
‘’நவோதயா பள்ளிகளை திறக்கும்படி தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

ஜூலை 30, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த பதிவில், ‘’மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் துவங்க நீதிமன்றம் அனுமதி, ஜெய் மோடி சர்க்கார்,’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளதைப் போல, ஜூலை 30, 2020 அன்றைய நிலவரப்படி ஏதேனும் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ வெளியிட்டுள்ளதா என்று தேடிப் பார்த்தால், அப்படி எந்த
செய்தியும் வெளியாகவில்லை என தெரியவந்தது.
ஆனால், 2017ம் ஆண்டில் இதுபற்றி நிறைய செய்திகள் வெளியாகியிருப்பதாகக் கண்டோம். அதாவது, தமிழகத்தில் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக வைத்து, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நவோதயா பள்ளிகள் இயங்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது. இதனை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை செயல்பட அனுமதிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த 2017, செப்டம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் அப்போதே மேல்முறையீடு செய்தது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைத்து, உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

தற்போதைய நிலையில், இந்த விவகாரத்தில் இன்னமும் இறுதி தீர்ப்பு வெளியாகவில்லை. தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டின் பேரில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது.
எனவே, 2017ம் ஆண்டில் வெளியான செய்தியை தற்போது நிகழ்ந்தது போல தகவல் பரப்பி ஃபேஸ்புக் வாசகர்களை குழப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, பழைய செய்தியை புதியது போல பகிர்ந்துள்ளனர் என நிரூபித்துள்ளோம். தவிர, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தும் உள்ளதால், இந்த செய்தியை பகிர்வது தற்போதைய சூழலில் ஏற்புடையதல்ல. நமது வாசகர்கள் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

Title:நவோதயா பள்ளிகளை திறக்கும்படி தமிழக அரசுக்கு தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதா?
Fact Check By: Pankaj IyerResult: Partly False
