
அரசு பொதுத் தேர்வில் ஷூ பாலிஷ் செய்யும் சிறுவன் ஒருவன் 500க்கு 465 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் படம் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் பற்றி ஆய்வு நடத்தினோம்.
தகவலின் விவரம்:

‘ஷூ பாலிஷ் செய்யும் சிறுவன் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பகலில் 12 மணி நேர மக்களின் அழுக்கான ஷூக்களை பாலிஷ் செய்த #C _ ravidas.. இரவில் படித்தது, 465 of 500 அதாவது 93 சதவீதம் மற்றும் பள்ளியில் டாப்.. ஏதேனும் வாழ்த்துக்கள், அதை ஏழைகளாக கொடுக்க வேண்டாம். சஞ்சய் மற்றும் ரீட்ஸின் ஐபிஎஸ் அதிகாரி இருக்க விரும்புகிறார்.. நாம் அனைவரும் வாழ்த்துகின்றோம்!! வாழ்த்துக்கள்… மகனே” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Arunachalam R என்பவர் 2020 ஜூலை 20ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தற்போது பிளஸ்2 தேர்வு முடிவு வெளிவந்துள்ளது. 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆகஸ்டு மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அப்படி இருக்கும்போது இந்த மாணவர் 500-க்கு 93 மதிப்பெண் எடுத்துள்ளார் என்று பகிர்ந்துள்ளனர். எந்த ஊர், எப்போது என எந்த ஒரு தகவலும் இல்லை. எனவே, இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது 2018ம் ஆண்டு இருந்து இந்த புகைப்படம் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. சில பதிவுகளில் மாணவனின் மதிப்பெண் பட்டியலையும் சிலர் பகிர்ந்திருந்தனர்.
அந்த மதிப்பெண் பட்டியலைப் பார்த்தபோது இந்த சிறுவன் சஞ்சய் ரவிதாஸ் என்பது தெரிந்தது. இவர் மேற்கு வங்கத்தைச் சார்ந்தவன் என்றும், 2018ம் ஆண்டு நடந்த மத்யமிக் (10வது) தேர்வு முடிவு இது என்றும் தெரிந்தது. அதில் முதல் மொழியில் 72 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 61ம், கணிதத்தில் 56ம், ஃபிசிக்கல் சயின்சில் 50ம், லைஃப் சயின்சில் 68ம், வரலாற்றில் 74ம், புவியியலில் 84ம், எலெக்டிவ் பாடத்தில் 83 மதிப்பெண்ணும் பெற்றிருந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. மொத்த மதிப்பெண் 465 எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
எந்த பாடத்திலும் அவர் 90ஐ தொடவே இல்லை. பிறகு எப்படி 93 சதவிகித மதிப்பெண் பெற்றிருப்பார் என்ற குழப்பம் வந்தது.

அனைத்தையும் கூட்டினால் 548 மதிப்பெண் வந்தது. ஆனால், மதிப்பெண் பட்டியலில் 465 மதிப்பெண் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே, எலெக்டிவ் பாடத்தை நீக்கிவிட்டு கூட்டியபோது 465 மதிப்பெண் வந்தது. அப்படி என்றால் 700க்கு 465 மதிப்பெண் பெற்றிருப்பது தெரிந்தது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது போல இவர் 500க்கு 465 மதிப்பெண் பெறவில்லை, 700க்கு 465 மதிப்பெண் பெற்றிருப்பது தெரிந்தது. இது 66 சதவிகிதம் ஆகும்.
தொடர்ந்து தேடியபோது இந்த சிறுவன் பற்றி 2018ம் ஆண்டு செய்தி வெளியாகி இருப்பது தெரிந்தது. அதில், பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலிருந்து படித்து தன் சொந்த முயற்சியால் 465 மதிப்பெண் பெற்ற மாணவன் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

சஞ்சய் ரவிதாசுக்கு 13 வயது இருக்கும்போது அவரது அப்பா இறந்துவிட்டார். அம்மா கல்யாணி ரவிதாசுக்கு உதவியாக சஞ்சய் இருந்துள்ளார். குடும்ப பாரம் காரணமாக சஞ்சயும் அவரது சகோதரும் வேலைக்கு செல்கின்றனர். சஞ்சய் செருப்பு தைக்கும் தொழிலை மேற்கொண்டுள்ளார். சகோதரர் கூலி வேலை செய்கிறார். பகல் முழுவதும் பள்ளிக்கு செல்வது, செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபடுவது என்று சஞ்சய் இருப்பார். இரவு வீட்டுக்கு வந்து படிப்பார் எனக் குறிப்பிட்டிருந்தனர். இதன் அடிப்படையில் வதந்தி உருவாகியிருக்கலாம் என்று தெரிகிறது.
நம்முடைய ஆய்வில்,
மாணவர் சஞ்சய் ரவிதாஸ் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்பதும், 2018ம் ஆண்டு தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றதும் உறுதியாகி உள்ளது.
மாணவன் சஞ்சய் ரவிதாசின் மதிப்பெண் பட்டியல் கிடைத்துள்ளது. அதில் மாணவன் 66 சதவிகித மதிப்பெண் பெற்றது உறுதியாகி உள்ளது.
கடின உழைப்பு மூலம் மாணவன் இவ்வளவு மதிப்பெண் பெற்ற செய்தி 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது உறுதியாகி உள்ளது.
இதன் அடிப்படையில், ஷூவுக்கு பாலிஷ் போடும் சிறுவன் 500க்கு 465 மதிப்பெண் பெற்றான் என்று பகிரப்படும் தகவல் உண்மையும் தவறும் கலந்தது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு சிறிது உண்மையுடன் நிறைய தவறான தகவல் சேர்த்து வெளியிடப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஷூ பாலிஷ் செய்யும் சிறுவன் அரசு பொதுத் தேர்வில் 93% மதிப்பெண் பெற்றது உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Partly False
