பாதாம், பிஸ்தா சாப்பிட்டு வலுவோடு உள்ளோம் என்று செல்லூர் ராஜூ கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

அ.தி.மு.க-வினர் பாதாம், பிஸ்தா, முந்திரி சாப்பிட்டு வலுவோடு உள்ளனர் என்று செல்லூர் ராஜூ கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive

அதிமுக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்துள்ளனர். அதில், “திமுக வலு இல்லாததால் கூட்டணி தேடி அலைகிறது. அதிமுகவினர்கள் அனைவரும் பதாம்,பிஸ்தா,முந்திரிகள் சாப்பிட்டு வலுவோடு உள்ளோம்! திமுக வலு இல்லாததால் கூட்டணியை தேடி அலைகிறது – அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

உண்மை அறிவோம்:

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கக் கடுமையாக முயற்சி செய்து வருகிறது அதிமுக. ஆனால், தி.மு.க கூட்டணியை முடிவு செய்து தொகுதி ஒதுக்கீடு செய்யும் அளவுக்கு சென்றுவிட்டது. இதை கடுமையாக விமர்சிக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “திமுக வலுவாக இல்லாததால் கூட்டணி தேடி அலைகிறது” என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக புதிய தலைமுறை ஊடகத்தில் நியூஸ் கார்டு வெளியிடப்பட்டிருந்தது. அதை எடிட் செய்து வலுவோடு உள்ளோம் என்று செல்லூர் ராஜூ கூறியது போன்று நியூஸ் கார்டை சிலர் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். அதிமுகவினர் என்பதை “வினர்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர். பாதாம் என்பதை பதாம் என்று எழுத்துப்பிழையுடன் குறிப்பிட்டுள்ளனர். இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தன.

புதிய தலைமுறை வெளியிட்டிருந்த உண்மையான நியூஸ் கார்டை ஃபேஸ்பக் பக்கத்திலிருந்து எடுத்தோம். அதில், “தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்காததில் ஏதோ மறைமுக தவறு இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்ததை. அகற்றிவிட்ட பாதாம், பிஸ்தா சாப்பிட்டு வலுவாக இருக்கிறோம் என்று தவறாகச் சேர்த்துள்ளது தெரிந்தது. 

உண்மைப் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive

இது போலியானது என்பதை உறுதிசெய்துகொள்ள, இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை பொறுப்பாளருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பினோம். இது போலியான நியூஸ் கார்டு என்று அவர் நம்மிடம் தெரிவித்தார். மேலும், இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்று குறிப்பிட்டு அவர்கள் இணையதளத்தில் பதிவையும் வெளியிட்டார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பாதாம், பிஸ்தா சாப்பிட்டு கூட்டணிக்கு அதிமுக-வினர் தயாராக உள்ளனர் என்று செல்லூர் ராஜூ கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கூட்டணிக்காக அதிமுக-வினர் பாதாம், பிஸ்தா, முந்திரி சாப்பிட்டு வலுவோடு உள்ளனர் என்று செல்லூர் ராஜூ கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பாதாம், பிஸ்தா சாப்பிட்டு வலுவோடு உள்ளோம் என்று செல்லூர் ராஜூ கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False