நாடு முழுவதையும் தீ வைத்துக் கொளுத்துவோம் என்று மிரட்டிய யோகி ஆதித்யநாத்? – அதிரவைக்கும் ஃபேஸ்புக் பதிவு

அரசியல் சமூக ஊடகம்

ஒரு வேளை எங்கள் அரசு வீழ்ந்துவிட்டால் நாட்டை தீ இட்டு கொளுத்துவோம் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக ஒரு தொலைக்காட்சி நியூஸ் கார்டு வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

காவிக்காலி..!

ஆமா, இது தமிழ் ஊடகங்களுக்குத் தெரியலையே ஏன்? வெங்காயத்தான்க இதுக்கொரு விவாதம் வைக்கலாம்தானே!

Archived link

செய்தி நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் வெளியிடும் பிரேக்கிங் கார்டில், யோகி ஆதித்யநாத் படம் உள்ளது. அருகில் இந்தி வார்த்தைகள் உள்ளன. இந்த போட்டோ கார்டுக்கு கீழே, தமிழாக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், “ஒரு வேளை எங்கள் அரசு வீழ்ந்துவிட்டால் நாடு முழுவதும் தீ இட்டு கொளுத்திவிடுவோம் – கான்பூரில் யோகி ஆதித்யநாத் பேச்சு” என்று உள்ளது.

இந்த பதிவை, தாரைப்பிதா தாரைப்பிதா என்பவர் மே 4ம் தேதி வெளியிட்டுள்ளார். தேர்தல் நேரம் என்பதாலும், பா.ஜ.க – காங்கிரஸ் இடையே கடும் வார்த்தைப்போர் நடப்பதாலும் இது உண்மை என்று நம்பி பலரும் இந்த பதிவைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாடு முழுவதையும் தீ வைத்து எரிப்போம் என்று ஒரு முதல்வர் சொல்கிறார் என்றால் நம்பும் வகையில் இல்லை. அப்படி அவர் பேசியிருந்தால் நாடு முழுக்க பரபரப்பான செய்தியாகி இருக்கும். தமிழ் தொலைக்காட்சி விவாதங்களில் அதுதான் முக்கிய பிரச்னையாக பேசப்பட்டு இருக்கும். ஆனால், அப்படி ஏதும் செய்தி இல்லை.

முதலில் இது தொடர்பான செய்தி ஏதேனும் கூகுளில் வெளியாகி இருக்கிறதா என்று தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் இல்லை.

படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். ஆல்ட் நியூஸ் உள்ளிட்ட இணைய தளங்கள் இந்த தகவல் பொய் என்று கண்டறிந்த பதிவுகள் மட்டுமே கிடைத்தன.

இது தொடர்பாக ஏதேனும் செய்தி வெளியாகி இருக்கிறதா என்று பார்த்தோம். நம்முடைய factcrescendo.com இந்தி பிரிவு மற்றம் ஆல்ட் நியூஸ் இந்த செய்தி தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை நடத்தியது தெரிந்தது. இந்தியில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த செய்தி பொய் என்று நிரூபிக்கப்பட்டு இருந்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள லோகோ எந்த தொலைக்காட்சி என்று தேடினோம். அது குஜராத்தி மொழியில் ஒளிபரப்பை செய்யும் Mantavya தொலைக்காட்சி என்பது தெரிந்தது.

அந்த தொலைக்காட்சியில் இந்தி செய்திகளும் பகிரப்படுகிறதா என்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தேடினோம். ஆனால், குஜராத்தி மொழியில் மட்டுமே அது செய்தி ஒளிபரப்புவது தெரிந்தது.

இந்த புகைப்படம் தொடர்பாக ஆல்ட் நியூஸ் சார்பில், குஜராத்தி தொலைக்காட்சியைத் தொடர்புகொண்டு விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள், “நாங்கள் குஜராத்தி மொழியில் செய்திகளை வழங்கி வருகிறோம். ஆனால், அந்த ஃபேஸ்புக் பதிவில் இந்தியில் செய்தி உள்ளது. எங்கள் செய்தி நிறுவனத்தின் லோகோவை யாரோ தவறாக பயன்படுத்தியுள்ளனர். யோகி ஆதித்யநாத் பற்றிய அந்த குறிப்பிட்ட செய்தியை நாங்கள் ஒளிபரப்பவில்லை. எங்கள் லோகோவை பயன்படுத்தியது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்று கூறியுள்ளனர். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாம் மேற்கொண்ட ஆய்வில்,

 1. மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போன்று யோகி ஆதித்யநாத் எங்கேயும் பேசவில்லை.
 2. ஃபேஸ்புக் பதிவில் உள்ள லோகோ Mantavya என்ற குஜராத்தி மொழி தொலைக்காட்சியினுடையது. அவர்கள் இந்தி மொழியில் செய்தியை வழங்குவது இல்லை.
 3. குறிப்பிட்ட செய்தியை நாங்கள் ஒளிபரப்பவில்லை என்று Mantavya அறிவித்துள்ளது.

மேற்கண்ட ஆதாரங்கள் அடிப்படையில் இந்த செய்தி தவறானது, வேண்டுமென்றே விஷமத்தனமாக உருவாக்கப்பட்டது என்று நிரூபிக்கப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:நாடு முழுவதையும் தீ வைத்துக் கொளுத்துவோம் என்று மிரட்டிய யோகி ஆதித்யநாத்? – அதிரவைக்கும் ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Praveen Kumar 

Result: False

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •