“நீதிபதியை கொலை செய்த அமித்ஷா” – பகீர் ஃபேஸ்புக் தகவல்!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

 இஸ்ரேல் நாட்டில் பிரதமரின் மனைவிக்கே தண்டைனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் நீதிபதியை கொலை செய்த அமித்ஷாவுக்கு மத்திய உள்துறை அமைச்சராகப் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link 1 I Archived Link 2

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் மனைவி சாரா மற்றும் மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க தேசிய தலைவருமான அமித்ஷா படமும் வைக்கப்பட்டுள்ளது. சாரா படத்துக்கு அருகே, “அரசு பணத்தில் சொகுசு உணவுகள் சாப்பிட்ட பிரதமரின் மனைவி குற்றவாளியே – இஸ்ரேல் நீதிமன்றம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமித்ஷா படத்தின் அருகே, “நீதிபதியை கொலை செய்த அமித்ஷா உள்துறை அமைச்சர்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Admk Fails என்ற ஃபேஸ்புக் பக்கம் ஜூன் 17, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இது உண்மை என்று நம்பி இதை ஆயிரக் கணக்கானோர் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இஸ்ரேல் பிரதமராக இருப்பவர் பெஞ்சமின் நேதன்யாகு. இவர் 2009ம் ஆண்டு முதல் இஸ்ரேல் பிரதமராக இருந்துவருகிறார். இதற்கு முன்பு, 1996-99ல் இவர் இஸ்ரேல் பிரதமராக இருந்துள்ளார். அப்போது தொழிலதிபரிடமிருந்து பரிசுப் பொருள் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் 3 லட்சம் அமெரிக்க டாலர் அளவுக்கு பரிசுகளை பெற்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அவர் மனைவி சாரா மீது, அரசு பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சாரா குற்றவாளி என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தன்னுடைய குற்றத்தை சாரா ஒப்புக்கொண்டதாலும் குறைந்தபட்ச தண்டனை அளிக்கும்படி வேண்டுகோள்விடுத்ததாலும் அவருக்கு 2800 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தகவல் உண்மைதான். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

அமித் ஷா தொடர்பான குற்றச்சாட்டை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.

குஜராத்தில் 2005ம் ஆண்டு நடந்த போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா  2014ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நாக்பூரில் உள்ள அரசு விருந்தினர் விடுதியில் மரணம் அடைந்தார். இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று கூறப்படுகிறது. சொராப்தீன் போலி என்கவுண்டர் வழக்கின் முக்கிய குற்றவாளியே பா.ஜ.க தலைவரும் தற்போது மத்திய உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷாதான். லோயா மரணத்துக்குப் பிறகு புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி, போலி என்கவுண்டர் வழக்கில் இருந்து அமித்ஷாவை விடுதலை செய்தார்.

லோயா மரணம் அடைந்து மூன்று ஆண்டுகள் ஆன பிறகு, அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று லோயாவின் சகோதரி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, லோயா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதி லோயாவின் சகோதரி ஒரு மருத்துவர். அவர் அளித்திருந்த பேட்டி, சந்தேகங்கள் தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்தநிலையில், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அப்போது தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா அமர்வுக்கு மாற்றப்பட்டது. அப்போதே இது தொடர்பாக சர்ச்சையும் எழுந்தது. குறித்து வெளியான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, நீதிபதி லோயா மரணம் இயற்கையானதுதான். அதனால் சிறப்பு விசாரணை தேவையில்லை என்று தீர்ப்பளித்தது. அது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நீதிபதி லோயா மரணம் தொடர்பாக அமித் ஷா மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அமித் ஷாவின் வழக்கை விசாரித்த நீதிபதி என்பதால் குற்றச்சாட்டு மட்டுமே எழுந்தது. 

கேரவன் என்ற பத்திரிக்கைக்கு நீதிபதி லோயாவின் மகன் அனூஜ் லோயா இரண்டு கடிதங்களை எழுதியிருக்கிறார். அதில் முதலாவது கடிதத்தில் தன்னுடைய தந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று தெரிவித்திருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து பிரச்னைகள் எழவே, தன்னுடைய தந்தையின் மரணத்தில் சந்தேகம் இல்லை என்று இன்னொரு கடிதம் எழுதியிருக்கிறார். இந்த இரண்டையும் கேரவன் பத்திரிகை வெளியிட்டுள்ளது. மேலும், பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அவற்றைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நீதிபதி லோயா மரணம் தொடர்பாக மேல் விசாரணை நடத்த வேண்டும் என்ற பல தரப்பினரின் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுவிட்டன. நீதிபதி லோயா மரணம் இயற்கையானது என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது. நீதிபதி லோயா கொலையில் அமித் ஷா நேரடியாக தொடர்புடையவர் என்று நிரூபிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதன் அடிப்படையில் இந்த கருத்து தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

நாம் மேற்கொண்ட ஆய்வில்,

இஸ்ரேல் பிரதமரின் மனைவி சாரா தொடர்பான தகவல் உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா தொடர்பான தகவல் வெறும் சந்தேகம் மட்டுமே… அவர் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

மேலும், நீதிபதி லோயா மரணம் இயற்கையானதுதான் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பாதி உண்மை, பாதி பொய் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையும் பொய்யும் கலந்து வெளியானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“நீதிபதியை கொலை செய்த அமித்ஷா” – பகீர் ஃபேஸ்புக் தகவல்!

Fact Check By: Praveen Kumar 

Result: Mixture