இந்து மக்கள் கட்சி திருப்பூர் மாவட்ட நிர்வாகி பகவான் நந்து மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

யாரோ ஷேர் செய்த பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், "இந்து மக்கள் கட்சி தமிழகம் திருப்பூர் மாவட்ட நிர்வாகி “பகவான் நந்து” மீது கொலை வெறி தாக்குதல்! ஏழு இடங்களில் அறிவாள் வெட்டு!

உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதி! அர்ஜுன்சம்பத் கண்டனம்! திருப்பூர் விரைவு! இது நியாயம்தானா? கொடுமைக்கு முடிவுதான் எப்போது!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, முத்து கிருஷ்ணன் என்பவர் 2020 மார்ச் 18 அன்று வெளியிட்டுள்ளார்.

Facebook LinkArchived Link

பதிவில் உள்ள தகவலை வைத்து ஃபேஸ்புக்கில் தேடியபோது பல பதிவுகள், வீடியோக்கள் கிடைத்தன. கை, காலில் காயங்களுடன் ரத்தம் சொட்டச் சொட்ட உள்ள ஒருவருக்கு மருத்துவமனையில் சட்டை, பனியனை அகற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். நிலைத் தகவலில் மேலே குறிப்பிட்ட வாசகம் இடம் பெற்றிருந்தது.

இந்த பதிவை, Ponnusamy Imk என்பவர் 2020 மார்ச் 17 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கோவை, திருப்பூர் பகுதியில் இந்து முன்னணி, பா.ஜ.க, இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தாக்கப்படுவதாக செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு பாப்புலராக ஆசைப்பட்டு தன்னுடைய பைக்கை கொளுத்தியதாகத் திருச்சியில் இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், திருப்பூரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. வீடியோவில் பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக அந்த நபர் உள்ளார். இதனால் உண்மையாக இருக்கும் என்று பலரும் இதை ஷேர் செய்திருக்கலாம் என்று தெரிகிறது. ஜிகாதிகள் தாக்கியதாக பலரும் பல விதங்களில் இந்த பதிவை ஷேர் செய்து வருகின்றனர்.

https://twitter.com/mylaishivsainik/status/1239979214494765056
Archived Link

உண்மையில் என்ன நடந்தது என்ற தெரிந்துகொள்ள கூகுளில் திருப்பூர் இந்து மக்கள் கட்சி நிர்வாகி தாக்குதல் என்று டைப் செய்து தேடினோம். அப்போது, திருப்பூர் மாவட்ட போலீஸ் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பத்திரிகையாளர்கள் வெளியிட்ட பதிவு மற்றும் செய்திகள் கிடைத்தன.

tamil.oneindia.comArchived Link

ஒன் இந்தியா வெளியிட்டிருந்த செய்தியில், மதக் கலவரம் தூண்ட முயற்சி, வசமாக சிக்கிய அர்ஜுன் சம்பத் கட்சி பிரமுகர் என்று குறிப்பிட்டிருந்தனர்.

பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்டிருந்த பதிவில் போலீஸ் அறிக்கை இடம் பெற்றிருந்தது. அந்த அறிக்கையைப் பார்த்தோம். அதில், சுய விளம்பரத்துக்காக, தனது வாகன ஓட்டுநர் உதவியோடு கத்தியால் முதுகில் கிழித்துக் கொண்டதாகவும், பின்னர் இரண்டு கைகளிலும் காயத்தினை ஏற்படுத்திக் கொண்டு இதர மதத்தினர் மற்றும் காவி வேஷ்டி அணிந்தவர்கள் செய்ததாகவும் மக்களிடம் பீதியை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தி, அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற நந்தகோபால் இதை செய்ததாக அவரது வாகன ஓட்டுநர் ருத்ரமூர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.

twitter.comArchived Link

இதன் மூலம், இந்து மக்கள் கட்சி பிரமுகரை யாரோ கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பகிரப்படும் தகவல் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல்! - ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False