
‘’பாலிசி கட்ட முடியாதவர்களுக்கு இதுவரை செலுத்திய தொகையை திருப்பி தரும்படி இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏ உத்தரவிட்டுள்ளது,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம்.
தகவலின் விவரம்:

சசி செந்தமிழன் என்பவர் இந்த பதிவை, சிரிப்புமழை என்ற ஃபேஸ்புக் குழுவில் பகிர்ந்துள்ளார். இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
எல்ஐசி பாலிசி செலுத்துவோர், ஓரிரு தவணை செலுத்திவிட்டு, பின்னர் எதிர்பாராத காரணங்களால், அதனை தொடர முடியாமல் பாதியிலேயே பாலிசியை கைவிடுவது வழக்கம். இது இந்தியா முழுவதும் நடைபெறும் கதைதான். இந்நிலையில், அப்படி பாதியில் கைவிடப்படும் பாலிசிகளுக்கு, பாலிசி முதிர்வுக் காலம், நீங்கள் இதுவரை செலுத்தியுள்ள பிரிமீயம்கள் இப்படி பலவற்றின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுப்பது வழக்கமாகும். குறிப்பாக, எல்ஐசி பாலிசி எடுக்கும்போது உங்களுக்கு அதுதொடர்பான அனைத்து விதிமுறைகளும் தெளிவாக தெரிவிக்கப்படும். குறைந்தபட்சம் ஓராண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டு வரை பிரிமீயம் செலுத்தினால் மட்டுமே பலன் கிடைக்கும் என பல விதிமுறைகள் ஆரம்ப நிலையிலேயே சொல்லப்படும்.
நீங்கள் பிரிமீயம் செலுத்த தவறும்பட்சத்தில், அந்த பாலிசி கைவிடப்பட்டதாக, கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும். எனினும், உங்களின் பாலிசி பணம் செலுத்திய வரையிலும், குறைந்தபட்ச பாதிப்புடன் திரும்ப கையில் கிடைக்க 2 வழிகள் மட்டுமே உள்ளன. பிரிமீயம் தொகை முழுவதையும் செலுத்தி, பாலிசியை நிறைவு செய்ய வேண்டும். முடியாத பட்சத்தில், உங்களின் பாலிசியை சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சரண்டர் செய்து, குறிப்பிட்ட கட்டணத்தில், சரண்டர் தொகை பெற்றுக் கொண்டு, பாலிசியை விட்டு விலகலாம். இதுதான், பாலிசி செலுத்த முடியாத நிலையில் நீங்கள் செய்ய வேண்டியவை. மற்றபடி, சமூக ஊடகங்களில் பகிரப்படும் இத்தகைய வதந்திகளை நம்பாதீர்கள்.

இதுதொடர்பாக, தி எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
உண்மை இப்படியிருக்க, ஐஆர்டிஏ, எல்ஐசி உள்ளிட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளதாகவும், இதன்படி, சில பாலிசிகள் செலுத்தி பணத்தை ஏமாந்தவர்கள் உடனடியாக, உரிய பாண்ட்களை சமர்பித்து, பேங்க் வட்டியுடன் பிரிமீயம் தொகையை திரும்பப் பெறலாம் எனவும், இல்லை எனில் நீதிமன்ற வழக்கு தொடரலாம் எனவும் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் வதந்தி பரப்பியுள்ளனர்.
உண்மையில் இப்படி எந்த உத்தரவும் இதுவரை ஐஆர்டிஏ வெளியிடவில்லை. இந்த வதந்தி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் பரவி வருகிறது. இதுதொடர்பாக, பொதுமக்களே குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவின் கீழ் வெளியிட்டுள்ள கமெண்ட்களை படித்து பாருங்கள். உங்களுக்கே உண்மை புரியும்.

அதாவது, மேற்கண்ட தகவலை உண்மை என நம்பி, பொதுமக்களே, இன்சூரன்ஸ் நிறுவனங்களில் விசாரித்துள்ளனர். அதில், இது தவறான தகவல் என தெரியவந்ததாகக் கூறி, அவர்களே கமெண்ட் பகிர்ந்தும் உள்ளனர்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பாலிசி கட்ட முடியாதவர்களுக்கு பணத்தை திருப்பி தரும்படி இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏ உத்தரவு?
Fact Check By: Parthiban SResult: False
