
இஸ்ரேல் நாட்டில் உள்ள நோவாவின் பேழை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
மரத்தால் செய்யப்பட்ட பிரம்மாண்ட பழங்கால கப்பல் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேல் தேசத்தில் இருக்கும் நோவாவின் பேழை” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த பதிவை Tamil Christian Today என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் C M Jacob என்பவர் 2021 மே 1 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பைபிளில் இடம் பெற்ற நோவா கதையில் பூமியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது என்றும், நோவா என்பவர் பேழை தயாரித்து விலங்குகளை காப்பாற்றினார் என்றும் கூறப்படுகிறது. இந்த பேழை எங்கே இருக்கிறது என்று பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். நோவா பேழை துருக்கியில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் ஈரானில் உள்ளது என்று பல காலமாக செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் இஸ்ரேலிலில் உள்ள நோவாவின் பேழை என்று படத்தை சிலர் பகிரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.
இஸ்ரேலுக்கு கிறிஸ்தவர்கள் பல ஆண்டுகளாக புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால் நோவாவின் பேழை அங்கு உள்ளதாக எந்த தகவலும் இல்லை. எனவே வேறு எங்கோ உள்ளதை இஸ்ரேல் என்று குறிப்பிட்டிருக்கலாம் என்று தெரிந்தது. எனவே, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த பேழை அமெரிக்காவில் இருப்பது தெரியவந்தது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் vaalexpressmedia.co.za என்ற தளத்தில் இருந்து நமக்கு கிடைத்தது. அமெரிக்காவின் கென்டகியில் 2016ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கிறிஸ்தவ மத கண்காட்சியகம் தீம் பார்க் என அதில் குறிப்பிட்டிருந்தனர். மேலும் தீம் பார்க் இணையதள முகவரியும் நமக்கு கிடைத்தது.

அசல் பதிவைக் காண: vaalexpressmedia.co.zaI Archive 1 I arkencounter.com I Archive 2
அதில், இங்கு பார்வையிடுவதற்கான கட்டணம், டிக்கெட், வரலாறு உள்ளிட்ட பல தகவல் நமக்குக் கிடைத்தது. பைபிளில் குறிப்பிடப்பட்ட நோவாவின் பேழை ஒப்பீட்டைக் கொண்டு இதை அமைத்திருப்பதாக இதை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் இந்த படகு நோவாவின் பேழை இல்லை என்பதும், இது இஸ்ரேலில் இல்லை என்பதும் உறுதியானது. அமெரிக்காவின் கென்டகியில் சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நோவா பேழையின் மாதிரி மட்டுமே என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இஸ்ரேலில் உள்ள நோவாவின் பேழை என்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இஸ்ரேலில் நோவா காலத்து பேழை உள்ளது என்று பகிரப்படும் படம் அமெரிக்காவில் உள்ள நோவா பேழை மாதிரி என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:இஸ்ரேலில் உள்ள நோவா பேழை என்று பரவும் தவறான தகவல்!
Fact Check By: Chendur PadnianResult: False
