சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது?

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த பீகார் ரெஜிமெண்டைச் சேர்ந்த சுரேந்திர சிங் என்ற வீரரின் படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

முதுகு முழுக்க காயங்கள், தழும்புகளுடன், கையில் கட்டுப்போட்டுள்ள ஒருவரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “கால்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவத்துடன் நடந்த சண்டையில் தனது இன்னுயிரை துச்சமென மதித்து பல வீரர்கள் சீன இராணுவத்தினரை அடித்து நொறுக்கினர். அதில் பீகார் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் செய்த தியாகங்கள் சொல்லில் அடங்காதது.. பீகார் படைப்பிரிவும், கடக் படைப்பிரிவும் சேர்ந்து சீன இராணுவத்தினரை புரட்டி எடுத்தனர்.. அந்த வெற்றிச் சரித்திரத்தில் பீகார் ரெஜிமெண்டைச் சேர்ந்த சுரேந்தர் சிங் என்ற வீரரின் பங்கு அளப்பரியது.. நமக்காக அவர் அடைந்த காயத்தை பாருங்கள் கண்கள் கலங்குகின்றன.. நன்றி வீரனே.. உன் தியாகம் வீண் போகாது..” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பதிவை Maheshwaran Nallaiyan என்பவர் ஜூன் 20ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்திய – சீன மோதலில் உயிரிழந்த வீரர்கள், காயமடைந்த வீரர்களின் படங்களை ராணுவம் வெளியிடவில்லை. அரசு தரப்பில் ரகசியம் காக்கப்படுகிறது. ஆனால் தேச பக்தி என்ற போர்வையில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட படத்தை எல்லாம் எடுத்து இந்திய ராணுவ வீரர்கள் என்று பகிர்ந்து வருவது வேதனையை ஏற்படுத்துகிறது.

இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். பல ஆண்டுகளாக இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில், செய்தி ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. மேலும், நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் உள்பட பல ஊடகங்களும் இது தொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தி இது தவறான தகவல் என்று உறுதி செய்திருந்தன. ஆனால், இதுபற்றி எதுவும் தெரியாமலேயே ஃபேஸ்புக் பதிவர்கள் இதனை பகிர்ந்து வருகின்றனர். 

blogmazeer.blogspot.comArchived Link 1
board.postjung.comArchived Link 2

இந்த ஆய்வுகளை எல்லாம் ஓரம் வைத்துவிட்டு நாம் நமக்கு கிடைக்கும் ஆதாரங்கள் அடிப்படையில் இந்த புகைப்படம் தவறானது என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வைத் தொடர்ந்தோம். அப்போது 2016ம் ஆண்டு வெளியான பதிவு ஒன்றில் கமாண்டோ பிரிவில் இணைய வீரர்களுக்கு அளிக்கப்படும் கடுமையான பயிற்சி என்று படங்கள் பகிர்ந்திருந்தனர். அந்த தொகுப்பில் 2011ம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட படங்களை அவர்கள் அதில் வெளியிட்டிருந்தனர். தாய்லாந்து மற்றும் மலாய் மொழிகளில் வெளியான பல பதிவுகளில் இந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர். கமாண்டர் ஆக பயிற்சி பெறும் வீரர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த நபர்களைப் பார்க்க தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் போல உள்ளது. எனவே, இது தாய்லாந்து ராணுவத்தின் கமாண்டோ படையில் இணைவதற்கான பயிற்சியாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்திய – சீன வீரர்கள் இடையே மோதல் ஜூன் 15ம் தேதி நள்ளிரவில் நடந்தது, ஆனால், ஊடகங்களுக்கு ஜூன் 16ம் தேதி செய்தி தெரிவிக்கப்பட்டது. 

zeenews.india.comArchived Link 1
ptinews.comArchived Link 2

நம்முடைய ஆய்வில்,

இந்த புகைப்படம் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

கமாண்டோ படையில் இணைய வீரர்கள் எடுத்துக்கொள்ளும் பயிற்சி என்று 2016ம் ஆண்டு வெளியான பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய – சீன வீரர்கள் மோதல் என்பது 2020 ஜூன் 16ம் தேதி நிகழ்ந்தது. 

இதன் அடிப்படையில் வெளிநாட்டில் ராணுவ வீரர் படத்தை எடுத்து, சீனா நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த பீகார் ரெஜிமெண்ட் வீரர் என்று தவறான தகவல் சேர்த்து பகிரப்பட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது?

Fact Check By: Chendur Pandian 

Result: False

2 thoughts on “சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது?

Comments are closed.