‘’சுங்கச்சாவடிகளில் இனி கட்டணம் இல்லை; மத்திய அரசு அதிரடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:-Users-parthiban-Desktop-toll 2.png

Facebook Link I Archived Link

Balakrishnan Chellaiah என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை ஜூலை 3, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், மாலை முரசு செய்தித்தாளை மேற்கோள் காட்டி, ‘’தமிழன் விழித்துக்கொள்ளும் நாள் எந்நாளோ? (தமிழன் என்ற பெயரில் ஒழிந்திருக்கும் அந்நியரே அதிகம்?) அதனால்தான் தமிழ்நாட்டில் காவி நிறம் கூட மிரளவைக்கிறதோ? என்னவோ? சுங்கச்சாவடிகளில் இனி கட்டணம் இல்லை. மத்திய அரசு அதிரடி! தங்கநாற்கர சாலையை அறிமுகம் செய்தது வாஜ்பாய் அரசு. விழித்திடு தமிழா… தற்போது அதை விலக்கி விடுதலை தருவது மோடி அரசு,’’ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நினைத்து ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இவர்கள் குறிப்பிடும் மாலைமுரசு செய்தித்தாளில், ‘’அந்தந்த மாநில வாகனங்களுக்கு, சுங்கச்சாவடி கட்டணம் ரத்து, மத்திய அரசு அதிரடி முடிவு,’’ என அச்சிடப்பட்டுள்ளது.

இது உண்மையா என்ற கோணத்தில் நாம் ஆய்வு மேற்கொண்டோம். அதில், கடந்த டிசம்பர் 31, 2018 அன்று இப்படியான வதந்தி திடீரென பரவ தொடங்கியதாகவும் அதில் உண்மையில்லை எனவும் தெரியவந்தது.

அதாவது, சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாகனங்களுக்கான கட்டணத்தை ரத்து செய்ய வேண்டுமென தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுக்க பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில், கடந்த 3 ஆண்டுகளாக, இத்தகைய பரிசீலனையை மத்திய அரசு யோசித்து வருகிறது. ஆனால், இதுதொடர்பாக இறுதி முடிவோ அல்லது கொள்கை ரீதியான முடிவோ எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால், தரமான சாலை சேவை வேண்டுமெனில், சுங்கக்கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும் என, மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கண்டிப்புடன் ஏற்கனவே கூறிவிட்டார். இதுதொடர்பாக ஜனவரி 3, 2018 அன்று தினமணி வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

C:-Users-parthiban-Desktop-toll 3.png

இதேபோல, டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

உண்மை இப்படியிருக்க, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளதுபோல, வெகு நாளாகவே வதந்தி பரவி வருகிறது. இதுபற்றி டிசம்பர் 31, 2018 மற்றும் ஜனவரி 1, 2019 முதலாக தீவிரமாக வதந்திகள் பரவின. அதனை உண்மை என நம்பி, மாலை முரசு செய்தி வெளியிட்டிருக்கிறது. அதையே மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இதனை தமிழகத்தில் முதலில் பரப்பிவிட்ட பெருமை பாஜக மாநில மகளிர் அணி தலைவி ஏ.ஆர்.மகாலஷ்மியை சாரும். இவர் உண்மைத்தன்மையை ஆராயாமல், இப்படி ஒரு பதிவை பகிர, அதனை பலரும் உண்மை என நம்ப தொடங்கிவிட்டனர்.

ஆனால், இது உண்மையா என சம்பந்தப்பட்ட மகாலஷ்மியை, News7 Tamil இணையதளப் பிரிவு தொலைபேசி மூலமாக விசாரித்து, பொய் என நிரூபித்துள்ளனர். அதுபற்றி ஃபேஸ்புக் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Archived Link

ஊடகம், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் உண்மையை ஆராயாமல் வதந்திகளை பகிர்வது வழக்கமாக உள்ளது. அதனை பலர் உண்மை என நம்பி பலியாவது சமூக ஊடகங்களில் தொடர்கதையாகவே உள்ளது. அதற்கு, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு ஒரு நல்ல உதாரணம். இதைவிட கொடுமை மேற்கண்ட ஃபேஸ்புக் வதந்தியை மக்களவைத் தேர்தலில், பாஜக தமிழகத்தில் தனது தேர்தல் பிரசார வாக்குறுதியில் ஒன்றாகவே பின்பற்றியதுதான். வதந்திகளை நம்புவோர் இருக்கும்வரை இத்தகைய வதந்திகளுக்கு பஞ்சமிருக்காது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியில் உள்ள தகவல் தவறானது என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு உறுதிப்படுத்தாமல் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சுங்கச்சாவடிகளில் இனி கட்டணம் இல்லை- மத்திய அரசு அதிரடி: ஃபேஸ்புக் செய்தியால் குழப்பம்

Fact Check By: Pankaj Iyer

Result: False