
நியூசிலாந்தில் கொரோனா தொற்றை ஒழித்துவிட்டோம் என்று பிரகடனப்படுத்திய உடன் இந்து கோவிலுக்கு வந்து அந்நாட்டு பிரதமர் ஜெஸிந்தா நேர்த்திக்கடன் செலுத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டர்ன் இந்து கோவிலுக்கு வந்து வழிபாட்டில் பங்கேற்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “நியூசிலாந்து பிரதமர் தங்கள் நாட்டில் கொரானாவை ஒழித்து விட்டோம் என்று பிரகடப்படுத்திய உடனே இந்து கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்துகிறார்!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை தம்பா ஜெயமாருதி என்பவர் 2020 ஆகஸ்ட் 9ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கடந்த வாரம் நியூசிலாந்து வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அந்நாட்டு பிரதமர் ஜெஸிந்தா ஆர்டர்ன் வந்திருந்தார். அப்போது அங்கிருந்த கோவிலில் நடந்த வழிபாட்டில் பங்கேற்று, பூரி சென்னா சாப்பிட்டார் என்று செய்திகள் வெளியானது. மேலும், அடுத்த மாதம் அங்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரசார உத்தியாக ஜெஸிந்தா இந்து கோவிலுக்கு வந்தார் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கொரோனாவை ஒழித்துவிட்டோம் என பிரகடனப்படுத்திவிட்டு அவர் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தியதாக பகிரப்பட்டுள்ளது ஆச்சரியத்தை அளித்தது. இது தொடர்பாக ஆய்வு நடத்தினோம்.
இது தொடர்பான செய்தியை முதலில் பார்த்தோம். தினமலர், ஏன் தீவிர இந்துத்துவா ஆதரவு இணையதளமான கதிர் செய்தியில் கூட நேர்த்திக்கடன் செலுத்த வந்தார் என்று குறிப்பிடவில்லை. கதிர் செய்தி என்ற தீவிர வலதுசாரி இணைய ஊடகத்திலும், தினமலர் போன்ற வலதுசாரி ஆதரவு ஊடகத்திலும் கூட அடுத்த மாதம் (செப்டம்பர்) தேர்தல் நடைபெற உள்ளது. அதை அடுத்து ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று ஆர்டர்ன் வழிபாடு செய்தார் என்று குறிப்பிட்டிருந்தனர்.

தினமலர் செய்தியில், நியூசிலாந்துக்கான இந்தியத் தூதர் வெளியிட்டிருந்த ட்வீட்டையும் இணைத்திருந்தனர். அதில், 2020 ஆகஸ்ட் 6ம் தேதி இந்தியன் நியூஸ் லிங்க் என்ற ஊடகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா பங்கேற்றார். அப்போது ராதா கிருஷ்ணா மந்திருக்கு வந்தார். அங்கு எளிய சைவ உணவான பூரி, சோலே, தாலை ருசித்து சாப்பிட்டார்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மாலை மலர் வெளியிட்டிருந்த செய்தியில், ஜெஸிந்தா இந்து கோவிலுக்கு கொரோனா ஒழிப்பு தொடர்பான பிரார்த்தனையை நிறைவேற்ற வந்தார் என்று வதந்தி பகிரப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டிருந்தனர்.
ஜெஸிந்தா இது போன்று மற்ற மதத்தினர் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வது புதிது இல்லை. கடந்த ஆண்டு நியூசிலாந்து மசூதியில் தாக்குதல் நடத்தப்பட்ட போது, ஹிஜாப் அணிந்து கொண்டு அவர் மசூதிக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
நம்முடைய ஆய்வில், நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா இந்து கோவிலுக்கு சென்றது உண்மை, இந்தியன் நியூஸ் லிங்க் என்ற ஊடகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த போது, அப்படியே கோவிலுக்கும் வந்துள்ளார் என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் கொரோனாவை ஒழித்ததற்காக நேர்த்திக்கடன் செலுத்த ஜெஸிந்தா இந்து கோவிலுக்கு வந்தார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:கொரோனா காலி; நேர்த்திக்கடன் செலுத்த கோயில் சென்றாரா நியூசிலாந்து பிரதமர்?
Fact Check By: Chendur PandianResult: False

இது தவரான செய்தியாக இருப்பினும் நான் அதற்க்கு மன்னிப்பு கேட்கிறான்.
எனது பக்கத்தில் இருந்து அந்த தகவலை நீக்கி விடுங்கள்.