அபிநந்தனை எரித்திருப்பேன் என்று சொன்னாரா பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்?

அரசியல்

‘’இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்திருந்தால் அபிநந்தனை அங்கேயே எரித்திருப்பேன்,’’ என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியதாக, சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

தகவலின் விவரம்:

கேட்குதா தமிழா நல்லா உற்று கேக்குதா நல்ல செவிகொடுத்து கேளு

Archive link

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் ஆகியோர் படங்களை வைத்து, அதன் கீழே, “இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்திருந்தால் அபிநந்தனை அங்கேயே எரித்திருப்பேன்” என்று இம்ரான் கான் கூறியதாக கூறப்பட்டுள்ளது. அவர் இப்படி எங்கே, எப்போது சொன்னார் என்பதற்கான ஆதாரத்தை அளிக்கவில்லை. இருப்பினும் இதை உண்மை என்று நம்பி 4700-க்கும் மேற்பட்டவர்கள் ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

கடந்த பிப்ரவரி 27ம் தேதியன்று இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் விமானங்களைத் துரத்திக்கொண்டு இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் சென்றார். பாகிஸ்தான் விமானப்படை தாக்குதலில் அபிநந்தன் விமானம் விபத்துக்குள்ளானது. பாகிஸ்தானில் தரையிறங்கிய அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்தனர். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதனால், இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. ஆனால், நிலைமையைப் புரிந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர், அபிநந்தன் விடுதலை செய்யப்படுவார் என்று அறிவித்தார். அதன்படி, கைது செய்யப்பட்ட மூன்றே நாளில் அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டார். வாகா எல்லை வழியாக அவர் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அபிநந்தனை விடுதலை செய்வது தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் மிகப்பெரிய விளக்கம் அளித்துள்ளார். அப்போது, “அமைதியின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக” அவர் கூறினார். இந்த பேச்சில், இந்தியாவின் பிரதான கட்சியான காங்கிரஸ் பற்றி அவர் எதையும் குறிப்பிடவில்லை. மேலும், அமைதியை வலியுறுத்தும் வகையிலேயே அவர் பேச்சு இருந்தது. அபிநந்தனை படுகொலை செய்வது பற்றி எங்கேயும் அவர் பேசவில்லை. இது தொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் உள்ளபடி, இம்ரான்கான் எங்காவது பேசியிருக்கிறாரா என்று கூகுளில் தேடிப்பார்த்தோம். அப்படி ஒரு செய்தி அல்லது சிறு தகவல் கூட கிடைக்கவில்லை.

அதேநேரத்தில், அபிநந்தன் விடுதலை பற்றி, பிரதமர் மோடி பற்றி இம்ரான் கான் ஏதாவது சொல்லியிருக்கிறாரா என்று கூகுளில் தேடினோம். அப்போது, ஃபைனான்ஷியல் டைம்ஸ் இதழுக்கு அவர் அளித்த பேட்டியின் தமிழாக்கம் நமக்குக் கிடைத்தது.

அதில், இந்தியாவில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், ஏதாவது ஒரு சம்பவம் நிச்சயம் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். இந்த நேரத்தில் புல்வாமா தாக்குதல் சம்பவம் நடக்க, இதைக் கண்டிப்பாக மோடி அரசு உபயோகப்படுத்தி போர் பதற்றத்தை ஏற்படுத்தும் எனத் தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதுதொடர்பாக, ஃபைனான்ஷியல் டைம்ஸ் வெளியிட்ட வீடியோ இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

Archive Link

உண்மை இப்படி இருக்க, சம்பந்தமே இல்லாமல் காங்கிரஸ் கட்சியை சம்பந்தப்படுத்தி விஷமத்தனமாக பதிவிட்டுள்ளனர்.

இந்த பதிவை வெளியிட்ட சசி குமாரின் பின்னணியை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். அவர் எந்தக் கட்சியை சார்ந்தவராகவும் தன்னை காட்டிக்கொள்ளவில்லை. ஆனால், அவருடைய பதிவுகள் , அவர் பாரதிய ஜனதா கட்சியின் அபிமானியாக இருப்பார் என்று காட்டுகின்றன.

கடந்த மார்ச் 16ம் தேதி எங்கள் வாக்கு தாமரைக்கே என்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இது தவிர, அவர் வெளியிட்ட மற்ற எல்லா பதிவுகளும் பா.ஜ.க சார்பு நிலையிலேயே இருந்தன. பல பதிவுகள் அச்சில் ஏற்றமுடியாத வகையில் இருந்தன.

நாம் ஆய்வு மேற்கொண்ட வகையில் தெரியவந்த உண்மை விவரம்,

1. விஷமத்தனமான இந்த பதிவில் உள்ளதுபோன்ற செய்தி வேறு எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை.
2. காங்கிரஸ் கட்சி தொடர்பாக இம்ரான் கான் எங்கும் பேசவில்லை.
3. தேர்தலுக்காக பாகிஸ்தானுடனான பதற்றத்தைப் பயன்படுத்த மோடி முயல்வார் என்று நினைத்தோம் என்று மட்டுமே இம்ரான்கான் பேட்டி அளித்துள்ளார்.
4. பதிவிட்டவரின் பின்னணி சந்தேகப்படும் வகையில் உள்ளது.

மேற்கண்ட ஆதாரங்கள் அடிப்படையில் இந்த பதிவு வெறும் விஷமத்தனமான வதந்திதான் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

முடிவு

உரிய ஆதாரங்களின்படி, இம்ரான் கான் அப்படி பேசவில்லை; தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக, இத்தகைய சித்தரிக்கப்பட்ட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விஷயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Avatar

Title:அபிநந்தனை எரித்திருப்பேன் என்று சொன்னாரா பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்?

Fact Check By: Praveen Kumar 

Result: False