
வாரணாசியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற காவிப்படை அணிவகுப்பு ஒன்றை நடத்தியதாக ஃபேஸ்புக்கில் சிலர் பதிவிட்டுள்ளனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
வாரணாசியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற காவிப்படை அணிவகுப்பு
இரண்டு படங்களை இணைத்துப் பதிவிட்டுள்ளனர். அதில், மாடி பஸ் போன்ற ஒன்றில் நிறைய பேர் உள்ளனர். லட்சக்கணக்கானோர் திரண்டு பேரணி செல்வது போல் உள்ளது. முழுக்க காவி பொடி தூவப்பட்டு, காவி வண்ணமாக காட்சி அளிக்கிறது. பார்க்க காவிப்படை அணிவகுப்பு போலத் தெரிகிறது. ஆனால், பஸ்ஸில், “சாம்பியன்ஸ் ஆஃப் யூரோப்” என்று உள்ளது.
யோகி ஆதித்யநாத் அணிவகுப்பு என்று கூறிவிட்டு, அவர் படத்தை காண்பிக்கவே இல்லை. இந்த பதிவை, மதவாத எதிர்ப்பு பிரச்சாரம் என்ற ஃபேஸ்புக் குழு, 2019 ஜூன் 3ம் தேதி பதிவிட்டுள்ளது. இந்த தகவல் உண்மையானது என்று நம்பி பலர் பகிர்ந்துள்ளனர். இந்த பதிவுக்கு அதிக அளவில் கமெண்ட் மற்றும் லைக்ஸ் கிடைத்துள்ளது.
உண்மை அறிவோம்:
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து மத்திய அரசு பதவியேற்று ஒரு சில நாட்களே ஆகிறது. அதற்குள்ளாக வாரணாசியில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் காவிப்படை அணிவகுப்பு நடத்தியதாக கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதிலும், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற புகைப்படத்தில் சாம்பியன்ஸ் ஆஃப் யூரோப் என்று உள்ளது. இதன் மூலம் இந்த தகவல் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது.

இதை உறுதி செய்ய, யோகி ஆதித்யநாத் வாரணாசியில் பேரணி ஏதும் நடத்தினாரா என்று கூகுளில் ஆய்வு செய்தோம். தேர்தல் சமயத்தில் நடந்த பொதுக் கூட்டம், பேரணி தொடர்பான செய்திகள் கிடைத்தன. ஆனால், வாரணாசியில் காவிப்படை அணிவகுப்பு நடைபெற்றது தொடர்பான எந்த ஒரு செய்தியும் இல்லை.

படத்தை இருந்த “சாம்பியன்ஸ் ஆஃப் யூரோப்” என்ற வார்த்தையை கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது லிவர்பூல் எஃப்.சி அணி கால்பந்தாட்ட போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது தெரிந்தது. நம்முடைய தேடலில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற புகைப்படம், லிவர்பூல் வெற்றி கொண்டாட்டம் தொடர்பான பதிவிலிருந்து எடுத்தது தெரிந்தது.

ஐரோப்பா கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் லிவர்பூல் எஃப்.சி அணி வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து அந்த அணியின் வீரர்களுக்கு மெர்சிசைட் நகரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார், 7.5 லட்சம் மக்கள் திரண்டுவந்து தங்கள் அணி வீரர்களை வரவேற்றதாக மெர்சிசைட் நகர போலீஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான செய்தியைப் படிக்க, படத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த பதிவை வெளியிட்ட மதவாத எதிர்ப்பு பிரசாரம் ஃபேஸ்புக் குழுவின் பின்னணியை ஆய்வு செய்தோம். ஐ.எஸ்.ஐ.எஸ், ஆர்.எஸ்.எஸ் என இரண்டு முகமூடி அணிந்த நபர்கள் போன்ற படம் வைக்கப்பட்டுள்ளது. சுய குறிப்பில், மதவாதம் மாய்ப்போம், தேசம் காப்போம். ஜெய் ஹிந்த் என்று உள்ளது.

பதிவுகளைப் பார்க்கையில், பெரும்பாலும் பா.ஜ.க எதிர்ப்பு நிலையிலேயே இருந்தது.
இந்த ஃபேஸ்புக் ஐடியின் நோக்கம் என்னவென்பதே குழப்பமாக உள்ளது. மதவாத எதிர்ப்பு என்று சொல்கிறார்கள். ஆனால், பா.ஜ.க ஆதரவு பதிவு போல் பொய்யான பதிவை வெளியிட்டுள்ளனர். இந்த பதிவு கிண்டலுக்கானதா அல்லது ஆதரவாக பேச முயற்சித்துள்ளார்களா என எதுவும் சொல்லாமல் மொட்டையாக போட்டுள்ளனர். வேறு ஒரு பக்கத்தில் இருந்து ஸ்கிரீன் ஷாட் எடுத்து இந்த பதிவு போடப்பட்டுள்ளது. இதன் மூலம், அந்த பக்கத்தில் நடந்த தவறை கிண்டல் செய்யும் நோக்கில் இப்படி போட்டுள்ளார்களா என்றும் தெரியவில்லை. எனவே, இந்த ஃபேஸ்புக் பக்கத்தின் நிலைப்பாடு குழப்பமாக உள்ளது.
நாம் மேற்கொண்ட ஆய்வில், சமீப காலத்தில் குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, வாரணாசியில் யோகி ஆதித்யநாத் தலைமையில் எந்த ஒரு பேரணியும் நடைபெறவில்லை.
இந்த பதிவில் பயன்படுத்தப்பட்ட படம், லிவர்பூல் கால்பந்தாட்ட அணிக்கு ரசிகர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பின்போது எடுக்கப்பட்டது என்று நிரூபிக்ப்பட்டுள்ளது.
பதிவை வெளியிட்ட குழுவின் பின்னணி சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்தது. குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற படத்திலேயே ‘சாம்பியன்ஸ் ஆஃப் யூரோப்’ என்ற வார்த்தை மிகத் தெளிவாக கொட்டை எழுத்தில் போடப்பட்டுள்ளது. இதைக் கூட கவனிக்காமல் பா.ஜ.க-வுக்கு எதிராக பதிவிட வேண்டும் என்ற நோக்கில் இந்த பதிவு வெளியிடப்பட்டது போல் உள்ளது.
நமக்குக் கிடைத்த இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது, விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
