மலப்புரம் யானை இறப்பு சம்பவத்தில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’மலப்புரத்தைச் சேர்ந்த மக்கள் கொடூர மனம் கொண்டவர்கள், யானையை வெடி வைத்துக் கொன்றுவிட்டார்கள்,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்படுகிறது. இது முஸ்லீம் மக்களை குறிவைக்கும் வெறுப்புணர்வு பிரசாரமாக உள்ளதென்று நமது வாசகர்கள் முறையிட்டதால் இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link
Facebook Claim LinkArchived Link

இதுபோல, பலரும் மலப்புரம் பகுதி மக்கள் செய்த கொடூரம், என்று கூறி தகவல் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
‘’கேரள மாநிலம், பாலக்காட்டின் அருகே உள்ள அட்டப்பாடியை ஒட்டிய அமைதிப் பள்ளத்தாக்கு வனப்பகுதியில் யானை ஒன்று, உணவு தேடிச் சென்றபோது, அன்னாசிப் பழம் ஒன்றில் பட்டாசு வைத்து பொதுமக்கள் கொடுத்துள்ளனர். அந்த பட்டாசு வெடித்து வாயில் காயமடைந்த யானை, ஈ தொல்லை காரணமாக, மலப்புரத்தில் ஓடும் வெள்ளியாற்றில் இறங்கி, வாய் மீது நீர் தெளித்து வந்துள்ளது. ஆனால், நின்ற நிலையிலேயே உயிரிழந்துவிட்டது,’’ என்று கூறி முதலில் செய்தி வெளியானது. 

Manorama Online Archived Link

சில மணிநேரத்தில், இந்த செய்தியுடன் சற்று கூடுதல் தகவல் சேர்க்கப்பட்டு, பாலக்காட்டில் உள்ள மன்னார்காடு வனப்பகுதியில் உணவு தேடிச் சென்ற யானை இவ்வாறு காயமடைந்தது என்றும், பிறகு அது மலப்புரத்தில் உள்ள வெள்ளியாற்றில் இறங்கி உயிர்விட்டது என்றும் பகிரப்பட்டது. 

மேலும் சிறிது நேரம் கடந்த பின், இந்த சம்பவம் கேரள மாநிலம், மலப்புரத்தில் நிகழ்ந்ததாகவும், அங்கே முஸ்லீம்கள் அதிகம் வசிப்பதால், இதற்கு அவர்களே காரணம் எனவும் கூறி, சிலர் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்ப தொடங்கினர்.

இதில், Tarek Fatah மற்றும் Maneka Sanjay Gandhi போன்றோர் நேரடியாகவே மதத்தை தொடர்புபடுத்தியும், ராகுல் காந்தி மற்றும் கேரள ஆளுங்கட்சியை (சிபிஎம்) குறிவைத்தும் தகவல் பகிர்ந்தனர். இதனை அப்படியே நம்பி முன்னணி ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.

NDTV Archived LinkZee News Archived Link

இதன்காரணமாக, மலப்புரம் மக்கள்தான் யானையை வெடிவைத்துக் கொன்றார்கள் எனப் பலரும் கூறி வருகின்றனர். 

உண்மையில், மலப்புரத்தில் வசிக்கும் மக்களுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. குறிப்பிட்ட யானை அமைதிப் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்ததாகும். அது, உணவு தேடி பாலக்காடு- மன்னார்காடு வனப்பகுதியில் நடமாடியுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் விளைநிலங்களை பாதுகாக்க, மின் கம்பிகளை பொருத்துவது, வெடி மருந்துகளை உபயோகிப்பது வழக்கமாக உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட யானை பாதிக்கப்பட்டு, பிறகு, மலப்புரத்தில் ஓடும் வெள்ளியாற்றில் இறங்கி உயிர்நீத்துள்ளது. 

ஆனால், பாலக்காட்டை மறந்துவிட்டு, மலப்புரத்தை மட்டும் குறிவைத்துச் சிலர் வேண்டுமென்றே தகவல் பகிர்கிறார்கள். மலப்புரத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிப்பதால், இது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. அத்துடன் மதக்கலவரம் ஏற்படும் சூழலும் நிலவுகிறது. எனவே, இதுபற்றி பலரும் உண்மை கண்டறியும் சோதனை செய்து முடிவுகளை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

Deccan ChronicleIndia.comJantakareporter Link 

இதுபற்றி கேரள வனத்துறையினர் விளக்கம் அளித்துவிட்ட நிலையில், யானை இறந்ததற்கு மலப்புரம் மக்கள் (முஸ்லீம்கள்) காரணம் என்று கூறப்படுவது ஏற்புடையதல்ல. மேலும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளார்.

எனவே, நாம் ஆய்வு செய்த தகவலில் நம்பகத்தன்மை இல்லை என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் தகவலில் உண்மைக்கு புறம்பான கூடுதல் தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மலப்புரம் யானை இறப்பு சம்பவத்தில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு!

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False