பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் போடவில்லையா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’கந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, பொள்ளாச்சி சம்பவத்தில் சிக்கியவர்கள் மீது வழக்குப் போடவில்லை,’’ என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

நியூஸ்7 தமிழ் நியூஸ் கார்டு உடன் சினிமா காட்சியை சேர்த்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் நியூஸ் கார்டு பகுதியில், “கந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் அதிரடி உத்தரவு” என்று உள்ளது.

சினிமா காட்சி உள்ள பகுதியில், “யூடியூப் வீடியோவுக்கு எல்லாம் குண்டர் சட்டம் பாயுது. இந்த பொள்ளாச்சில பல பெண்கள் வாழ்க்கையை நாசமாக்கி வீடியோ எடுத்த உத்தமன் மேல மட்டும் ஏன் பாயமாட்டுது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை புதிய தலைமுறை என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Vishal Esh‎ என்பவர் 2020 ஜூலை 27ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கந்த சஷ்டி கவசம் விவகாரம் தொடர்பாக கறுப்பர் கூட்டம் நிர்வாகிகள் இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பொள்ளாச்சியில் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வீடியோ எடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ரீதியில் பதிவிடப்பட்டுள்ளது. இது உண்மையான தகவல் இல்லை.

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்ததாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அரசியல் கட்சிகள், பொது மக்கள் அழுத்தம் காரணமாக இந்த வழக்கை முதலில் சி.பி.சி.ஐ.டி-க்கு தமிழக அரசு மாற்றியது. அதன் பிறகு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் நீதிமன்றம்தான் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது தவறு என்று கூறி ரத்து செய்தது. அப்படி இருக்கும்போது, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கியவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் பாயவில்லை என்று கூறுவது தவறானது.

ns7.tvArchived Link 1
tamil.asianetnews.comArchived Link 2

பொள்ளாச்சி வழக்கில் சிக்கிய நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான ஆதாரத்தைத் தேடினோம். அப்போது, 2019 மார்ச் மாதம் 12ம் தேதி நியூஸ் 7 வெளியிட்ட செய்தி கிடைத்தது.

அதில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் பிறகு 2020 ஏப்ரல் மாதம் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-யிடம் இருந்து சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது தொடர்பான செய்தி கிடைத்தது.

tamil.news18.comArchived Link 1
vikatan.comArchived Link 2

அதன் பிறகு 2019 நவம்பர் 1ம் தேதி குண்டர் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த செய்தி கிடைத்தது. அதில், “வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு, குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் உறவினர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும், ஆவணங்கள் தெளிவில்லாமல் இருப்பதாகவும் கூறி, இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைத்து கோவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார்” எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்கள் மீது குண்டர் சட்டம் பாயவில்லை என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் போடவில்லையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply