இத்தாலியில் வீடுகளில் முடங்கிய மக்கள் இளையராஜா பாடலை பாடியதாக பரவும் வதந்தி!

Coronavirus சமூக ஊடகம் | Social சமூகம் சர்வதேசம் | International

இத்தாலியில் கொரொனா பீதி காரணமாக வீடுகளில் முடங்கியிருக்கும் மக்கள் இளையராஜாவின் பாடலை பாடி பொழுது போக்குவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

45 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், தேவர் மகன் படத்தில் இஞ்சி இடுப்பழகி பாடல் பாடப்படுகிறது. வீடியோ தெளிவில்லாமல் உள்ளது. எங்கு எடுக்கப்பட்டது என்ற குறிப்பும் அதில் இல்லை.

நிலைத் தகவலில், “இத்தாலியில் குடியிருப்பு ஒன்றில் ஒட்டுமொத்த மக்களும் இளையராஜாவின் இஞ்சி இடுப்பழகி பாடலை பாடுகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Mani Kandan என்பவர் 2020 மார்ச் 16ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இத்தாலியில் கொரோனா பாதிப்பு காரணமாக இளையராஜா பாடலை பாடும் மக்கள் என்று தமிழகத்தின் பிரதான ஊடகங்கள் தொடங்கி, சமூக ஊடகம் வரை இந்த வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தினமலர், மாலைமலர் என்று முன்னணி ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டு வருவதால் இது உண்மையாக இருக்கும் என்றே பலரும் நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

dinamalar.comArchived Link 1
maalaimalar.comArchived Link 2

தெளிவற்ற வீடியோ, பின்னணி இசையோடு பாடல் பாடப்படுவது எல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்தவே, இந்த வீடியோ உண்மைதானா என்று ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, அசல் வீடியோ கிடைத்தது. இந்த வீடியோவை வெளிநாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்தது நமக்கு கிடைத்தது.

அதில், இத்தாலி மக்கள் தங்கள் வீட்டு பால்கனியில் நின்று கொண்டு கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்களை புகழ்ந்து பாடி வருகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தனர். இது தொடர்பான வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததும் தெரிந்தது. அதில் இத்தாலியின் செலேர்னோவில் மக்கள் பால்கனியில் நின்று பாட்டுப் பாடி வருகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தனர்.

wantedinrome.comArchived Link

தொடர்ந்து தேடியபோது நியூஸ் 18ல் வெளியான செய்தி கிடைத்தது. அதில், ட்வீட் ஒன்றை குறிப்பிட்டிருந்தனர். அதிலும் இதே வீடியோ இருந்தது. அதிலும், வீட்டு பால்கனியில் நின்று கொண்டு பாடல் பாடி, நடனமாடி மக்கள் மகிழ்ந்தனர் என்று குறிப்பிட்டிருந்தனர். எதிலும் இளையராஜாவின் இஞ்சி இடுப்பழகி பாடல் ஒலிக்கவில்லை.

https://twitter.com/leonardocarella/status/1238511612270690305
Archived Link 1news18.comArchived Link 2

தொடர்ந்து தேடியபோது வீடியோ ஒன்று நமக்கு கிடைத்தது. அதில், இந்த பாடல் பாடப்படுவது தெரிந்தது. ஆனால், எப்போது எடுக்கப்பட்டது என்று அதில் குறிப்பிடவில்லை. இந்த வீடியோவுக்கு சிலர் கவனமாக இருக்கும்படி கமெண்ட் செய்ய, இந்த வீடியோவை வெளியிட்டவர் இது போன ஆண்டு மார்ச் மாதம் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

Archived Link

இதன் மூலம், இத்தாலியில் மக்கள் தங்கள் வீட்டு பால்கனியில் நின்று மருத்துவர்களைப் புகழ்ந்து பாடும் வீடியோவை எடுத்து ஆடியோவை மட்டும் எடிட் செய்து வேறு ஒரு ஆடியோவை சேர்த்து வெளியிட்டுள்ளது உறுதியாகிறது. இதன் அடிப்படையில், இத்தாலியில் மக்கள் இளையராஜாவின் இஞ்சி இடுப்பழகி பாடலை பாடுவதாக பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இத்தாலியில் வீடுகளில் முடங்கிய மக்கள் இளையராஜா பாடலை பாடியதாக பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False