
‘’தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் முஸ்லீம் பண்டிகைகள் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுள்ளன,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
எனும் ஃபேஸ்புக் ஐடி, ஜனவரி 2, 2020 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், திட்டமிட்டே தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் முஸ்லீம் பண்டிகைகளை பாஜக புறக்கணித்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவலை முதலில் Saba Naqvi என்பவர் கடந்த 29 டிசம்பர், 2019 அன்று பகிர்ந்திருந்தார். அந்த பதிவில் பிரதமர் அலுவலகம் மற்றும் நரேந்திர மோடி உள்ளிட்டோரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஐடிகளை டேக் செய்து அவர் கேள்வியும் எழுப்பியிருந்தார்.
இந்த தகவல் பல தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தவே, சிலர் இதுபற்றிய உண்மையையும் சுட்டிக்காட்டி அவருக்கு பதில் கூறியிருந்தனர்.
அதேசமயம், மத்திய அரசு விடுமுறை நாட்கள் பட்டியலில் முஸ்லீம் பண்டிகைகள் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, மத்திய அரசு இதில் பாரபட்சமாக செயல்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் ஒரு ட்விட்டர் பயனாளர் கமெண்ட் பகிர்ந்திருந்தார்.
எனினும், உண்மை புரியாமல் இதே தகவலை Kamran Shahid என்பவர் பகிர, அது படிப்படியாக ட்விட்டரில் இருந்து பரவி, ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் என மற்ற சமூக ஊடகங்களிலும் பரவ தொடங்கியது.
மேலோட்டமாக, மேற்கண்ட ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பதிவுகளை பார்த்தால் மோடி அரசு இஸ்லாமியர்களை புறக்கணிப்பதாகவும், அநீதி இழைப்பதாகவும் தோன்றும். உண்மையில், தேசிய மக்கள்தொகை பதிவேடு 2020ல் முஸ்லீம் பண்டிகைளுக்கு முக்கியத்துவம் தராததற்கு ஒரு காரணம் உள்ளது. ஆம், இஸ்லாமிய பண்டிகைகள், இஸ்லாமிய நாள்காட்டியின்படி அமைகின்றன. அதாவது, சந்திரனை மையமாக வைத்து கணிக்கப்படுவதுதான் இஸ்லாமிய நாள்காட்டி.
ஆனால், தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்காக, மத்திய அரசு பயன்படுத்துவது கிரிகோரியன் காலண்டர் ஆகும். இது சூரியனை மையமாக வைத்து கணிக்கப்படுவதால், எந்த ஆண்டாக இருந்தாலும் கிரிகோரியன் காலண்டரில் இந்து மத மற்றும் கிறிஸ்தவ மத பண்டிகைகள் தேதி மாறாமல் அப்படியே வரும். ஆனால், கிரிகோரியன் காலண்டரின்படி பார்த்தால் இஸ்லாமிய பண்டிகைகள் ஒரு ஆண்டு ஒரு தேதியிலும் அடுத்த ஆண்டில் வேறு ஒரு தேதியிலும் தள்ளிப் போகும்.
எனவேதான், தேசிய மக்கள்தொகை பதிவேடு 2020ல் கிரிகோரியன் காலண்டரின்படி, இஸ்லாமிய பண்டிகைகள் பற்றி குறிப்பிடாமல் அச்சிட்டுள்ளனர். இப்படி செய்வதால், ஒருவரின் பிறந்த தேதி பற்றி கணக்கெடுக்கும்போது, எளிதாக, அவர் எந்த மாதம், எந்த தேதியில் பிறந்தார் எனக் குறிப்பிட வசதியாக இருக்கும். ஏனெனில், இந்தியர்களில் பலருக்கு பிறந்த தேதி நினைவிருப்பதில்லை. முக்கிய பண்டிகைகள், மாதங்களை மையமாக வைத்தே அவர்கள் பிறந்த தேதியை சொல்வது வழக்கம்.
இதுபற்றி பல ஊடகங்களும் உண்மை கண்டறியும் சோதனை செய்து, தகவல் வெளியிட்டுள்ளனர்.

TOI Link | Thelogicalindian.com Link | Opindia.com Link |
இது மட்டுமின்றி, 2011ம் ஆண்டு வெளியான தேசிய மக்கள்தொகை பதிவேட்டிலும் இஸ்லாமிய பண்டிகைகள் குறிப்பிடப்படவில்லை. அப்போது பாஜக அரசு ஆட்சியில் இல்லை. 2011 காலக்கட்டத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் ஆட்சியில் இருந்தது.

Twitter Link | Archived Link |
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) தேசிய மக்கள்தொகை பதிவேடு கிரிகோரியன் காலண்டரை மையமாக வைத்து வெளியிடப்படுவதாகும். கிரிகோரியன் காலண்டர் சூரியனை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுகிறது.
2) ஆனால், இஸ்லாமிய நாள்காட்டி என்பது சந்திரனை மையமாக வைத்துக் கணக்கிடப்படுவதால், அது ஆண்டுதோறும் ஒரே தேதியில் வர வாய்ப்பில்லை. உதாரணமாக, ரம்ஜான் பண்டிகை 2020ம் ஆண்டு ஒரு தேதியில் வருகிறது எனில், அது 2021ல் வேறு ஒரு தேதியில் வரும்.
3) இந்தியர்கள் பலரும் பிறந்த தேதியை சரியாக நினைவு வைத்துக் கொள்வது கிடையாது. அவர்கள் பிறந்த தேதியை ஒட்டி வரும் ஆங்கில மாதம் அல்லது முக்கிய பண்டிகை ஏதேனும் ஒன்றை மையமாக வைத்தே, பிறந்த தேதியை கணக்கிட்டு சொல்வார்கள். தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கு, உதவும் வகையில் கிரிகோரியன் காலண்டர் பின்பற்றப்படுகிறது.
4) மோடியின் அரசு வெளியிட்ட 2020 தேசிய மக்கள்தொகை பதிவேடு மட்டுமல்ல, ஏற்கனவே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2011ல் வெளியிட்ட தேசிய மக்கள்தொகை பதிவேட்டிலும் இஸ்லாமிய பண்டிகைகள் குறிப்பிடப்படவில்லை.
எனவே, உண்மை தெரியாமல் எடுத்த எடுப்பில் பாஜக, ஆர்எஸ்எஸ் மீதுள்ள சுய அரசியல் காரணங்களை மையப்படுத்தி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் பகிரப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:2020 தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் முஸ்லீம் பண்டிகைகள் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: Partly False
