இலங்கையில் முஸ்லீம் ஹோட்டலில் வைத்திருந்த ஆண்மை இழப்பு மருந்து பறிமுதல்: உண்மை என்ன?

சமூக ஊடகம் | Social

‘’இலங்கையில் முஸ்லீம் ஹோட்டலில் உணவில் கலக்க வைத்திருந்த ஆண்மை இழப்பு மருந்து பறிமுதல்,’’ என்ற தலைப்பில், ஒரு ஃபேஸ்புக் வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். இதில் தெரியவந்த விவரம், இந்த செய்தித்தொகுப்பில் தரப்பட்டுள்ளது.

வதந்தியின் விவரம்:

…தமிழர் வேலை தமிழருக்கே !!! – இது டிரண்டிங் செய்தி

இலங்கையில் முஸ்லீம் ஹோட்டல் உணவில் கலக்க வைத்திருந்த ஆண்மை இழப்பு /மலடு மருந்து பிடிபட்டது – உண்மைசெய்தி 

தமிழக மக்கள் உண்மைச் செய்திகளை அறியக் கூடாது என்று பிரச்சனைகள் திசை மாற்றப்படுகிறது. 
கிளிஞ்ச சூவும் இதே ரகம்தான்!…

Archived Link

நாம் இந்து என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் மே 3ம் தேதி இப்பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நினைத்து ஷேர் செய்து வருகிறார்கள்.

உண்மை அறிவோம்:
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள், உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, பொறுப்பேற்றுக் கொண்டது. இதையடுத்து, இலங்கை முழுவதும் பலத்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில்தான், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இது உண்மையா என்ற சந்தேகம் நமக்கும் அதிகமாகவே, இந்த புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இத்தகவல் தவறான ஒன்று என்பதற்கான செய்தி ஆதாரம் கிடைத்தது.

C:\Users\parthiban\Desktop\sri lanka 2.png

இதன்படி, நமக்கு கிடைத்த ஆதார செய்தியை கிளிக் செய்து பார்த்தபோது, இலங்கை தலைநகர் கொழும்புவில், சட்டவிரோதமாக விற்கப்பட்டு வந்த மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதுபற்றிய புகைப்படங்களே நாம் ஃபேஸ்புக்கில் பார்த்தவை எனவும் தெரியவந்தது.

பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் இந்த மருந்துகளை விற்க, இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி, கொழும்புவில் உள்ள அப்துல் கார்தர் என்ற முஸ்லீம் வணிகர் தனது வீட்டில், பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக மருந்துகளை இறக்குமதி செய்து வைத்து, விற்பனை செய்வதாக, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், கொழும்பு வோல்ஃபன்தால் தெருவில் உள்ள அந்த நபரின் வீட்டில் போலீசார் சோதனையிட்டதில், இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 4 மில்லியன் மதிப்புடைய மருந்துகள் சிக்கின. இதன்பேரில், அப்துல் மற்றும் அவரது மகன் ஃபாசாதீன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதான் மேற்கண்ட ஃபேஸ்புக் வைரல் புகைப்பட செய்தி தொடர்பான உண்மைச் செய்தியாகும். இதுபற்றி டெய்லி மிர்ரர் வெளியிட்ட விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதன்படி, வேறொரு சம்பவம் தொடர்பான புகைப்படத்தை எடுத்து, தங்களது சுய நோக்கத்திற்காக, வதந்தி பரப்பியுள்ளனர் என உறுதியாகிறது. இதேபோல, இந்துக்கள், கிறிஸ்தவர்களை மலடாக்கி, இனப்பெருக்கத்தை குறைக்கவும், முஸ்லீம்களிடையே காம உணர்ச்சியை அதிகரித்து, முஸ்லீம் மக்கள் தொகையை அதிகரிக்கவும் இந்த மருந்து, மாத்திரைகளை பள்ளிவாசலில் வைத்து விற்றதாக ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. மற்றொரு ஃபேஸ்புக் பதிவில் இதே கதையை கூறி, முஸ்லீம் ஹோட்டலில் வைத்து விற்றதாக, எழுதியுள்ளனர். ஆனால், உண்மை விவரம் வேறு ஒன்றாக உள்ளது. எனவே, இது தவறான தகவல் என முடிவு செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான, செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:இலங்கையில் முஸ்லீம் ஹோட்டலில் வைத்திருந்த ஆண்மை இழப்பு மருந்து பறிமுதல்: உண்மை என்ன?

Fact Check By: Parthiban S 

Result: False