பொங்கல் பரிசு தொகுப்பு கொடுப்பதே அதிகம் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

பொங்கல் பரிசு ரொக்கம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த சூழலில், மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கொடுப்பதே அதிகம் என்று தமிழ்நாடு அரசின் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பொங்கல் தொகுப்பு – அமைச்சர் விளக்கம். பொங்கல் பரிசு தொகுப்பு கொடுப்பதே அதிகம்! பணமும் கேட்டால் நாங்கள் என்ன செய்ய? சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தே 5000 தருவோம் என்று சொன்னோம்! – உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி” என்று இருந்தது.

இந்த பதிவை திராவிட பொறுக்கிகள் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் RamaDass Gounder என்ற ஐடி கொண்ட நபர் 2022 ஜனவரி 17ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கடந்த ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷனில் இலவச பொங்கல் பொருட்களுடன் பணம் வழங்கப்பட்டது. அப்போது, கூடுதலாகப் பணம் வழங்க வேண்டும் என்று தி.மு.க தரப்பில் வலியுறுத்தப்பட்டது. தற்போது தி.மு.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாக நிதி உதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பரிசு பொருட்களுடன் நிறுத்திக்கொண்டது தி.மு.க அரசு.

இந்த சூழ்நிலையில் பொது மக்களுக்கு “பொங்கல் பரிசு பொருள் வழங்கப்பட்டதே அதிகம்” என்று தமிழ்நாடு அரசின் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாக தந்தி டிவி-யின் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. டிசைன் பார்க்க தந்தி டிவி வெளியிட்டது போல உள்ளது. ஆனால், அதன் தமிழ் ஃபாண்ட் தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டுகளில் உள்ளது போல இல்லை. மேலும் இப்படி வெளிப்படையாக யாரும் விமர்சிக்க மாட்டார்கள் என்பதால் இந்த நியூஸ் கார்டு போலியானதாக இருக்கலாம் என்பதன் அடிப்படையில் இது பற்றித் தேடினோம்.

நியூஸ் கார்டில் ஜனவரி 11ம் தேதி வெளியானதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே, தந்தி டி.வி-யில் ஜனவரி 11ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அப்போது தந்தி டிவி வெளியிட்ட அசல் நியூஸ் கார்டு நமக்கு கிடைத்தது. ஆனால் அதில், “திமுக ஆட்சியில் வழங்கிவந்த பொங்கல் பரிசு தொகுப்பை அதிமுக அரசு நிறுத்தியது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி கொரோனா நிவாரண நிதி ரூ.4,000 வழங்கியது திமுக அரசு – உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியானது.

இதை உறுதி செய்யத் தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டுதான் என உறுதி செய்தார். இதன் அடிப்படையில், “பொங்கல் பரிசு தொகுப்பு கொடுப்பதே அதிகம்” என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார் என்று பகிரப்படும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது, போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதே அதிகம் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பொங்கல் பரிசு தொகுப்பு கொடுப்பதே அதிகம் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False