2014-ல் இடிக்கப்பட்ட மசூதி பற்றி இன்றளவும் பகிரப்படும் மத வெறுப்பு பிரசாரம்!

அரசியல் பாஜக

‘’மத துவேஷம் காரணமாக மோடி அகமதாபாத்தில் உள்ள இந்த மசூதியை இடித்து தள்ளிவிட்டான்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இந்த பதிவில், மசூதி ஒன்று போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்படும் புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’குஜராத் அகமதாபாத்தில் 20 வருடங்களாக இந்த மஸ்ஜிதின் ஜாமீன் சம்பந்தமாக விவாதம் நடந்து கொண்டு இருந்தது. ஆனால் மோடி, அந்த மஸ்ஜிதை நேற்று இடித்து விட்டான். இச்செய்தியை எந்த மீடியாவும் இதுவரை பிளாஷ் செய்யவில்லை. அதிகமாக பரப்புங்கள், துஆ செய்யுங்கள்,’’ என எழுதியுள்ளனர்.

இதனை பலரும் அரசியல் நோக்கத்துடன் இன்றளவும் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள புகைப்படங்களை உற்று கவனித்தபோது, அதில் Desh Gujarat என ஒரு பெயர் உள்ளதைக் காண முடிகிறது.

இதன்பேரில், Desh Gujarat என ஊடகம் எதுவும் உள்ளதா, அல்லது யாரேனும் தனி நபர் இந்த புகைப்படங்களை எடுத்து வெளியிட்டாரா என தகவல் தேடினோம். அப்போது, இது குஜராத்தில் உள்ள ஒரு ஊடகத்தின் பெயர் (https://www.deshgujarat.com/) என தெரியவந்தது.

இதுதவிர நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவின் கமெண்ட் பிரிவிலேயே, இது வேண்டுமென்றே மத வெறுப்பை பரப்பக்கூடிய தவறான தகவல் என்று கூறி, சக இஸ்லாமியர் ஒருவர் கமெண்ட் பகிர்ந்திருந்தார். அதில், Desh Gujarat ஊடகம் வெளியிட்டிருந்த செய்தி லிங்கையும் அவர் மேற்கோள் காட்டியிருந்தார்.

அந்த லிங்கை கிளிக் செய்து பார்த்தோம். அதில், கடந்த 2014ம் ஆண்டு இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ளனர். அதாவது, குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் உள்ள ஜூஹபுரா என்ற இடத்தில் நகர விரிவாக்கப் பணிகளுக்காக, ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருந்த தொழிற்சாலைகள், சரக்கு சேமிப்பு குடோன்கள் மற்றும் மசூதி உள்ளிட்டவை இடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

குறிப்பாக, இந்த மசூதி இடிக்கப்பட்டதற்கு, உள்ளூர் மக்களும், முஸ்லீம் தலைவர்களும் முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், போராட்டம் எதுவும் இன்றி அமைதியான முறையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அதே பகுதியில் உள்ள ஜெயின் சமூகத்தவரின் கோயில் ஒன்றை இடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், அந்த நடவடிக்கை வெற்றி பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DeshGujarat News LinkArchived Link

2014, ஆகஸ்ட் 6ம் தேதி இந்த செய்தி வெளியாகியுள்ளது. அதனை கவனிக்காமல், 2016 டிசம்பரில் ரொம்ப தாமதமாக, இச்செய்தியை ஃபேஸ்புக்கில் ‘’நேற்று மோடி இந்த மசூதியை இடித்துவிட்டான்‘’ என்று கூறி பகிர்ந்துள்ளனர். 

ஆனால், 2014 மே மாதத்திலேயே நரேந்திர மோடி குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிரதமராக பதவியேற்றுவிட்டார். இதுகூட தெரியாமல் மோடியை குற்றம் சாட்டி இந்த பதிவை பகிர்ந்துள்ளனர். அதனை பலர் இன்றளவும் உண்மை சரிபார்க்காமல் ஷேர் செய்கின்றனர். 

TheHindu News LinkIndianExpress Link

குஜராத்தில் தற்போது வரை பாஜக ஆளுங்கட்சியாக இருந்தாலும், முதல்வர் பதவியில் இல்லாத நபரை நேரடியாகக் குற்றம்சாட்டி அரசியல் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே இந்த பதிவை பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது. 

இதுவரை நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்த உண்மையின் விவரம்,

1) 2014 ஆகஸ்ட் மாதத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்ததால், மசூதி, குடோன்கள், தொழிற்சாலை கட்டிடங்களை ஆமதாபாத் மாநகராட்சி நிர்வாகம் இடித்துள்ளது. இதற்கு உள்ளூர் மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர். இதுபற்றி ஊடகங்களிலும் செய்தி வெளியாகியிருக்கிறது.

2) 2014 மே மாதத்திலேயே குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மோடி பிரதமராக பதவியேற்றுவிட்டார்.

3) ஆனால், 2014 டிசம்பர் மாதத்தில் இச்செய்தியை சம்பந்தப்பட்ட ஃபேஸ்புக் பதிவர் ‘நேற்று நடந்த சம்பவம்‘ என்று கூறி பகிர்ந்துள்ளார்.

4) இது வேண்டுமென்றே மத வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாக உள்ளதென்று அந்த பதிவின் கமெண்ட் பகுதியிலேயே சிலர் கண்டனம் தெரிவித்தும் உள்ளனர். ஆனாலும், தவறை திருத்திக் கொள்ளாமல் குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவர் அப்படியே உள்ளதால், மற்றவர்களும் இதன் உண்மைத்தன்மை தெரியாமல் ஷேர் செய்து வருகின்றனர்.

5) மோடி பிரதமராக பதவியேற்ற நாள் முதலாக, குஜராத்தை மையப்படுத்தி பல விதமான தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படும் வழக்கம் அதிகரித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை தவறாகவே உள்ளன. அப்படியான தகவல்தான் இதுவும். 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி இது தவறான தகவல் என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:2014-ல் இடிக்கப்பட்ட மசூதி பற்றி இன்றளவும் பகிரப்படும் மத வெறுப்பு பிரசாரம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •