மையத் தலைவர் கமல் நாக்கை அறுக்க வேண்டும்” என்றார். இதுவும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில், கமலைப் பற்றி இந்த பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரம் எதுவும் அளிக்கவில்லை. இருப்பினும், இதில் உண்மை உள்ளதா என்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். இது தொடர்பாக நடிகை கௌதமி ஏதேனும் பேட்டி அளித்திருக்கிறாரா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

நம்முடைய தேடலில், நடிகர் கமலை விட்டு பிரிந்தது குறித்து நடிகை கௌதமி வெளியிட்ட அறிக்கை கிடைத்தது. மேலும், ஆடை வடிவமைப்பாளாக பணியாற்றியதற்கான சம்பள பாக்கி தொடர்பாகவும், கமலின் மய்யம் இணையதளம் பதிவு தொடர்பாக சர்ச்சை எழுத்தபோதும் கௌதமி அளித்த விளக்கங்கள் நமக்குக் கிடைத்தன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்…

நடிகர் கமலும் – ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நடிகை கௌதமியும் 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவந்தனர். கருத்துவேறுபாடு காரணமாக கமலைவிட்டு பிரிவதாக கௌதமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், “முதலில் நான் ஒரு தாய். எனது குழந்தைக்குப் பொறுப்பானவளாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. என் குழந்தைக்கு நான் சிறந்த தாயாக இருக்க விரும்புகிறேன். அவ்வாறாக என் குழந்தைக்கு நான் ஒரு சிறந்த தாயாக இருக்க வேண்டுமானால் எனக்குள் அமைதி நிலவ வேண்டும். அந்த அமைதியைப் பெறுவதற்காகவே இந்த முடிவு” என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதன்பிறகு, தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதற்கான சம்பள பாக்கி தொடர்பாக கௌதமி தன்னுடைய பிளாக்கில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதன்பிறகு 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கமலின் மய்யம் இணையதளம் ஒரு கிறிஸ்தவ மதபோதக அமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதில், கமல் பெயருடன் கௌதமியின் பெயரும் இருந்ததாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து கௌதமி தன்னுடைய பிளாகில் மீண்டும் ஒரு விளக்கம் அளித்திருந்தார்.
அதில், “கமல் உடன் அலுவல் ரீதியாகவோ, குடும்ப ரீதியாகவோ மீண்டும் மீண்டும் எனது பெயர் பயன்படுத்தப்படுவது என்னை மேன்மேலும் காயப்படுத்துகிறது. நாங்கள் இருவரும் மனமொத்து அக்டோபர் 2016ல் பிரிந்துவிட்டோம்.
திரு.கமல்ஹாசனுடன் இணைந்து இலக்கிய ரீதியான ஒரு இணையதளத்துக்கு இயக்குநராகப் பொறுப்பேற்றேன். ஆனால், அது முழுமை பெறவில்லை. நான் அவரிடமிருந்து பிரிந்தவுடன், அந்தப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டேன். அதற்கும், நான் எந்தவொரு ஊதியமும் பெறவில்லை. எங்களுக்குள்ளிருந்த நன்னடத்தை, புரிந்துணர்வு எல்லாம் தறிகெட்ட பின்னர்தான் பிரிந்துவிட வேண்டும் என்ற முடிவை நான் எடுத்தேன்.
எங்களுடைய பிரிவுக்குக் காரணமாக நடிகை ஸ்ருதிஹாசன் சொல்லப்படுவதில் எள்ளவும் உண்மையில்லை. இருவர் பிரிவிற்கு, எந்தவொரு மூன்றாவது நபரும் எப்போதும், காரணமாக இருக்க முடியாது” என்று கூறியிருந்தார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த விளக்கத்தில், தங்களின் பிரிவுக்கு மூன்றாவது நபர் யாரும் காரணம் இல்லை என்று மிகத் தெளிவாக கௌதமி கூறிவிட்டார். இப்படி எந்த ஒரு அறிக்கையிலும் தன்னுடைய மகளுக்கு நடிகர் கமல் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கௌதமி கூறவில்லை. இதன் மூலம் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதியாகிறது.
இந்த பதிவை வெளியிட்டவரின் பின்னணியை ஆய்வு செய்தோம். தன்னை பற்றி கூறுகையில், “தேசியத்தை தெய்வீகமாக கொண்ட மறத்தமிழன் ..!” என்று குறிப்பிட்டுள்ளார். இவருடைய பதிவுகள் எல்லாம் பாரதிய ஜனதா கட்சி ஆதரவு, தி.மு.க எதிர்ப்பு நிலைப்பாட்டிலேயே இருந்தன. பிற மத எதிர்ப்பு பதிவுகளும் இருந்தன.
இதன்மூலமாக, கமல்ஹாசனின் அரசியல் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சுயலாபத்திற்காக, இப்பதிவு வெளியிடப்பட்டதாக, தெரியவருகிறது.
நாம் மேற்கொண்ட ஆய்வில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பது போன்று நடிகை கௌதமி எந்த ஒரு புகாரையும் கூறவில்லை. அது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது, விஷமத்தனமானது என்று நிரூபிக்கப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“என் மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கமல்” – கௌதமி சொன்னது உண்மையா?
Fact Check By: Praveen KumarResult: False
