
‘’ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசுகள் வசூலிக்கும் VAT எவ்வளவு தெரியுமா,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இந்த தகவலை வாசகர் ஒருவர், நமக்கு வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பி வைத்து, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இது கடந்த சில ஆண்டுகளாகவே, ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வரும் தகவலாகும்.
உண்மை அறிவோம்:
இவர்கள் குறிப்பிடுவது போல, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இந்திய அளவில் வரி வசூலிக்கப்படுகிறதா அல்லது வேறு ஏதேனும் மாற்றம் உள்ளதா என முதலில் தகவல் தேடினோம்.
உதாரணமாக, டெல்லியில் பெட்ரோல், டீசல் மீது எப்படி வரி வசூலிக்கப்படுகிறது என்பதற்கான ஆதாரத்தை கீழே இணைத்துள்ளோம்.

ஜூன் 22, 2020 நிலவரப்படி டெல்லியில் விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எத்தகைய வரி வசூலிக்கப்படுகிறது என்று பார்த்தால்,
அடிப்படை விலை | ரூ.24.62 |
மத்திய அரசு வரி | ரூ. 32.98 |
பெட்ரோல் பம்ப் டீலர் கமிஷன் | ரூ.3.60 |
VAT (30% for petrol) (மாநில அரசு) | ரூ. 18.36 |
மொத்தம் | ரூ.79.56/லிட்டர் |
மேற்கண்ட விவரம் கிடைக்கிறது. இதில், VAT என்பதுதான் பெட்ரோல் மீது மாநில அரசுகள் வசூலிக்கும் வரியாகும். இந்த வரித்தொகை ரூ.18.36 ஆக உள்ளது. மத்திய அரசுதான் அதிக வரி (ரூ.32.98) வசூலிக்கிறது. ஆனால், நாம் ஆய்வு செய்யும் தகவலில், மாநில அரசு அதிக வரி வசூலிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதே நிலைதான் தமிழகத்திலும். ஆனால், VAT வரி அளவு சற்று மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடலாம். சமீபத்தில் கூட இந்த வரியை தமிழக அரசு உயர்த்தி அறிவித்தது.

எனவே, மத்திய அரசு வசூலிக்கும் வரிதான் பெட்ரோல், டீசல் விலையை அதிகளவில் தீர்மானிக்கிறது. மாநில அரசுகள் விதிக்கும் (VAT) வரி மொத்த விலையில் 30% என்றளவில்தான் தற்சமயம் உள்ளது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரிதான் மிக அதிகபட்சமாக உள்ளது. இதுதான், பெட்ரோல், டீசல் விலையை தீர்மானிக்கும் விசயமாக உள்ளது.
2) மாநில அரசு விதிக்கும் VAT என்பது மொத்த பெட்ரோல், டீசல் விலையில் தற்சமயம் 30% அளவுக்கு உள்ளது. இது ஓரளவுக்குத்தான் பெட்ரோல், டீசல் விலையை தீர்மானிக்கும் விசயமாகும்.
3) நாம் ஆய்வு செய்யும் தகவலில், மத்திய அரசு விதிக்கும் வரியை மாநில அரசு விதிக்கும் வரி என்று கூறி குழப்பியுள்ளனர்.
4) அதேசமயம், மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீது விதிக்கும் வரியை குறைத்தால் மக்களுக்கு ஓரளவு நன்மை பயக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட தகவலில் நம்பகத்தன்மை இல்லை என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

Title:ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசுகள் வசூலிக்கும் VAT எவ்வளவு?
Fact Check By: Pankaj IyerResult: False
