
நெல்லைக் கண்ணன் கைது செய்யப்படாவிட்டால் மெரினா காந்தி சிலை முன்பு தீக்குளிப்பேன் என்று எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்றுடன் திரைப்பட காட்சி கொலாஜ் செய்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா எச்சரிக்கை! இன்று இரவுக்குள் நெல்லை கண்ணன் கைது செய்யப்படாவிட்டால் நாளை பிற்பகல் 3 மணிக்கு மெரினா காந்தி சிலை முன்பு நான் தீ குளிப்பேன்” என்று உள்ளது. கீழே உள்ள திரைப்பட காட்சியில், “அய்யோ இந்த சந்தோசமான செய்தியை எல்லாருக்கிட்டேயும் சொல்லி பரப்பனுமே” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, டீ கடைகாரனின் பித்தலாட்டம் 2019 என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 டிசம்பர் 31ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நியூஸ் கார்டு பார்க்க அப்படியே நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போலவே உள்ளது. பெரிய அளவில் வேறுபாடு தெரியவில்லை. நன்கு கவனித்துப் பார்க்கும்போது, நான் தீ குளிப்பேன் என்று உள்ள பகுதி மட்டும் வித்தியாசமாக இருப்பதைக் காண முடிந்தது. தமிழ் ஃபாண்ட் வித்தியாசமாகவும் பின்னணி வேறு நிறத்திலும் இருப்பதை காணலாம்.

உன்மையில் எச்.ராஜா என்ன கூறினார் என்று செய்தியைப் பார்த்தோம். கூகுளில் “நெல்லை கண்ணன் கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம் எச்.ராஜா” என்று டைப் செய்து தேடியபோது, எச்.ராஜா அளித்த பேட்டி பற்றிய செய்திகள் கிடைத்தன.

Search Link | hindutamil.in | Archived Link |
இந்து தமிழ் திசை வெளியிட்ட செய்தியில், “நெல்லை கண்ணனை இன்று இரவே கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாளை மெரினாவில் போராட்டம் நடத்துவேன்” என்று எச்.ராஜா எச்சரிக்கை விடுத்தார் என்று குறிப்பிட்டிருந்தனர். பல செய்தி ஊடகங்களில் இந்த செய்தி வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது.
இது தொடர்பான வீடியோ ஆதாரம் உள்ளதா என்று தேடியபோது, தந்தி டி.வி வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதில், எச்.ராஜா பேசும்போது “இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகிய நான்கு பேரும் சென்னை கடற்கரை காந்தி சிலை முன்பு நெல்லை கண்ணன் கைது செய்யப்படும் வரை அமர்ந்து போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறுவது தெளிவாக இருந்தது.
Archived Link |
எனவே, இது தொடர்பாக நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டை தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற அசல் நியூஸ் கார்டு கிடைத்தது. அதில், “இன்று இரவுக்குள் நெல்லை கண்ணன் கைது செய்யப்படாவிட்டால் நாளை பிற்பகல் 3 மணிக்கு மெரினா காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தப்படும்!” என்று இருந்தது. “போராட்டம் நடத்தப்படும்” என்ற பகுதி நீக்கப்பட்டு “நான் தீ குளிப்பேன்” என்று சேர்க்கப்பட்டது உறுதியானது.
Archived Link |
நம்முடைய ஆய்வில்,
எச்.ராஜா பேசிய வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது.
எச்.ராஜா பேச்சு தொடர்பாக வெளியான செய்திகள் கிடைத்துள்ளன.
நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட அசல் நியூஸ் கார்டு கிடைத்துள்ளது.
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு திருத்தப்பட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “நெல்லை கண்ணன் கைது செய்யப்படாவிட்டால் மெரினா காந்தி சிலை முன்பு நான் தீக்குளிப்பேன்” என்று எச்.ராஜா கூறியதாகப் பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:நெல்லைக் கண்ணனை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்பேன் என்று எச்.ராஜா அறிவித்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False
