
காவி பாசிச கும்பலால் படுகொலை செய்யப்பட்ட ஜாமியா மாணவி என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடக்கும் படத்தையும், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியின் படத்தையும் பகிர்ந்துள்ளனர்.
நிலைத் தகவலில், ஜாமிய மாணவியை படுகொலை செய்த காவி இந்துத்துவ ஃபாசிச கும்பல்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Ghouse Basha Arcot Tmmk என்பவர் 2020 பிப்ரவரி 25 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள், ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ள சூழலில், அது பற்றிய வதந்திகள் பல சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் டிசம்பர் மாதம் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது கூட மாணவர், மாணவி யாரும் படுகொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகவில்லை. மாணவர் கொல்லப்பட்டதாக பரவிய வதந்தியை பல்கலைக் கழக நிர்வாகம் மறுத்திருந்தது.

Search Link |
எனவே, இந்த படத்தில் உள்ள மாணவி யார், இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று தேடினோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படம் 2018ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டது தெரியவந்தது. 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி வெளியான அந்த செய்தியைப் பார்த்தோம். அதில், மத்தியப் பிரதேச மாநிலம் கோட்மா என்ற இடத்தில் அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவியை ஒருவன் கத்தியால் வெட்டி படுகொலை செய்தான் என்று குறிப்பிட்டிருந்தனர். தொடர்ந்து தேடியபோது, கொலை செய்யப்பட்ட மாணவியின் பெயர் பூஜா என்று குறிப்பிட்டிருந்தனர்.

daily.bhaskar.com | Archived Link 1 |
thelallantop.com | Archived Link 2 |
இந்த மாணவி கொலை செய்யப்பட்டபோது லவ் ஜிகாத் காரணமாக கொலை நடந்ததாக பா.ஜ.க-வினர் வதந்தி பரப்பி வந்ததும், கொலைகாரன் பெயர் திலிப் சாகு என்பது தெரியவந்துள்ளதாகவும் அப்போது வெளியான செய்திகள் நமக்கு கிடைத்தன.
இதன் மூலம் படுகொலை செய்யப்பட்டது ஜாமியா மாணவி இல்லை, மத்தியப் பிரதேசத்தில் பிளஸ் 1 படித்து வந்த மாணவி என்பதும், இந்த சம்பவம் 2 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி நிகழ்ந்தது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:படுகொலை செய்யப்பட்ட ஜாமியா மாணவி என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
