
‘’பாஜக அறிக்கையில் 2 கிலோ அபின் என வெட்கமின்றி கூறியுள்ளனர்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதில், பாஜக தமிழ்நாடு பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் பெயரில் வெளியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ‘’பெரம்பலூர் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயற்குழு உறுப்பினரான திரு.பி. லூவாங்கோ அடைக்கலராஜ் அவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வெறும் 2 கிலோ அபின் கடத்தி காவல்துறையில் சிக்கிக் கொண்டதால், கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியினர் மற்றும் கஸ்டமர்கள் அவரிடம் எந்த வியாபாரத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என உஷார்படுத்தப்படுகிறார்கள்,’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதனை படித்துப் பார்க்க நகைச்சுவையாக இருந்தாலும், நிறைய பேர் இதனை ஷேர் செய்வதால், உண்மையிலேயே பாஜக இப்படி அறிக்கை வெளியிட்டதா, இல்லையா என ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உண்மை அறிவோம்:
பெரம்பலூரை சேர்ந்த பாஜக நிர்வாகி லூவாங்கோ அடைக்கலராஜ், காரில் அபின் கடத்தியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பஞ்சாமிர்தம் போல 1.8 கிலோ உள்ள ரூ.15 லட்சம் மதிப்புடைய அபின் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம், தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, அவர் மீது பாஜக சார்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக, பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையின் நகலை கீழே நாம் இணைத்துள்ளோம்.
இந்த அறிக்கையில், ‘’2 கிலோ அபின்’’ என்றோ, ‘’கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கஸ்டமர்கள்’’ என்றோ அல்லது ‘’வியாபாரத் தொடர்பு’’ என்றோ, எதுவும் குறிப்பிடவில்லை.
எனவே, உண்மையான அறிக்கையை எடிட் செய்து, நகைச்சுவைக்காகச் சிலர் பகிர்ந்துள்ளனர். அதனை மற்றவர்களும் உண்மை என நம்பி ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர் என்று தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.

Title:பாஜக அறிக்கையில் 2 கிலோ அபின் என்று குறிப்பிடப்பட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: False
