அப்காசியாவின் உலகின் மிக ஆழமான குகையில் சிவலிங்கம் இருந்ததா?

சமூக ஊடகம் சமூகம் சர்வதேசம்

மத்திய தரைக்கடல் பகுதியில் ஜார்ஜியா அருகே உள்ள அப்காசியாவில் உள்ள உலகின் மிகவும் ஆழமான குகையில் சிவலிங்கம் இருந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

லிங்கத்தின் மீது முகம் இருப்பது போன்ற சிவலிங்கம், பாம்பு வாயில் இருந்து சிவலிங்கத்தின் மீது தண்ணீர் கொட்டுவது, மிக ஆழமான குகைகளின் படங்களை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “எங்கும் ஷிவமயம்..! இந்த பூமியில் ஆழமானதாக அறியப்பட்ட குகை இது தான். அதன் ஆழம் 2197 மீட்டர் (7208 அடி). ..! அபகாசியாவில் (ஜார்ஜியா) உள்ள கருங்கடல் கரையில் க்ரூபிரா இந்த குகை உள்ளது.

இதில் அதிசயம் என்னவென்றால், இது ஒரு மிக பழமையான சிவாலயம். இங்கு ஷிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதற்கு காக்கை குகை என்று பெயர் சூட்டப்பட்டது, ஏனெனில் 1980-ல் மனிதர்கள் முதலில் குகைக்குள் நுழைந்தபோது, காகங்கள் நிறைய இருந்தன. அந்த மக்கள் ரேவன் என்று குகைக்கு பெயர் சூட்டினார்கள்.! இந்த குகைக்குள் பல பழமையான சிலைகள் காணப்படுகிறது, முக்கியமாக சிவலிங்கம் பழங்காலத்திலிருந்தே இங்கு இருந்து உள்ளது என்பதை உறுதி செய்கிறது..!

இங்கு செல்வது மிக கடினம், ஏனெனில் ஒரு வருடத்தில் 4 மாதங்கள் மட்டுமே இங்கு செல்ல முடியும். .! இரண்டாவது, அப்காசியாவில் அரசியல் சூழ்நிலை மோசமாக உள்ளது, எனவே அனுமதி எளிதில் கிடைக்காது. அப்காசியா ஜார்ஜியாவிடம் இருந்து 1999-ல் தான் விடுதலை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது..! ஹர ஹர மஹாதேவ்..!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை ஆன்மீக களஞ்சியம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Sathasivan Subburaya Chettiar என்பவர் 2020 ஜூலை 21 அன்று வெளியிட்டுள்ளார்.

உண்மை அறிவோம்:
அப்காசியாவில் உள்ள க்ருபெரா குகை பற்றி பதிவில் குறிப்பிட்டிருப்பது கொஞ்சம் உண்மை கலந்த பதிவுதான். இந்த குகை 1980ல் கண்டறியப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இது 1960ம் ஆண்டு சோவியத் யூனியன் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் உள்ளே சென்ற போது காகங்கள் வந்ததால் அதற்கு வோரேன்யா குகை என பெயரிடப்பட்டது.

அதாவது, காகங்களின் குகை என்று பொருள்படும் ரஷ்ய பெயர் வைக்கப்பட்டது. பின்னர் ரஷ்ய புவியியல் நிபுணர் அலெக்சாண்டர் க்ரூபெரின் நினைவாக, அவரது பெயரில் இந்த குகை அழைக்கப்படுகிறது.

உலகின் ஆழமான இந்த குகையில் சிவலிங்கம் உள்ளதா என்று ஆய்வு செய்தோம். கூகுளில் தேடிய போது அந்த குகையில் சிவலிங்கம் இருப்பது தொடர்பாக எந்த செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. இயற்கையாக உருவான தூண் போன்ற சில அமைப்புகளைக் காண முடிந்தது. அதை சிவலிங்கம் என்று நம்புவது அவரவர் விருப்பம். அந்த பாறை அமைப்புகளை சிவலிங்கம் என்று ஆய்வாளர்கள் கருதவில்லை. 

ancient-origins.netArchived Link 1
mymodernmet.comArchived Link 2

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் மூன்று குகையின் படமும், இரண்டு சிவலிங்க படமும் கொடுக்கப்பட்டிருந்தது. ஜார்ஜியாவில் உள்ள குகையில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் என்ற வகையில் அந்த புகைப்படம் பதிவிடப்பட்டு இருந்தது. 

Facebook LinkArchived Link 1
daivadarsanam.blogspot.comArchived Link 2

மூன்று தலைகொண்ட பாம்பு வாயில் இருந்து தண்ணீர் கொட்டும் படம் குகைக்குள் இருப்பது போல இல்லை. செயற்கையாக உருவாக்கப்பட்டது போல இருந்தது. அந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது பல ஆண்டுகளாக அந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. ஆனால், இது எங்கே உள்ளது என்ற தகவல் இல்லை. அந்த சிவலிங்கத்தின் வீடியோவும் நமக்கு கிடைத்தது. 

சிவலிங்கத்தின் மீது முகம் இருக்கும் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது அது மத்திய பிரதேச மாநிலம் விதிஷா அருகே உள்ள உதயகிரி குகைகள் என்று தெரியவந்தது. 

vidishaonline.inArchived Link

குகைகளின் படங்களில் முதலாவது படம் அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள Ellison Cave என்று தெரிந்தது. மற்ற இரண்டு குகை படமும் க்ருபெராவில் எடுக்கப்பட்டது என்பது தெரிந்தது. 

நம்முடைய ஆய்வில் 

அப்காசியாவில் கண்டறியப்பட்ட குகையில் சிவலிங்கம் கிடைத்ததாக எந்த தகவலும் இல்லை.

குகைக்குள் புற்று தூண் போல ஏராளமான பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது. 

ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்ட படங்கள் இந்தியாவில் உள்ள சிவலிங்கங்கள் என்பது உறுதியாகி உள்ளது.

இதன் அடிப்படையில் ஜார்ஜியாவை ஒட்டியுள்ள அப்காசியாவில் கண்டறியப்பட்ட குகைக்குள் சிவலிங்கம் உள்ளது என்று கூறுவது தவறு என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:அப்காசியாவின் உலகின் மிக ஆழமான குகையில் சிவலிங்கம் இருந்ததா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply