
மத மாற்றம் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்று பாஜக முன்னெடுத்த போராட்டம் நியாயமானது என்று திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் புகைப்படத்துடன் கூடிய பாலிமர் தொலைக்காட்சி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “போராட்டம் நியாயமானதே. கட்டாய மதமாற்றத்தால் பலியான மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு பாஜக முன்னெடுத்த போராட்டம் நியாயமானதே என் முழு ஆதரவு பாஜகவின் போராட்டத்திற்கு உண்டு. – எஸ் ஜெகத்ரட்சகன் நாடாளுமன்ற உறுப்பினர் திமுக” என்று இருந்தது.
இந்த பதிவைப் புதுப்பை ராம்ஜி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 பிப்ரவரி 1ம் தேதி பதிவிட்டிருந்தார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திருக்காட்டுப்பள்ளியில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்குக் காரணம் மத மாற்றம்தான் என்று பா.ஜ.க உள்ளிட்ட இந்துத்துவ கட்சிகள், அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் மாணவி தற்கொலைக்கு நியாயம் கேட்டு பாஜக நடத்தும் போராட்டத்துக்கு தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் ஆதரவு தெரிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பா.ஜ.க தவிர்த்து எல்லா கட்சிகளும் மாணவி தற்கொலை தொடர்பாக பாஜக கூறி வரும் கருத்தை ஏற்காமல் அமைதிகாத்து வருகின்றன. இந்த நிலையில் ஆளும் தி.மு.க-வின் எம்.பி-யே பா.ஜ.க-வுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்ததாகப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். மேலும், தன்னுடைய சொத்தை காப்பாற்றிக்கொள்ள ஜெகத்ரட்சகன் இவ்வாறு கூறியதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

முதலில், பாலிமர் தொலைக்காட்சியில் இப்படி ஒரு நியூஸ் கார்டு வெளியானதா என்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்த்தோம். அதில் அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. மேலும் வழக்கமாக பாலிமர் தொலைக்காட்சி வெளியிடும் நியூஸ் கார்டில் தேதி இருக்கும். இதில் தேதி அழிக்கப்பட்டு இருந்தது. பாலிமர் பயன்படுத்தும் தமிழ் ஃபாண்டுக்கும், ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட்டும் வித்தியாசமாக இருந்தது. எனவே, பாலிமர் தொலைக்காட்சியின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.
ஜெகத்ரட்கசன் உண்மையில் இப்படி கருத்து ஏதும் தெரிவித்துள்ளாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். கூகுளில் கீவார்த்தைகள் அடிப்படையில் தேடிய போது எந்த முடிவும் நமக்கு கிடைக்கவில்லை. எனவே, அவருடைய சமூக ஊடக பக்கங்களில் ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்போது, இந்த நியூஸ் கார்டு போலியானது என்று ஜெகத்ரட்சகன் ட்வீட் வெளியிட்டிருந்தார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மதமாற்றம் காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்று பாஜக நடத்திவரும் போராட்டங்களுக்கு தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் ஆதரவு தெரிவித்தார் என்று கூறப்படும் தகவல் மற்றும் நியூஸ் கார்டு தவறானது என்று முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
கட்டாய மத மாற்றத்தால் மாணவி இறந்தார் என்று பாஜக போராட்டம் நடத்தி வருவதற்கு திமுக எம்பி ஜெகத்ரட்கசன் ஆதரவு தெரிவித்ததாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:மாணவி தற்கொலை; பாஜக நடத்தும் போராட்டம் நியாயமானது என்று ஜெகத்ரட்சகன் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
