
108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்படுத்தப்படாமல் வெறுமனே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படம் தமிழகத்தில் எடுக்கப்பட்டது போன்று பலரும் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
வேறு ஒருவர் வெளியிட்ட பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை வெளியிட்டுள்ளார்கள். அதில், பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு, துருப்பிடித்துச் சிதைந்து கொண்டிருக்கும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் படங்கள் பகிரப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில், “குப்பையாகிக்கொண்டிருக்கிறது மக்களின் வரிப்பணம்… கடும் கோபத்துடன் பகிர்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த படத்தை நாம் தமிழர் கட்சி -கன்னியாகுமரி மாவட்டம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 செப்டம்பர் 30ம் தேதி பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மக்கள் உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக வாங்கப்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படாமல் சிதைந்து வருவது வேதனை அளிக்கிறது. பதில் கூறியுள்ளது போல மக்களின் வரிப்பணம் குப்பையாகிக் கொண்டிருக்கிறது என்பது உண்மைதான்.
இந்த பதிவில் இப்புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லாத நிலையில் தமிழகத்தில் எடுக்கப்பட்டது போன்று “நாம் ஆட்சிக்கு வந்து மீட்டெடுப்போம்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இந்த நிலை, என்ற அளவில் பலரும் இதை ஷேர் செய்து வந்திருப்பதைக் காண முடிந்தது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.
தமிழ்நாட்டில் இயக்கப்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் தமிழக அரசின் சின்னம் இருக்கும். ஆனால், இந்த படத்தில் தமிழக அரசின் சின்னம் இல்லை. வேறு ஒரு சின்னம் இருந்தது. மேலும், ஆம்புலன்ஸ் வாகனத்தில் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டது போல இருந்தது.
எனவே, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. 2018ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான திக்விஜய் சிங் உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் ஆட்சிக் காலத்தில் வாங்கப்பட்ட ஆம்புலன்ஸை யோகி ஆதித்யநாத் பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்திருப்பதாக கூறி பதிவிட்டிருந்தது தெரிந்தது. அந்த படம் மிகவும் தெளிவாக இருந்தது. அதில் எழுதப்பட்டு இருப்பது தெலுங்குதான் என்பது தெளிவாகத் தெரிந்தது.
சாக்ஷி என்ற தெலுங்கு ஊடகத்தில் இந்த புகைப்படம் 2018 செப்டம்பர் 22ம் தேதி வெளியிடப்பட்டு இருந்தது. அதில் 108 ஆம்புலன்ஸை தாக்கிய பேரழிவு என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த படம் மிகவும் தெளிவாக இருந்தது.
அதில் ஆந்திர அரசின் சின்னம் மற்றும் “Government of Andhra Pradesh” தெளிவாகத் தெரிந்தது. இதன் மூலம் இந்த புகைப்படம் ஆந்திரப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
ஃபேஸ்புக் பதிவர்கள் மக்களின் வரிப் பணம் குப்பையாகிக் கொண்டிருக்கிறது என்ற தகவல் உண்மைதான் என்றாலும், இது தமிழகத்தில் எடுக்கப்பட்டதாக நினைத்து பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆந்திரப் பிரதேசத்தில் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆம்புலன்ஸ் என்று குறிப்பிட்டிருந்தால் வீண் குழப்பங்களைத் தவிர்த்திருக்க முடியும்.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் போதுமான தகவல் இல்லாததால் தவறான புரிதலை ஏற்படுத்துகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:துருப்பிடித்து நிற்கும் 108 ஆம்புலன்ஸ் தமிழகத்தைச் சேர்ந்தது இல்லை!
Fact Check By: Chendur PandianResult: Missing Context
