
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதவியேற்கும் இல.கணேசனுக்கு வாழ்த்துக்கள் என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக பதவியேற்கும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் திரு இல.கணேசன் ஜி அவர்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்” எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை FRIENDS OF TN BJP என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Sathasivan Subburaya Chettiar என்பவர் வெளியிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்திருந்தனர்.
உண்மை அறிவோம்:
தமிழக பா.ஜ.க தலைவராக இருந்தவர் இல.கணேசன். கடந்த 2016ம் ஆண்டு மாநிலங்களவைக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பி-யாக உள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண் பேடி உள்ளார். 2016ம் ஆண்டு மே 29ம் தேதிதான் அவர் பதவியேற்றார். தற்போதுதான் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கிரண் பேடியின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவடையாத நிலையில் இல.கணேசன் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதவி ஏற்க உள்ளார் என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. ஏராளமானோர் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

இது உண்மையா என்று தமிழக பா.ஜ.க ஊடகத் தொடர்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் பாலாஜியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அதற்கு அவர், “இந்த தகவல் தவறானது. இது குறித்து எல்.கணேசன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்” என்றார்.

இல.கணேசன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்தபோது, ‘’ஒரு பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. அதை உறுதிப்படுத்தக்கூடிய எதுவும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை. வாழ்த்துக்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. நன்றி. உறுதியான செய்தி வந்தால் உடனடியாக பதிவு செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.
எல்.கணேசன் ஆளுநராக நியமிக்கப்பட உள்ளார் என்று செய்தி பரவுவது இது முதன்முறை இல்லை. பல ஆண்டுகளாக அவ்வப்போது இந்த மாதிரியான தகவல் வெளியாவது வாடிக்கையாக உள்ளது.

மத்திய அரசு நினைத்தால் யாரை வேண்டுமானாலும் எந்த மாநிலத்தின் ஆளுநராகவும் நியமிக்க முடியும். எந்த மாநிலத்துக்கும் மாற்ற முடியும். அரசின் விருப்பம் அது. இல கணேசன் ஆளுநராக நியமிக்கப்படலாம். அது புதுச்சேரியாகவும் இருக்கலாம் வேறு ஒரு மாநிலமாகவும் இருக்கலாம். அது பா.ஜ.க தலைமை மற்றும் மத்திய அரசின் தனிப்பட்ட உரிமை. அப்படி நியமிக்கப்பட்டால் தமிழர்கள் அனைவருக்கும் அது மகிழ்ச்சியான செய்தியே.
ஆனால், தற்போதைய நிலையில் அவர் புதுச்சேரி ஆளுநராக நியமிக்கப்படவில்லை. பதவி ஏற்பு விழாவும் நடைபெறும் நிலையில் இல்லை. இதன் அடிப்படையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இல.கணேசன் பதவி ஏற்க உள்ளார் என்று பகிரப்படும் தகவல் தவறான புரிதலை ஏற்படுத்தும் என்பதால் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதவியேற்கிறாரா எல்.கணேசன்?- ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False
