
ஒரு முறை பயன்படுத்தும் பேப்பர் செல்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கடை ஒன்றில் பொருட்கள் வாங்க வந்த இருவருக்கு விற்பனையாளர் பேப்பர் செல்போனை அறிமுகம் செய்வது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஒரு முறை பயன்படுத்தும் பேப்பர் அளவு கொண்ட செல்போனில் இருந்து அழைத்தால் போன் பேச முடிகிறது, அதில் எழுதினால் நம்முடைய மொபைல் போனுக்கு மெசேஜ் வருவது போன்று வீடியோ உள்ளது.
நிலைத் தகவலில், “உலகம் எங்கேயோ போய்க்கொண்டு இருக்கின்றது … ஒரு முறை உபயோகப்படுத்தும் பேப்பர் செல்போன் அறிமுகம்…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Nazeer Nazeer என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜனவரி 21ம் தேதி பதிவிட்டுள்ளார்.

பதிவைக் காண: Facebook
உண்மை அறிவோம்:
செல் போனை எவ்வளவு சிறியதாக மாற்ற வேண்டுமோ, அவ்வளவு சிறியதாக மாற்றித் தரத் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. எனவே, பேப்பர் சைஸ் செல்போன் என்பது எதிர்காலத்தில் நடக்கலாம். தற்போது பேப்பர் செல்போன் அறிமுகம் செய்யப்பட்டிருந்தால், எங்கு அறிமுகம் செய்யப்பட்டது, அதன் விலை எவ்வளவு என்பது உள்ளிட்ட தகவல் வெளியாகி இருக்கும். எனவே, இந்த வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.
வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பல ஆண்டுகளாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பது தெரிந்தது. தொடர்ந்து தேடிய போது, இந்த வீடியோ 2016ம் ஆண்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. அதில், மைக்கேல் கார்பனாரோ (Michael Carbonaro) என்ற மேஜிக் நிபுணர் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தந்திரங்களை செய்கிறார். பிராங்க் செய்வதில் நிபுணர்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

மைக்கேல் கார்பனாரோ, மேஜிக் நிபுணர் என சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது, அவருடைய இணையதளம் நமக்குக் கிடைத்தது. அதில் சுய விவர குறிப்பு பகுதியில் தன்னை மேஜிக் நிபுணர் என்று மைக்கேல் கார்பனோரோ குறிப்பிட்டிருந்தார். எனவே, பேப்பர் செல்போன் என்பது பிராங்க் வீடியோ என்பது உறுதியானது.

உண்மைப் பதிவைக் காண: michaelcarbonaro.com I Archive
தற்போது பேப்பர் சைஸ் செல்போன் எதுவும் விற்பனைக்கு உள்ளதா என்று பார்த்தோம். ஓரளவுக்கு பேப்பர் சைஸ் போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவை எல்லாம் ஆய்வு நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டு சில செய்திகள் கிடைத்தன. இதன் மூலம் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பேப்பர் சைஸ் போன் அறிமுகம் செய்யப்பட்டது என்று பரவும் வீடியோ தவறானது என்று உறுதியானது.
முடிவு:
மேஜிக் நிபுணரின் பிராங்க் வீடியோவை வைத்து பேப்பர் சைஸ் செல்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று தவறான தகவலை பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ஒருமுறை பயன்படுத்தும் செல்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதா?
Fact Check By: Chendur PandianResult: False
