
“இந்தியை எதிர்க்கும் தென்னிந்தியர்களை வெளியேற்றுவோம்” பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா கூறியதாக தந்தி டி.வி ட்வீட் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
தந்தி டி.வி வெளியிட்ட ட்வீட்டின் ஸ்கிரீன் ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “பிரேக்கிங்: குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து ஜேபி நட்டா அறிக்கை. இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே இந்தியர்கள் என்று அடுத்த திருத்தம் கொண்டு வருவோம். இந்தியை எதிர்க்கும் தென்னிந்தியர்களை வெளியேற்றுவோம்” என்று உள்ளது.
இந்த பதிவை, தமிழ் தேசியம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 டிசம்பர் 10ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடு முழுவதும் புயலை கிளப்பியுள்ளது. அதில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான். வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் நுழையும் இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவது பற்றி குறிப்பிட்டுள்ளதால் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா அறிக்கை என்று தந்தி டிவி ட்வீட் பகிரப்பட்டு வருகிறது. அதில் இந்த ட்வீட் எப்போது வெளியானது என்ற தேதி, விவரம் எதுவும் இல்லை. கர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சியில் உள்ளது. இப்படி ஆட்சியில் இருந்துகொண்டே தென்னிந்தியர்களை வெளியேற்றுவோம் என்று கட்சியின் செயல் தலைவர் கூறுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்தி மொழி மட்டும்தான் என்று பேசியிருந்தால் தமிழகத்தில் கண்டனம் எழுந்திருக்கும்.

Search Link |
தென்னிந்தியர்களுக்கு எதிராக ஜே.பி.நட்டா கருத்து கூறியுள்ளாரா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. அந்த ட்வீட்டில் அறிக்கை என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே, அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் இணையதளத்தில் ஏதாவது அறிக்கை வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். 9ம் தேதி ஜே.பி.நட்டா பெயரில் அறிக்கை வெளியாகி இருந்தது. இந்தியில் இருந்த அந்த அறிக்கையை மொழியாக்கம் செய்து பார்த்தோம். அது கர்நாடாகாவில் இடைத்தேர்தல் வெற்றி தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை என்பது தெரிந்தது.
bjo.org | Archived Link |
தந்தி டி.வி வெளியிட்ட ட்வீட்களை ஆய்வு செய்தோம். அப்போது, டிசம்பர் 10, 2019 அன்று தந்தி டி.வி வெளியிட்ட ட்வீட் ஒன்று நமக்கு கிடைத்தது. அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள ட்வீட் போலியானது என்று குறிப்பிட்டிருந்தனர்.
Archived Link |
நம்முடைய ஆய்வில்,
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்றது போன்று எந்த ஒரு அறிக்கையையும் ஜே.பி.நட்டா வெளியிட்டதாக செய்திகள் கிடைக்கவில்லை. தந்தி டி.வி இந்த ட்வீட் போலியானது என்று தெரிவித்துள்ளது.
இதன் மூலம், தந்தி டி.வி பெயரில் போலியாக ட்வீட் தயாரித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது உறுதியானது. இதன் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இந்தியை எதிர்க்கும் தென்னிந்தியர்களை வெளியேற்றுவோம் என்று கூறினாரா ஜே.பி.நட்டா?
Fact Check By: Chendur PandianResult: False
